Wednesday, 28 February 2018
கோசாவின் பெயரில் ஒரு தமிழ்ப்பள்ளி
தமிழவேள் கோ.சாரங்கபாணியின் பெயரில் ஒரு தமிழ்ப்பள்ளி. அதுவும் புதிய 524-வது பள்ளியாக உருவெடுத்திருக்கும் இந்தப் புதிய பள்ளிக்கு "தமிழவேள் கோ.சாரங்கபாணி" பெயர் சூட்டப்பட்டிருப்பது நமக்குப் பெருமையே.
அது ஏற்கனவே ஜாலான் பாயா பெசார் என்ற தற்காலிகப் பெயரை மாற்றி இப்போது இன்று (1.3.2018) அன்று காலை 10,00 மணிக்கு புதிய பெயருடன் திறப்பு விழா காண்பதாகப் பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன. அதன் பெயர் மாற்றத்திற்கானக் கல்வி அமைச்சின் உறுதிக் கடிதம் அந்தத் திறப்பு விழாவின் போது துணைக்கல்வி அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் வழுங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழவேள் கோ.சாரங்கபாணி என்னும் பெயர் நமக்குப் புதிதல்ல. தமிழர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தவர், தமிழ் மொழிக்காகப் போராடியவர். தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் முன்னோடி. மாணவர் மணிமன்றத்தின் மூலம் பல தமிழ் எழுத்தாளர்களை உருவாக்கியவர். தமிழர் திருநாளை தமிழரின் ஒற்றுமைத் திருநாளாக உருவாகப் பாடுபட்டவர். இன்னும் பல.
அடியேனுக்கும் தமிழ் முரசு மாணவர் மணி மன்றத்துக்கும் ஒரு சிறிய, மிகச் சிறிய தொடர்பு உண்டு. நான் எழுதிய முதல் கட்டுரை மாணவர் மணி மன்ற இதழில் வெளி வந்திருக்கிறது! அதுவே எனக்கு ஆச்சரியம் தரும் விஷயம் தான். எனது பள்ளி ஆங்கிலப் பாடப் புத்தகலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டக் கட்டுரை அது. அது என்ன கட்டுரை என்று எனக்குத் தெளிவில்லை. அநேகமாக ஏதோ ஒரு விஞ்ஞானியைப் பற்றிய ஒரு கட்டுரை என நினைக்கிறேன். எனக்கு ஆச்சரியம் தந்தது அது ஒரு பள்ளிப் பாடப்புத்தகலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட கட்டுரை என்று தெரிந்தும் அதனைப் பிரசுரித்து உற்சாகப் படுத்தினார்களே அதுவே எனக்குப் பெரிய மகிழ்ச்சி! ஆனால் அதன் பிறகு எந்தக் கட்டுரையும் நான் மாணவர் மணி மன்றத்தில் எழுதவில்லை. காரணம் என்ன எழுதுவது என்று தெரியவில்லை! அத்தோடு விட்டுவிட்டேனே தவிர மாணவர் மணி மன்ற இதழையோ, தமிழ் முரசு நாள் இதழையோ படிக்கத் தவறவில்லை!
இப்போது தமிழவேள் கோ.சா. அவர்களின் பெயர் ஒரு தமிழ்ப்பள்ளிக்குச் சூட்டுகிறார்கள் என்று செய்திகள் வந்த போது எனது கடந்த கால நினைவுகள் அவருடைய பத்திரிக்கை, அவருடைய சேவைகள் எல்லாம் ஞபாகத்திற்கு வருவதில் வியப்பில்லை. இந்த மலேசிய மண்ணில் அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்! தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை!
ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளி!
சமீபத்தில் பண்டார் செண்டாயான் அன்று அழைக்கப்படும் - சிரம்பான் மூன்று என்றும் சொல்லுவார்கள் - சிரம்பான் நகர் அருகே ஒரு புதியத் தமிழ்ப்பள்ளியை நமது பிரதமர் திறந்து வைத்திருக்கிறார்.
நல்ல நவீன வசதிகளுடன், உலகத் தரத்தில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளி என்று கூறப்படுகிறது. நல்லதொரு தமிழ்ப்பள்ளியை அமைத்துக் கொடுத்ததற்காக அரசாங்கத்தைப் பாராட்டுவோம், வாழ்த்துவோம்.
செண்டயான் என்கின்ற போது இயற்கையாகவே என்னுடைய பழைய ஞாபங்கள் கிளர்ந்து எழுகின்றன. காரணம் எனது தமிழ்க்கல்வி என்பது செண்டாயான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பித்தது. நான் படித்து போது அங்கு மூன்று வகுப்புக்களே இருந்தன. முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு - அதற்கு மேல் படிக்க வேறொரு தோட்டத்திற்குச் செல்ல வேண்டும். அந்த மூன்று வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர். அவர் பெயர் திரு அனுக்கிரகம். அவர் தான் என் முதலாசிரியர், இப்போது அவர் இல்லை. தமிழ் நாட்டில் இருந்து வந்தவர், மிகவும் அன்பான மனிதர். அவரிடம் தான் எனது மூன்றாம் வகுப்பு வரை முடித்தேன். இப்போது, நான் படித்த அந்தத் தமிழ்ப்பள்ளி, தமிழ்ப்பள்ளியாக இல்லை. சீனப்பள்ளியாக மாற்றம் கண்டு விட்டது! ஏதோ புண்ணியவானான ஒரு தலைமையாசிரியர் அதனைச் சீனர்களுக்குத் தானம் செய்துவிட்டார்.
இப்போது அந்த செண்டயானைச் சுற்றி பல செண்டயான்கள் இருக்கின்றன. இப்போது கடைசியாக பண்டார் செண்டயானும் அதில் அடங்கும்.
இப்போது பிரதமர் திறந்து வைத்திருக்கும் ஸ்ரீ செண்டயான் தமிழ்ப்பள்ளிக்கும் நான் படித்த செண்டயான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. இந்தப் பள்ளி முன்பு நெகிரிசெம்பிலான், லிங்கி அருகே அமைந்துள்ள பெர்த்தாம் தோட்டத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகும். தோட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற்றத்திற்குப் பின் மாணவர் பாற்றாக்குறையிலிருந்து இந்தப் பள்ளியும் தப்பவில்லை. அந்தப் பள்ளியைத்தான் சென்ற ஆண்டு பண்டார் செண்டயானுக்கு இந்தப் பள்ளி மாற்றப்பட்டது. எனது ஞாபக சக்தி சரியாக இருந்தால் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ கு.பத்மனாபன் படித்த தமிழ்ப்பள்ளி இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். என்னால் உறுதிப் படுத்த முடியவில்லை.
எது எப்படி இருப்பினும் நல்லதொரு தமிழ்ப்பள்ளியை அதுவும் உலகத் தரத்திற்கு ஏற்ப அமைந்த ஒரு தமிழ்ப்பள்ளியைக் கட்டிக்கொடுத்த அரசாங்கத்திற்கும் நமது பிரதமருக்கும், நமது நெகிரி செம்பிலான் மாநில முதல்வருக்கும் நமது வாழ்த்துகள்!
பண்டார் பாரு செண்டயான் சுற்றுவட்டார இந்தியப் பெருமக்கள் வருங்காலங்களில் இந்தப் பள்ளிக்கு வற்றாத ஆதரவு தருவர் என எதிர் பார்க்கலாம்.
நன்றி!
Monday, 26 February 2018
சிறு தொழில்கள் அன்னியரிடமா?!
