Tuesday 26 September 2017

74% இந்திய இளைஞர்கள் புறக்கணிப்பு..!


வேலை வாய்ப்புக்களில் 74% இந்திய இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். ஆம்,  இப்படித்தான் மேர்டேகா ஆய்வு மையம் தனது கருத்துக் கணிப்பில் கூறுகிறது. நமது நாட்டில் நிறுவனங்கள் ஆள் பார்த்து, இனம் பார்த்து செயல்படுகின்றன என்பதற்கு இது சான்று.

ஒரு பக்கம் அரசாங்கத்துறைகளில் நாம் புறக்கணிக்கப் படுகிறோம். அங்கும் அரசாங்கம் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இன்னொரு பக்கம் தனியார் துறை. இங்கும் நாம் புறக்கணிக்கப் படுகிறோம். இது தான் இன்றைய இந்திய இளைஞர்களின் நிலை!

முன்பு ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்றார்கள். அந்தக் கதை இன்னும் தொடர்கிறது. ஆனால் அரசாங்கம் ஆங்கிலப் பயிற்சிகளுக்காக நிறையவே செலவு செய்கிறது. எப்படி? யாருக்கு  ஆங்கிலம் பேச வரவில்லை  என்கிறோமோ அவர்களை வைத்தே ஆங்கிலம் பேச வைக்கிறார்கள்! ஆக, இங்கும் ஒரு அரசியல் நாடகம்! ஆனாலும் உயர்கல்வி கற்கும் நமது இந்திய மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது ஒன்று ஒதுக்கிவிட முடியாது. 100% விழுக்காடு என்று சொல்ல முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் 70% அவர்களால் பேச முடியும். அது போதுமே! ஜப்பான், கொரியா, சீனா போன்ற நிறுவனங்கள்  அதைவிட பெரிதாக அவர்கள் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. 

நமது இளைஞர்களுக்குத் திறன் உண்டு. ஆங்கிலம் பேசும் திறமை உண்டு. சிறந்த கல்வியும் அவர்களிடம் உண்டு. 

இப்போது நாம் என்ன சொல்ல வருகிறோம்? ஆம், மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் முன்மொழிவது போல நாமும் அதே கருத்தை வழிமொழிகிறோம். இன அடிப்படையில் வேலை வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகின்றன வென்றால்  இனி நாம் இனவிகிதாச்சார (கோட்டா) முறையை அமலக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே சரியான வழியாய் இருக்கும். வேறு வழியில்லை! அரசாங்கம் வெறுமனே பார்த்து ரசித்துக் கொண்டிருக்க முடியாது. இந்தியர்களை அரசாங்கத்தில் பிரதிநிதிப்பவர்கள் சும்மா இருக்கலாம். அது அவர்களுக்குப் பதவியைக் கொண்டு வரும். ஆனால் பொது மக்கள் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மலேசியாவின் மூன்றாவது பெரிய இனம் வேலை வாய்ப்பு இல்லாமல் சுற்றித் திரிவதும், தவறானப் பாதைகளில் செல்லுவதும் அரசாங்கத்திற்கு நல்லதல்ல.

இதுவும் நாட்டிற்கு முக்கிய பிரச்சனை என்பதால், அவசரமான பிரச்சனையும் என்பதால், அரசாங்கம் தலையிட்டு ஒரு முடிவு காண வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். வாழ்க தமிழினம்! வாழ்க மலேசியா!

No comments:

Post a Comment