சிறு தொழிகள் அன்னியத் தொழிலாளர்களிடம் பறி போகிறது என்பது நமக்குப் புதிதல்ல. அதனை நாம் நீண்ட நாட்களாகவே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பார்த்துக் கொண்டு தான் இருக்க முடியும். நமக்குள்ள அதிகாரம் அவ்வளவு தான். அதிகாரம் உள்ளவர்களும் நம்மோடு சேர்ந்து கொண்டு பார்ப்பது தான் நமக்கு வியப்பை அளிக்கிறது. என்ன செய்வது? அன்னியத் தொழிலாளர்களும் யாருக்கு எவ்வளவு கொடுத்தால் கண்ணை மூடிக் கொள்வார்கள் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்! நமக்குத் தான் தெரியவில்லை!
ஆனாலும் ஒன்றை நான் கண்டு வியக்கிறேன். கையில் காசில்லாமல் அவர்கள் நமது நாட்டுக்கு வருகிறார்கள். வருபவர்கள் பெரும்பாலும் சுற்றுப் பயணிகளாகத்தான் வருகிறார்கள். சுற்றுப் பயணம் அவர்கள் நோக்கமல்ல. இங்கேயே தங்கவிட வேண்டும் என்பது தான் பெரும்பாலானோரின் நோக்கமாக இருக்கிறது. அது தவறு என்று சொல்லுவதற்கு இங்கு யாருக்கும் தகுதி இல்லாமல் போய்விட்டது! பணம் கொடுத்தால் பத்தும் கிடைக்கும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்!
அப்படி என்ன தான் நடக்கிறது? சிறு சிறு தொழிகளில் எல்லாம் அவர்கள் வசமாகிக் கொண்டிருக்கிறது. தீபாவளி சந்தைகளில் கூட அவர்கள் ஆதிக்கம் ஓங்கி இருக்கிறது. அதுவும் குறிப்பாகச் சொல்லப் போனால் சிறு தொழிகள் செய்யும் இந்தியர்கள் பெரும் பாதிப்பை அடைகின்றனர். இந்தியர்கள் சிறு தொழிகள் செய்வதை நகராண்மைகழகமோ, ஊராட்சிதுறையோ விரும்புவதில்லை. காரணம் அங்குப் பணிபுரியும் ஊழியர்களைப் பொறுத்தவரை ஊதியத்திற்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அது அதிகமாக அன்னியத் தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கிறது.
ஐயோ! பறி போகிறதே! என்று ஒப்பாரி வைக்கிறோமே, அதற்கு யார் காரணம்? அவர்களின் வாடிக்கையாளர்கள் யார்? இந்தியர்களின் பொருட்களை அவர்கள் விற்பனை செய்கிறார்கள் என்றால் நாம் தானே அவர்களின் வாடிக்கையாளர்கள்! நாம் அவர்களிடம் பொருட்களை வாங்காமல் இருந்தால் அவர்களுக்கு அந்தத் துணிச்சல் வருமா? ஏன், சீனர்களிடம் அவர்களின் பொருட்களை விற்க முடியுமா? சீனர்கள் அவர்களைத் திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள்! நாம் தானே அவர்களின் வாடிக்கையாளர்கள்!
ஒன்றை மனதில் வையுங்கள். நமது பொருளாதாரத்தை நசுக்க நமது பொருளாதாரத்தையே அவர்கள் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! அவர்களின் வாடிக்கையாளர்களும் நாம் தான்! ஆனால் அவர்களின் மன உறுதியைப் பாராட்டத்தான் வேண்டும்.
வெளி நாடுகளிலிருந்து இங்கு வந்து துணிச்சலோடு தங்களின் முன்னேற்றத்திற்காக கையூட்டுக் கொடுத்தாவது காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே, அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.
அவர்களிடம் இருக்கும் அந்தத் துணிச்சல் நமக்கு இருந்தால் எதுவும் நம்மிடமிருந்து பறி போகாது! சிறு தொழில் செய்யும் நமது மக்கள் அனைவருக்கும் வேண்டியது துணிச்சல் மட்டும் தான்! வாழ்க! வளருக!
Sunday, 25 February 2018
70-வயதுக்கு மேல் இந்தியர்களுக்கு அரசாங்க வேலை!
நமது அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. அநேக இந்தியர்கள் இத்திட்டத்தில் கீழ் பயன் பெறுவார்கள் என நம்பலாம்! இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் ம.இ.கா.வும் இதற்குச் சம்மதம் தெரிவித்து விட்டதாகவே தோன்றுகிறது.
தங்களது இருபதாவது, முப்பதாவது வயதில் குடியுரிமைக்கு மனு செய்தவர்கள் இனி தங்களது எழுபதாவது வயதில் குடியுரிமை பெறுவர் என நிச்சயமாக நாம் நம்பலாம்!
சமீபத்தில் ஒரு பெண்மணிக்கு அவரது எழுபதாவது வயதில் தான் குடியுரிமை கிடைத்தது. இனி தான் அவர் தனது வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்! ஏதாவது அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்து இனி மிச்சம் மீதியுள்ள இருபது முப்பது ஆண்டுகளைத் தனது குடும்பத்திற்காக உழைக்க வேண்டும்.
சமயங்களில் நமது குடியுரிமைகள் தாமதமாவதற்குக் காரணங்கள் என்ன? வேலையாட்கள் பற்றாக்குறை தான் மிக முக்கியக் காரணம். நாட்டில் படித்தவர்கள் குறைவு; படித்தும் முட்டாள்களாக இருப்பவர்கள் அதிகம். அது அவர்கள் குற்றமல்ல. தலைவன் வழி தான் மக்கள்!
சமீபத்தில் 'நாடற்ற' நண்பர் ஒருவர் வைத்த குற்றச்சாட்டு. "அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்கின்ற ஒர் பெண்மணி செய்த தவற்றினால் நான் நாடற்றவனாகி விட்டேன்! நானும் எத்தனையோ முறை விண்ணப்பித்தும் குடியுரிமை கிடைக்கவில்லை! அவர்கள் என்ன கேட்டார்களோ அத்தனையும் கொடுத்தாயிற்று. இனி கொடுப்பதற்கு ஒன்றுமில்லை! அவர்கள் தான் கொடுக்க வேண்டும். குடியுரிமை இல்லை என்பதால் திருமணம் ஆகவில்லை. குறைந்த சம்பளத்தில் காலத்தைக் கடத்துகிறேன். தேர்தல் வருகிறது என்பதால் மீண்டும் ஒரு முயற்சி செய்கிறேன்!"
இப்படித்தான் பலர் உள்ளனர். இவர்களைப் போன்றவர்கள் எல்லாம் 70 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்ய வேண்டும்! பிள்ளைக்குட்டிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கம் வேலை கொடுக்க வேண்டும்.
என்ன செய்வது? சீனர்களைப் போல சரியானத் தலைவர்களை நாம் கொண்டிராததால் தறுதலைகளை நாம் தலைவர்களாக வைத்திருக்கிறோம்!
இனி நாம் 70 வயதுக்கு மேல் வாழ்க்கையைத் தொடங்குவோம்!
ஒரு சோகம், ஒரு மகிழ்ச்சி
இன்று காலையிலேயே வாட்சப் செய்தி ஒன்றினால் மிகவும் பரபரப்பு! எனக்கும் வாட்சப்புக்கும் வெகு தூரம்! அது எனக்குத் தேவை இல்லாத ஒன்று. என்னுடனிருந்தவர்கள் அனைவரிடமும் அந்த வசதிகள் உண்டு.
என்னுடன் இருந்தவர்கள் நடிகை ஸ்ரீதேவி இறந்து போனார் என்று சொன்னார்கள். அனைவருக்குமே அதிர்ச்சி தான். நான் இதற்கெல்லாம் அதிர்ச்சி அடைவதில்லை. இறப்பு எல்லாருக்குமே வருவது தானே? அதிசயம் ஒன்றுமில்லை. நடிகை என்றால் மட்டும் என்ன? எமதர்மன் தனது கடமையில் இருந்து தவறிவிடுவாரா? அவரது வேலையை அவர் சரியாகச் செய்கிறார்!
இருந்தாலும் நன்றாக நடிக்கக் கூடிய நடிகை. ஏதோ, ஒரு சில, அவர் நடித்த படங்களைப் பார்த்திருக்கிறேன். அப்படி என்ன தான் வயது அவருக்கு? வயது 54 என்கிறார்கள். அப்படி ஒன்றும் 'போக' வேண்டிய வயதில்லை! இளம் வயது தான். ஆனால் அவரிடம் ஒரு குறை உண்டு. தனது உடம்பை கட்டாகவும், இளமையாகவும் வைத்துக் கொள்ள ஏகப்பட்ட மாத்திரைகளை விழுங்குபவர் என்று அவரைப் பற்றி சொல்லுவதுண்டு. அதில் உண்மை இருக்கலாம். மாத்திரைகளே அவரை நிரந்திர நித்திரைக்குக் கொண்டு சென்று விட்டது. வருந்துகிறோம்.
அடுத்து ஒரு மணி நேரத்திற்குப் பின் இன்னொரு நண்பர் கண்ணில் அகப்பட்டார
"என்ன தேர்தல் வரப்போவது போல இருக்கு.....!" என்று ஆரம்பித்தார். எப்படி? "இப்பத்தான் செய்தியில் சொன்னான். BRIM தொகையை 1500 லிருந்து 2000 க்கு ஏற்றி விட்டார்களாம்!" அப்படியா, நல்ல செய்தி தான். 'பிரிம்' உதவித் தொகை வாங்குபவர்களுக்கு அது நல்ல செய்தி தான். இப்போது எவ்வளவு உதவித் தொகை கொடுக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஏதோ வாங்குபவர்களாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
ஆனாலும் இன்னொரு பக்கம் பார்த்தால் அரசாங்கத்திடம் பணம் இல்லை என்கிறார்கள். அப்புறம் எப்படி உதவித் தொகைக் கொடுக்க முடிகிறது? புரியவில்லை! உதவிகள் எல்லாம் தேர்தலை நோக்கிச் செலுத்தப்படுகிறது! என்ன செய்ய? இது தான் அரசியல்! நாம் வாங்குகின்ற புழுங்கல் அரிசி ஒரு கிலோ ரி.ம. 3.60 காசுக்கு வாங்குகிறோம் அல்லது இன்னும் குறைவான விலைக்கு விற்கக் கூடிய அரிசிகளை வாங்குகிறோம். அதே சமயத்தில் ஒரு கிலோ ரி.ம.70.00 வெள்ளிக்கு வாங்கும் சக்தி படைத்தவர்களும் நாட்டில் இருக்கிறார்கள்.! இந்த ஏற்றத் தாழ்வுகளை எப்படிக் களைவது? அரசியல்வாதிகள் மனம் வைத்தாலொழிய எதுவும் நடக்காது!
பிரிம் தொகைக் கிடைப்பவர்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியில் நாமும் பங்கு பெறுவோம்!
Saturday, 24 February 2018
கேள்வி - பதில் (73)
கேள்வி
கமல் சொன்னபடி புதிய கட்சி தொடங்கி விட்டாரே!
பதில்
ஆமாம். அவருக்கு நமது வாழ்த்துகள்! சரியோ, தவறோ சொன்னார் செய்து விட்டார்! தொடங்குவதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்கலாம், விவாதம் செய்யலாம்! ஒரு முடிவை எடுத்து விட்டால் அதன் பின் யோசிக்க ஒன்றுமில்லை! அது தவறான முடிவாகக் கூட இருக்கலாம். நிறைவேற முடியாத முடிவாக இருக்கலாம். ஆனால் அவர் மனதிலே ஏதோ ஒரு நம்பிக்கை. ஆரம்பித்து விட்டார்!
கமல் தனது கட்சியின் பெயரை "மக்கள் நீதி மய்யம்" என்று வைத்திருக்கிறார். அந்தப் பெயருக்காகவே நான் அவரை வாழ்த்துகிறேன். காரணம் திராவிடம் என்னும் பெயரை நான் ஆதரிக்கவில்லை. அவர் அதிகமாக திராவிடம் பற்றிப் பேசியவர். அதனால் அவர் திராவிடம் என்னும் சொல்லை தனது கட்சிக்குப் பயன்படுத்துவார் என பலர் எதிர்பார்த்தனர். தமிழக மேடை விவாதத்தில் ஒருவர் "கமல் தனது கட்சிக்குச் திராவிடம் என்னும் சொல்லைப் பயன்படுத்துவார் என்று நினைத்தேன் அவர் பயன்படுத்தாது ஏமாற்றம் அளிக்கிறது!" எனக் கூறினார்! இது தமிழர் அல்லதாரின் மன நிலை! இனி யார் கட்சி ஆரம்பித்தாலும் திராவிடம் என்னும் சொல் தவிர்க்கப்படும் என நான் நம்புகிறேன்.
கமல் தனது கட்சியின் கொள்கைகளை இன்னும் வெளியாக்கவில்லை என்பதாக ஒரு குற்றச்சாட்டு. உண்டு. நேரடியாகவே களத்தில் இறங்குவேன் என்கிறார். பெரிய பெரிய கொள்கைகளை வைத்துக் கொண்டு கடைசியில் எதையுமே நிறைவேற்ற இயலாமல் போன கட்சிகள் தான் அனைத்தும்! நேரடியாகவே களத்தில் இறங்குவேன் என்கிறார் கமல். அவர் சொல்லுவது நமக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் தான்,. செயல் தான் முக்கியம் என்று அவர் முழங்கினாலும் அதனை எப்படி செய்து காட்டப் போகிறார் என்று நாமும் தலைமுடியை பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது! எதைச் செய்ய வேண்டுமானாலும் அரசாங்கத்தின் உதவி இல்லாமல் அவரால் எதனையும் செய்ய முடியாது என்பது தான் நிதர்சனம்!
அவர் கட்சி தொடங்கிய அன்று கலாம் படித்த பள்ளிக்குச் செல்ல அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பது ஒன்றே போதும் அவருக்கு அரசாங்கத்தின் எந்த உதவியும் கிடைக்காது என்று. இந்த நிலையில் அவர் எதனைச் சாதிக்கப் போகிறார்? அவர் அரசாங்கத்தை அமைத்தால் மட்டுமே அவர் நினைப்பது செய்ய முடியும். இப்போதைக்கு அது சாத்தியம் இல்லை. தேர்தல் வரும் வரை - அந்த இடைப்பட்டக் காலத்தில் - எதனைச் சாதிக்கப் போகிறார்? அவருடைய செயல்திட்டங்கள் எப்படி இருக்கப் போகிறது என்பது தெரிய பொறுத்திருக்கத் தான் வேண்டும்.
ஒரு கட்சியை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஓர் ஆட்சியை அமைக்க எல்லாராலும் முடியாது. அது கமலால் முடியும் என்று சொல்லவும் முடியவில்லை.
ஒன்று மட்டும் உறுதி கமல் தன்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கிறார். அதனை மக்கள் மன்னித்து விடுவார்கள். அவர் பிராமணர் என்று வரும் போது தான் தமிழக மக்கள் அவரை சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றனர். இவர் நம்பக்கூடியவரா என்று ஒரு சந்தேகம் உண்டு. நம்பக் கூடியவர் என்பதை அவர் தான் மெய்ப்பிக்க வேண்டும்!
Friday, 23 February 2018
மிகக் கேவலமான அரசியல்!
இதோ ஓர் அரசியல்வாதி தெரிந்து பேசுகிறாரா அல்லது தெரியாமல் பேசுகிறாரா என்பது நமக்குப் புரியவில்லை!
நெகிழிப்பைகளுக்கு (பிளாஸ்டிக் பைகள்) ஏன் கடைக்காரர்கள் 20 காசுகள் கட்டணம் விதிக்கிறார்கள் என்பது கூட தெரியாத (அல்லது தெரிந்து தானோ?) அரசியல்வாதிகள் நம்மிடையே இருப்பது கண்டு நமக்கே வெட்கமாயிருக்கிறது!
இந்த நெகிழிப்பைகளினால் சுற்றுச் சூழல் எத்தகைய பாதிப்புக்கள் அடைகின்றன என்று உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் "நாங்கள் பதவிக்கு வந்தால் அதனை நாங்கள் இலவசமாக்குவோம்!" என்று கூறுவது பைத்தியங்களின் பைத்தியக்காரத்தனம்!
நெகிழிப்பைகளினால் அடைகின்ற பாதிப்பு என்பது சாதாரணமான விஷயமா என்ன?சென்று ஆண்டு ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. ஒரு திமிங்கலம் கடற்கரை ஓரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. காரணம் தெரியவில்லை. அதனை வெட்டிப் பார்த்ததில் அதன் வயிற்றில் முற்றிலுமாக நெகிழிப்பைகள்! ஆக, திமிங்கலங்கள் இந்தப் பைகளை ஏதோ உணவு என்று நினைத்து தின்கின்றன என்று புரிகிறது. திமிங்கலங்கள் மட்டும் அல்ல கடல் வாழ் உயிரினங்கள் அனைத்துக்கும் இந்த பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். அவைகள் உணவாக நினைத்து இந்த நெகிழிப்பைகளைத் தின்கின்றன. எப்படிச் சுற்றிச் சுற்றி வந்தாலும் கடைசியாக அது மனிதனிடம் தான் வந்து சேரும்!
நெகிழிப்பைகள் மட்கிப் போவதில்லை. அவைகள் மட்கிப் போவதற்கு பல நூறு ஆண்டுகள், ஏன்? 1000 ஆண்டுகள் கூடப் பிடிக்கும் என்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நமது சுற்றுச்சூழல் மிகப்பெரியளவு பாதிப்படைகின்றன. இந்தப் பைகள் மட்கிப் போகாவிட்டால் நாம் வாழும் இந்த மண் தனது சக்தியை இழந்து விடும். உயிரை இழந்து வெறும் சக்கையாகி விடும். மண், நீரை உரிஞ்சும் சக்தியை இழந்து விடும்.
இன்றைய நிலையில் கடைக்காரர்கள் நெகிழிப்பைகளுக்கு 20 காசு கட்டணம் விதிக்கிறார்கள் என்றால் அது பணம் சம்பாதிக்க அல்ல. வாடிக்கையாளர்கள் இந்தப் பைகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் காரணம். அரசியல்வாதிகள் எல்லாவாற்றிலும் அரசியலைப் பார்க்காமல் மக்களின் நலனைப் பார்க்க வேண்டும்.
இது போன்ற கேவலமான அரசியல் நமக்கு வேண்டாம்!
Saturday, 17 February 2018
தாய் மொழி தினத்திற்கு ஸ்டாலினா?
ஒரு சில விஷயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை! தாய் மொழி தினத்திற்கும் , தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம்?
தமிழ் நாட்டில் தமிழை மட்டும் அல்ல, தமிழர் கலாச்சாரத்தையும் சேர்த்து அழித்ததில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கு பெரும் பங்கு உண்டு. இன்று தமிழன் தனது சொந்த நிலத்திலேயே யார் யாருக்கோ அடிமையாக்கப்பட்டு விட்டான். இப்போது ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்துகிறான். அனைத்துக்கு மூலக் காரணம் கலைஞர் தான். அவரின் நீட்சி தான் ஜெயலலிதா! யார் மறுப்பார்?
இன்று தமிழ் நாட்டில் தமிழன் நிலை என்ன? சாராயம் தான் தமிழனின் முதல் பொழுது போக்கு! சாராய விற்பனையில்லாமல் தமிழகத்திற்கு வேறு வருமானம் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது! மதுபானக்கடைகள் எங்கெல்லாம் நடத்தப்படுகிறது? பள்ளிகள் அருகே! கல்லூரிகள் அருகே! கோவில்கள் அருகே! மக்கள் கூடுகின்ற இடங்களின் அருகே! சாராயம் குடிக்கா விட்டால் தமிழ் நாட்டை ஆள வழியில்லை என்று யார் கூறுகிறார்? கலைஞர் கருணாநிதி. சரி, அந்த சாராய ஆலைகளை நடத்துபவர்கள் யார்? கருணாநிதியின் குடும்பம்! இன்னொரு பக்கம் ஜெயலலிதா, சசிகலா கூட்டம்!
சாரயாத்தின் மூலம் தமிழர்களைத் தொடர்ந்து அழித்துக் கொண்டிருப்பவர் கருணாநிதி. தமிழ் மண்ணில் நமது சொந்தத் தாய் மொழியானத் தமிழை கேவலமான ஒரு சூழலுக்கு இட்டுச் சென்றவர் யார்? கருணாநிதி தானே! தமிழைப் படிப்பது கேவலம் என்றும் ஆங்கிலம் படிப்பது கௌரவம் என்றும் ஒரு கேவலத்தை உருவாக்கியவர் யார்? கருணாநிதி தானே?
தலை நிமிர்ந்து வாழ வேண்டிய தமிழன் தனது சொந்த மண்ணில் இன்று தலைக் குப்புற கவிழ்ந்து கிடக்கிறான். கர்நாடகாவில் தமிழனை அடிக்கிறான். ஆந்திராவில் தமிழனை அடிக்கிறான். கேரளாவில் தமிழனை அடிக்கிறான். அடிக்கிற அத்தனை இனத்தவனையும் தமிழ் நாட்டில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறான் தமிழன்! இதென்ன பெருமையா?
தமிழன் தனது மொழியை இழந்தான். தமிழன் தனது கலாச்சாரத்தை இழந்தான். தமிழன் தனது சரித்திரத்தை இழந்தான். அத்தனைக்கும் முழு முதற் காரணம் கருணாநிதி! தமிழ் நாட்டின் ஊழலக்குத் தலைமகன் கருணாநிதி! திருட்டு ரயில் ஏறி ஆந்திராவில் இருந்து பிழைக்க வந்த கருணாநிதி இன்று தமிழ் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்! அத்தனையும் ஊழல் பணம்! அதனையும் மன்னிக்கலாம். ஆனால் தமிழனுக்குக் குழி தோண்டினாரே, அவனை முக்கால் வாசி சாகடித்தாரே அதை எப்படி மன்னிப்பது?
ஆமாம்! ஸ்டாலின் என்றாலும் கருணாநிதி என்றாலும் தமிழனுக்கு ஒன்று தான்!
ஆசிரியர்களா? ரௌடிகளா?
கடந்த சில தினங்களாக ஆசிரியர்களைப் பற்றி வருகின்ற செய்திகள் மிகவும் வருத்தத்திற்குறிய செய்திகளாகவே வருகின்றன.
கடைசியாகக் கிடைத்த செய்தி: இரு மாணவர்களை ஆசிரியர் ஒருவர் அலமாரியில் போட்டு அடைத்து வைத்ததாகச் சொல்லப் படுகின்றது. அடைத்து வைத்த ஆசிரியர் அடைத்துவிட்டுப் போய்விட்டார்! அந்தச் சிறுவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே அவர்கள் அலமாரியை உடைத்து வெளியே வந்திருக்கின்றனர். அவர்கள் ஒரு மணி நேரம் அலமாரியில் அடைத்து வைக்கப் பட்டிருக்கின்றனர்.
ஆசிரியரின் கோபம் நமக்குப் புரிகிறது. ஆசிரியர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதுள்ள மாணவர்களை, இப்போதுள்ள சிறுவர்களை முந்தைய தலைமுறையினரோடு ஒப்பிட முடியவில்லை. இப்போதுள்ள குழைந்தைகளுக்கு சுட்டித்தனம் அதிகம்.
ஏன்? உங்கள் வீட்டுப் பிள்ளைகளும் அப்படித்தானே இருக்கிறார்கள்? உங்கள் வீட்டுப் பிள்ளைகளை இன்னொரு பள்ளியில் நீங்கள் செய்த அதே செயலையை வேறு ஓர் ஆசிரியர் செய்திருந்தால் நீங்கள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பீர்களா? அல்லது மலாய்ப் பிள்ளைகளை இப்படியெல்லாம் செய்வதற்கு உங்களுக்குத் துணிவு உண்டா?
இந்திய மாணவர்கள் என்றாலே அதெப்படி உங்களுக்குக் கோபம் கட்டுக் கடங்காமல் வந்து விடுகிறது? சுட்டித் தனமான மாணவர்களை எப்படித் திருத்த வேண்டும் என்பதை எல்லாம் உங்களுக்குப் பாடம் எடுத்திருப்பார்களே, மறந்து போனதா?
இருந்தாலும் உங்கள் செயலை நான் வரவேற்கவில்லை. உங்கள் செயலால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்ல என்பதால் இந்தத் தடவை அது உங்களுக்கு நல்ல நேரம். உங்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ரொம்பவும் மகிழ்ச்சி அடைந்து விடாதீர்கள். உங்களை - உங்களைச் சார்ந்த ஆசிரியர் சமூகம், மற்றும் பெற்றோர்கள் - உங்களை 'மெண்டல்' என்று கிண்டல் செய்கின்ற அளவுக்கு இது தொடரும்!
ஆசிரியர்களைக் கொண்டாடுகிற சமூகம் இந்திய சமூகம். அதனால் தான் அவர்களைக் குரு என்கிறோம்.
இனி மேலாவது குருவாக நடந்து கொள்ளுங்கள்.
Thursday, 15 February 2018
சீனப்புத்தாண்டு வாழ்த்துகள்!
இன்று சீனப்புத்தாண்டு. சீனர்கள் யாரும் இதனைப் படிக்கப் போவதில்லை. ஆனால் சிந்தியர்கள் (Cindians) ஒரு வேளைப் படிக்கலாம். ஆனால் இந்தியர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக இங்கு நான் எழுதுகிறேன்.
மற்ற நாட்டினரை விட மலேசியர்களான நமக்கு சீனர்களைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே தெரியும். முதலில் வருவது அவர்களின் ஒற்றுமை. பெரும்பாலான சீனர்கள் வியாபாரிகள். சீனர்கள் சீனர்களிடம் தான் தங்களின் பொருட்களை வாங்குவார்கள். மற்ற இனத்தவரிடம் அவர்கள் பெரும்பாலும் வாங்குவதில்லை. அவர்களிடம் பணம் பிற இனத்தவரிடம் போகக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்கள். தங்கள் இனத்தவர்களின் பணம் தங்களுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தால் தான் தங்கள் இனம் நல்ல நிலைக்கு வரும் என்று நினைப்பவர்கள்.
மொழி என்று வரும் போது அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் அவர்களின் சீன மொழியை முன் நிறுத்துவார்கள். அவர்கள் மொழி நிலைத்து நிற்க வேண்டும் என்பதில் அவர்களிடையே கருத்து வேறு பாடில்லை. கோழி விற்பவனாக இருந்தாலும் சரி கோடிசுவரனாக இருந்தாலும் சரி அவன் மொழி தான் முன் நிற்கும். எந்தச் சட்டமும் அவனை ஒன்றும் செய்து விட முடியாது.
ஏதோ ஒரு காரியத்தில் அரசாங்கத்துடன் ஒத்துப் போக முடியவில்லை என்றால் ஒன்றும் சொல்லமாட்டார்கள். ஆனால் தங்கள் இனத்தவரிடையே அதனை எதிர்க்க என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்வார்கள். எந்த விளம்பரமும் இல்லாமல் காது வழியாக தங்களிடையே பரப்பி விடுவார்கள். சான்றுக்கு ஒன்று சொல்லலாம். டுரியான் பழத்தின் மீது ஏதோ ஒரு பிரச்சனை வந்தது. அதன் வாடிக்கையாளர்களில் பெரும்பாலும் சீனர்கள். அந்தப் பழக்கத்தை அவர்கள் வாங்காமல் புறக்கணித்தார்கள். எல்லாமே காது வழியாக! அதன் பின்னர் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்கள். புறக்கணிக்கிறோம் என்று யாரும் சொல்லவில்லை! செயலில் காட்டினார்கள்.
இன்றைய நிலையில் சீனப்பள்ளிகளுக்கு அதிகமாக மலாயரும் இந்தியர்களும் தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள். ஒரே காரணம் தான். தரமான கல்வி. கட்டொழுங்கு. சீன ஆசிரியர்கள் சீனக் கல்வியை சீனர் அல்லாதவருக்குச் சிறப்பான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் அதிகக் கவனம் செலுத்துகிறார்கள். அதன் மூலம் இன்னும் நிறைய மலாய், இந்திய மாணவர்களை வரவேற்கிறார்கள். மாணவர்கள் கூடுகிறார்கள். ஆனால் பள்ளிகளை விரிவு படுத்த அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை. காரணம் விரும்பவில்லை!
இன்னும் நிறைய உண்டு. மேல் கூறியவற்றை நமது சமுதாயம் கடைபிடித்தாலே போதும். நம்மை அடிச்சிக்க ஆளில்லை!
மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
திருவாரூர் கே.தங்கராசு
இளைய தலைமுறையினருக்கு "திருவாரூர் கே தங்கராசு" என்னும் பெயர் பரிச்சயம் இல்லாத ஒரு பெயர்.
ஆனால் எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீர் படம் என்றால் இன்றைய தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு படம். அந்தப் படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர் தான் திருவாரூர் கே.தங்கராசு.
உண்மையில் அவர் சினிமாத் துறையைச் சார்ந்தவர் அல்ல. பெரியாரியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கடைசிவரை தீண்டாமை, ஏற்றத்தாழ்வுகள் என்ற பெரியாரியக் கொள்களை மக்களிடம் எடுத்துச் சென்றவர்.
ரத்தக்கண்ணீர் முதலில் நாடகமாகத்தான் மேடை ஏறியது. அந்த நாடகத்தில் நடிகவேளை நடிக்க வைத்தவர் இந்த திருவாரூர்காரர். ரத்தக்கண்ணீர் நாடகம் தமிழ் நாட்டில் நடக்காத இடமில்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து ஊர்களிலும் நடந்தேறியது. ரத்தக்கண்ணீர் நாடகத்திற்கு எந்தக் காலத்திலும் கூட்டம் குறைந்ததாகச் சரித்திரம் இல்லை. எப்போதுமே அரங்கம் நிறைந்து வழிந்தது! அதற்கும் ஒரு காரணம் உண்டு. நாடகத்தின் கதையில் மாற்றமில்லை. அது அப்படியே தான் இருக்கும். கதாபாத்திரங்களின் வசனத்திலும் மாற்றமில்லை. ஆனால் நடிகவேள் தான் வருகின்ற காட்சிகளிலெல்லாம் நடப்பு அரசியலை நுழைத்து விடுவார்! அவர் அரசியல் பேசினால் கேலி, கிண்டல், சாடல், நகைச்சுவை, கோபம் -இப்படி எல்லாவற்றையும் கொண்டு வந்து விடுவார்! அதனால் தான் அவருடைய ரசிகர்கள் நாடகத்தைப் பார்க்கத் தவறுவதில்லை!
திருவாருர் கே. தங்கராசு அவர்கள் பணம், பதவி என்பதைப்பற்றியெல்லாம் அதிகம் யோசிக்காதவர். அதனால் தான் சினிமாவைத் தனது முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இரண்டு படங்களுக்கு அவர் கதை, வசனம் எழுதியிருக்கிறார். ரத்தக்கண்ணீரைத் தவிர்த்து பெற்றமனம், தங்கதுரை ஆகிய இரு படங்களுக்கும் வசனம் எழுதியிருக்கிறார். இன்னொன்றையும் குறிப்பிடத்தான் வேண்டும். ரத்தக்கண்ணீர் திரைப்படமாக எடுக்கும் போது தான் - தமிழ்ச் சினிமாவில் முதன் முறையாக - திரைக்கதை வசனம் முழுமையான புத்தகங்களாக வெளியிடும் பழக்கம் வழக்கத்திற்கு வந்தது. இப்போது அதனை யாரும் செய்வதில்லை. முன்பெல்லாம் ஒவ்வொரு படத்தின் கதை வசனத்தையும் படம் வருவதுற்கு முன்னேரே உரையாடல்களுடன் புத்தகமாக வெளி வரும். ரத்தக்கண்ணீர் தான் இப்படிப் புத்தகம் போடும் பழக்கத்தைக் கொண்டு வந்தது.
சினிமாவில் கதை வசனம் எத்தனையோ பேர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் திருவாரூர் கே.தங்கராசு தான். ரத்தக்கண்ணீர் நாடகம் மட்டும் சுமார் 3500 தடவைக்கு மேல் மேடை ஏற்றியிருக்கிறார் நடிகவேள் எம்.ஆர்.ராதா. அவரைத் தொடர்ந்து அவரது பிள்ளைகளும்அதனைத் தொடர்ந்திருக்கின்றனர்.
ஒரே ஒரு நாடகத்தின் மூலம் அல்லது ஓரே ஒரு ரத்தக்கண்ணீர் என்னும் திரைப்படத்தின் மூலம் பேரும் புகழும் அடைந்தவர் திருவாருர் கே. தங்கராசு. தமிழ். சமஸ்கிருதம், ஆங்கிலம் இம்மூன்று மொழிகளிலும் புலமை மிக்கவர்.
அவர் தனது 87-வது வயதில் - 06-01-2014 - அன்று காலமானார். மறைந்தாலும் பகுத்தறிவாளர் நெஞ்சத்தில் என்றென்றும் வாழ்பவர்.
Tuesday, 13 February 2018
"ஸ்பைடர் மேன்" டத்தோ ஆறுமுகம்!
தாமதமாக வந்தாலும் சிலந்தி வலைகளோடு வந்து தனது பெயரை இரண்டு இடங்களில் வலைத்துப் போட்டிருக்கிறார் டத்தோ ஆறுமுகம்!
ஆசியாவின் சிறந்த "கோல் கீப்பர்" என்று பெயரெடுத்தவர். அவர் காலத்தில் காற்பந்து விளையாட்டில் கோல் கீப்பராக அவரோடு ஒப்பிடக் கூடியவர் யாரும் இல்லை! அதனால் தான் மலேசிய ரசிகர்கள் அவரை "ஸ்பைடர் மேன்" என்று அழைத்தார்கள். அவர் இன்னும் சில ஆண்டுகள் இருந்திருந்தால் அவருடைய உயரமே வேறு மாதிரியாக அமைந்திருக்கும்.
இப்போது நமது சிலாங்கூர் அரசாங்கம் அவரை நாம் பெருமைப்படும் அளவுக்கு கௌரவித்திருக்கிறது. கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ முகமது யாசிதுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
இளம் வயதில் அவர் ஓடி ஆடி விளையாண்ட "பாடாங் பெக்கிலிலிங்" என்னும் கால்பந்து ஸ்டேடியத்திற்கும் அதனைச் சுற்றி அமைந்துள்ள "ஜாலான் பெக்கிலிலிங்" என்னும் பிரதான சாலைக்கும் டத்தோ ஆறுமுகத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது நமது சமுதாயத்திற்குப் பெருமை.
டத்தோ ஆறுமுகம் காற்பந்து துறையில் உலக அளவில் சிறந்த கோல்காவலர் என்று பெயர் எடுத்தவர். தான் வாழ்ந்த இடத்திலேயே காற்பந்து குழுவை ஏற்படுத்தி பல விளையாட்டாளர்களை உருவாக்கியவர்' விளையாட்டு நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தவர்.
அவர் மறைந்து 30 ஆண்டுகள் ஆனாலும் அவரது இணயற்ற சேவையை இன்னும் மறவாமல் அவருக்காக அரசாங்கத்திடம் அவரது பெயரை முன்மொழிந்த பல நல்ல உள்ளங்களுக்கு நமது நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
இது போன்ற நமது சமுதாயத்தைச் சேர்ந்த இன்னும் பல சேவையாளர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்றும் இந்த நேரத்தில் நாம் கேட்டுக் கொள்வது நமது கடமை.
டத்தோ ஆறுமுகத்தின் பெயர் என்றென்றும் நம்மிடையே வாழும்! நாமும் அவருடைய குடும்பத்தினரோடு சேர்ந்து இந்த கௌரவத்திற்காக மகிழ்ச்சி அடைகிறோம்!
Saturday, 10 February 2018
சபாஷ்! இந்து சங்கம்!
இந்து சங்கத்திற்கு ஒரு சபாஷ் போட வேண்டும்!
தமிழர்கள் புத்தாண்டு தை முதல் நாளுக்கு அரசாங்கம் விடுமுறை கொடுக்க வேண்டும் என்பதாக பல ஆண்டுகளாக தமிழர் இயக்கங்கள் அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இப்போது மலேசிய இந்து சங்கம் தீடீர் பல்டி அடித்திருப்பது நமக்கு வியப்பைத் தருகிறது!
என்ன காரணம்? பிரதமரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ ஹெங் சியாய் கீவ் சில மாதங்களுக்கு முன்னர் இந்திய சமூகத்திற்கு மேலும் ஒரு நாள் பொது விடுமுறை வழங்கக் கூடும் என்பதாக அறிவித்திருந்தார். பொதுத் தேர்தல் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கும் இந்த வேளையில் - இது பற்றி அறிவிப்பு வரலாம் என்னும் வேளையில் - இப்போது மலேசிய இந்து சங்கம் தமிழர்களுக்கு எதிரான விரோதப் போக்கை எடுத்திருப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இப்போது இவர்கள் ஏப்ரல் 14-ம் தேதி இந்தியர்களின் புத்தாண்டு என்பதாகக் கூறி அரசாங்கத்திடம் மகஜர் சமர்ப்பித்திருக்கின்றனர்.
இனி இவர்கள் - அதாவது தெலுங்கர்கள், மலையாளிகள், சீக்கியர்கள் மற்றப் பிரிவினர் - தங்களது மரபு சார்ந்த புத்தாண்டைக் கொண்டாடாமல் ஏப்ரல் 14-ம் தேதியையே தங்களின் புத்தாண்டாகக் கொண்டாடுவர் என்று இந்து சங்கம் உறுதி அளிப்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
இதிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். மலேசிய இந்து சங்கத்தின் கொள்கை இது தான்: தை மாதமும் வேண்டாம்! ஏப்ரல் மாதமும் வேண்டாம்! உனக்கும் வேண்டாம்! எனக்கும் வேண்டாம்! இப்போது எப்படியோ இனியும் அப்படியே இருக்கட்டும்! இது தான் இந்து சங்கத்தின் உயர்ந்த கொள்கை என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்!
காரணம் தமிழர் இயக்கங்கள் இதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கப் போவதில்லை! அவர்களும் வேட்டியைத் தூக்கிக் கொண்டு களத்தில் இறங்குவார்கள்! அதுவே அரசாங்கத்திற்குப் சாதகமாகப் போய்விடும்! இதெல்லாம் டத்தோ மோகன் ஷானுக்குத் தெரியாதா என்ன?
இப்போது ஒன்று நமக்குப் புரிகிறது. பல பிரச்சனைகளில் இந்து சங்கம் தலையிடுவதில்லை! காரணம் அவை தமிழர்களின் பிரச்சனை என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்! தெலுங்கர்கள், மலயாளிகள், சீக்கியர்கள் பிரச்சனைகளை மட்டும் தான் கையில் எடுப்பார்கள் என்று இனி நாம் நம்பலாம்!
சபாஷ்! டத்தோ மோகன் ஷான்!
Friday, 9 February 2018
ரிடுவானைப் பிடிக்க உதவுங்கள்!
கூட்டரசு பிரதேச சி.ஐ.டி. இயக்குனர் டத்தோஸ்ரீ வான் அகமட் நஜ்முடின் பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். மேலே காணப்படும் ரிடுவான் அப்துல்லா -அல்லது இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் - அவரைக் கண்டுப் பிடிக்க பொது மக்கள் காவல்துறைக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் படி ரிடுவான் அப்துல்லா தனது மகள் பிரசன்னா திக்ஷாவை அவளின் தாயார் இந்திரா காந்தியிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். நீதிமன்றம் கடந்த 2014 - ம் ஆண்டு மே மாதம் 30 - ம் தேதியன்று தனது தீர்ப்பை அளித்தது. ஆனால் இது நாள் வரை அவர் அந்தக் குழந்தையை அதன் தாயிடம் ஒப்படைக்கவில்லை. காவல்துறையாலும் அவரைக் கண்டு பிடிக்க இயலவில்லை! இதன் தொடர்பில் மக்கள் அவரது இருப்பிடத்தை அறிந்திருந்தால் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை ஜனவரி 29-ம் தேதி அறிவித்துள்ளது!
அவர் வெளி நாடு செல்லவில்லை என்பதாகக் குடிநுழைவுத் துறையும் அதனால் அவர் மலேசியாவில் தான் இருக்கிறார் என்பதாகக் காவல்துறையும் கூறுகிறது!
ரிடுவானைக் கண்டுப்பிடிக்க உதவுங்கள்!
வாழ்த்துகிறேன் கேசவன் சார்!
சில தினங்களுக்கு முன் "வணக்கம் மலேசியா" இணையத் தளத்தில் படித்த செய்தி மனதைக் கவர்ந்தது.
பெட்டாலிங் ஜெயா சரஸ்வதி ஆரம்பத் தமிழ்ப்பள்ளி நுழை வாயிலின் முன்புறம், கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் பிரேத வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அதுவும் இரண்டு நாட்களாக! நிறுத்தப்பட்டதோடு சரி! அதனைக் கண்டு கொள்ள ஆளில்லை. ஒரு வேளை மருத்துவமனைக்குத் தேவை இல்லாத வாகனமோ, தெரியவில்லை! பள்ளிக்கு ஒர் இடைக்கால இடைஞ்சல் என்பதைத் தவிர வேறு எந்தப் பாதிப்பும் இல்லை!
வழக்கம் போல சமூக ஊடகங்கள், விமர்சனங்கள் என்று தெறித்துக் கொண்டிருந்த நேரம்! ம.இ.கா. இளைஞர் பிரிவின் சமூகத் தகவல் பிரிவின் தலைவர் கேசவன் கந்தசாமி எதிர்பாராத வகையில் களத்தில் இறங்கினார்! பள்ளி நுழைவாயிலை அடைத்துக் கொண்டிருந்த அந்த வாகனத்தை அங்கிருந்து அகற்றும் பணியில் இறங்கினார். முதலில் அவரும் அவரது நண்பரும் சேர்ந்து வாகனத்தைத் தள்ளி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் கார் இழுவை வாகனம் வந்து சேர்ந்ததும் பிரேத வாகனம் முற்றிலுமாக அங்கிருந்து அகற்றப்பட்டது..
இதனை ஏன் ஒரு முக்கிய செய்தியாக நான் எடுத்துக் கொண்டேன்? இப்போதெல்லாம் ஏதாவது ஒர் எதிர்பாராத செய்தி கிடைத்தால் அல்லது பார்த்தால் உடனே அதனை முகநூல், வாட்ஸப் என்று ஒவ்வொருவரும் "நான் தான் முதலில் பார்த்தேன்!" என்று காட்டிக் கொள்ள பதிவேற்றம் செய்வதில் முனைப்புக் காட்டுகிறார்கள்! இதில் என்ன பெருமை? ஏதோ ஒரு ஆபத்து, அவசரம். நம்மால் என்ன செய்ய முடியும் என்கிற எண்ணமே இப்போது யாருக்கும் தோன்றுவதில்லை. நம்மால் முடியாவிட்டாலும் காவல்துறைக்கோ, சம்பந்தப்பட்டவர்களுக்கோ தெரியப்படுத்தினாலும் அதுவே ஒரு பெரிய உதவி என்பதை நாம் உணர வேண்டும். செய்தி கிடைத்தால் தானே நடவடிக்கை எடுக்க முடியும்!
ஏன் அந்தப் பள்ளி ஆசிரியர்களுக்குக் கூட அவர்கள் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்கவில்லை! அல்லது நமக்கென்ன என்கிற அலட்சியம்! அது ஒரு செய்தியாகி அதனைப் பெரிதுப் படுத்தி ....அப்புறம் அதற்கு ஓர் ஆர்ப்பாட்டம்...! அப்புறம் எதிர்கட்சிகள் அதனையும் கையிலெடுத்து ஆட்சேபம் தெரிவிப்பது! எல்லாம் சலித்துப் போய் விட்டது!
இந்த நேரத்தில் தடாலடியாக பிரச்சனையைக் கையிலெடுத்து அதனைத் தீர்த்து வைக்க களம் இறங்கினாரே கேசவன் கந்தசாமியும் அவரது நண்பரும் நெகிரி மாநில ம.இ.கா. இளைஞர் பகுதித் தலைவர் சண்முகம் சுப்பிரமணியமும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்!
இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். பொதுவாக பேசவது அதுவும் வெட்டிப்பேச்சு பேசவது என்றால் நம்மை அடித்துக் கொள்ள ஆளில்லை! களத்தில் இறங்கி வேலை செய்யத்தான் யாருமில்லை! இந்த நேரத்தில் இப்படியும் இளைஞர்களா என வியக்கிறேன்!
நண்பர்களே! உங்கள் இருவருக்கும் மீண்டும் எனது வாழ்த்துகள்! தொடர்ந்து இந்த சமுதாயம் உயர நீங்கள் பணி செய்ய வேண்டும்!
Tuesday, 6 February 2018
குளிர்ந்து போகுதில்ல!
சில சமயங்களில் சில வார்த்தைகள் நம் மனதைக் குளிர வைத்து விடுகின்றன என்பது உண்மையிலும் உண்மை. அது அசட்டுத் தனமாகக் கூட இருக்கலாம்! ஆனால் என்ன செய்வது? மனம் விரும்புகிறதே!
நேற்று ஒரு மலாய் நண்பர் என்னைப் பார்த்து "நீங்கள் பார்ப்பதற்கு அமிதாப்பச்சன் போல் இருக்கிறீர்கள்!" என்று ஒரு வார்த்தையைச் சொன்னார்! அடாடா! உச்சிக் குளிர்ந்து விட்டது! இது ஒன்றும் எனக்குப் புதிதல்ல. ஏற்கனவே சில மலாய் இளைஞர்கள் என்னை "அங்கள் பச்சான்" என்பார்கள்! அவர்கள் இந்திப் படங்களைப் பார்ப்பவர்கள். அதனால் அவர்கள் கண்களுக்கு நான் அப்படித்தான் இருப்பேன் போலிருக்கிறது! நான் அமிதாப்பச்சன் நடித்த படங்களைப் பார்த்ததில்லை. தொலைக்காட்சியில் ஏதோ அவருடைய ஓரிரு காட்சிகளைப் பார்த்திருப்பேன். அவ்வளவு தான். மற்றபடி அவருடைய உருவத்தை சினிமா செய்திகளில் பார்ப்பதோடு சரி.
இந்த 'உலகில் ஏழு பேரில் ஒருவரில்' வேறு ஒரு விஷேசமும் இருக்கிறது. முன்பு நான் தோட்டப்புறத்தில் வேலை செய்து வந்த காலம் அது. ம.இ.கா. வின் டாக்டர் மாரிமுத்து அவர்கள் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போதும் என்னைப் பார்த்தவுடன் ஒரு சிலருக்கு "அவரா, இவர்!" என்கின்ற ஒரு பார்வை இருக்கும்! ஒரு முறை அம்னோ நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி தீடீரென ரத்து செய்ய வேண்டிய ஒரு சூழல். டாகடரால் கலந்து கொள்ள முடியவில்லை. இந்தச் செய்தியைச் சொல்ல அங்குள்ள ம.இ.கா. தலைவர் என்னையும் கூட்டிக் கொண்டு அந்த இடத்துக்குச் சென்றார். அந்தக் கூட்டத்தினர் என்னைப் பார்த்ததும் உடனே 'மேள தாளங்களை' முழங்க தயாராகினர்! உடனே என் நண்பர் ஓடிப் போய் 'இவர் அவரல்ல!' என்று சொல்லி டாக்டரால் கலந்து கொள்ள இயலவில்லை என்று வருத்தம் தெரிவித்துவிட்டு வந்தார்!
இந்த இருவரில் யாரை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கேட்டால் இருவரையுமே அல்ல! தாடி வைத்த தாகூரைத் தான் நான் விரும்புகிறேன்!
ஆனாலும் சில சமயங்களில் சில நிகழ்ச்சிகள் நமக்கு முட்டாள் தனமான மகிழ்ச்சியைக் கொடுக்கத்தான் செய்கின்றன!
கேள்வி - பதில் (72)
கேள்வி
ரஜினியும் கமலும் அரசியலில் ஒன்று சேர்வார்களா?
பதில்
ஒன்று சேரலாம். வாய்ப்பிருக்கிறது. ஆனால் ரஜினி, கமலோடு சேர்வாரா என்பது ஐயமே! காரணம் அவர் தனித்து நின்று தனது பலம் என்ன என்பதையே காட்ட விரும்புவார். கமல், ரஜினியோடு சேர விரும்பலாம். அரசியலில் கமலுக்குப் பெரிய அரசியல் பலம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சவடால் தனம் இருக்கிறது! ரஜினிக்கு அதுவும் இல்லை. மௌனமாக இருந்தே சாதிக்கப் பார்க்கிறார்!
இருவருமே வெவ்வேறு அரசியல் பேசுகிறார்கள். ரஜினி ஆன்மிக அரசியல் என்கிறார். ஆன்மிக அரசியல் என்றால் அது பா.ஜ.க. வின் பாதை. மதத்தின் மூலம் நாட்டின் அமைதியைக் கெடுப்பது. ரஜினியின் பாதை அதுவாகத்தான் இருக்கும் என்பது அவசியம் இல்லை. ஆனால் அவர் பா.ஜ.க. வோடு கை கோர்க்கலாம். கமலுக்கு ஆன்மிகமும் இல்லை கடவுள் வெறுப்பும் இல்லை என்கிறார். கமல் ரஜினியோடு அல்லது வேறு யாரோடாவது கூட்டுச் சேர்ந்தால் உண்டு. இல்லாவிட்டால் தெண்டம்!
உண்மையைச் சொன்னால் இவர்கள் இருவருமே தமிழக அரசியலுக்குத் தேவை இல்லாதவர்கள்! இவர்கள் கொள்கை என்ன, அரசியல் நோக்கம் என்ன என்பதில் தெளிவு இல்லாதவர்கள்! இருவருமே கவிஞர் வைரமுத்துவுக்கு வேண்டியவர்கள். ஆனாலும் அவருக்கு நேர்ந்த தேவையற்ற தாக்குதலின் போது வாய்த் திறக்காதவர்கள்! அதிலும் கமல் பட்டும்படாமலும் நழுவுகிறார்!
சரி, அதை விடுவோம். தமிழ் நாட்டில் என்ன தான் பிரச்சனைகள் உண்டு என்பதைக் கூட அறியாதவர்கள் இவர்கள். ரஜினின் அரசியல் ஆலோசகர் தமிழருவி மணியம் என்று சொல்லப்படுகிறது. அவருடைய நேர்மையை நாம் மதிக்கிறோம். அவரோ திராவிட அரசியல் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார். நாமும் அதையே விரும்புகிறோம். ரஜினியும், கமலும் திராவிட அரசியலை ஒழிக்க ஓரளவே உதவுவார்கள் என்று சொல்லலாமே தவிர மற்றபடி முற்றிலுமாக ஒழிக்க இவர்களால் முடியாது என்று தான் நான் நினைக்கிறேன்.
இன்றைய நிலையில் ரஜினியையும், கமலையும் ஆதரிப்பவர்கள் யார்? தெலுங்கர்கள், கன்னடர்கள், பிராமணர்கள், மலையாளிகள் - இவர்கள் தான் இந்த இருவரின் முக்கிய ஆதரவாளர்கள். காரணம் ஒரு தமிழர், தமிழக முதல்வராக வருவதை இவர்கள் விரும்பவில்லை! தமிழக ஊடகங்களைக் கூர்ந்து கவனித்தால் இது விளங்கும்! அதனால் தான் இவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு ரஜினிக்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பது போல் தொலைக்காட்சி. பத்திரிக்கை வாயிலாக ஒரு மாயையை உருவாக்குகிறார்கள்! தமிழர் சார்ந்த அமைப்புகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்!
ரஜினியும் கமலும் ஒன்று சேர்ந்தாலும் சேராவிட்டாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை! அப்படியே ஆட்சி அமைத்தாலும் தமிழ் நாடு இன்னொரு ஆபத்திற்குத் தயாராகிறது என்று அர்த்தம்!
தமிழர்களின் எதிர்காலத்திற்கு தமிழர்களின் ஆட்சி தான் தேவை! நடிகர்களின் ஆட்சி எந்த வகையிலும் நல்லதல்ல!
Sunday, 4 February 2018
இந்தியர்கள் முன்னேற வில்லை!
டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி பொங்கல் நிகழ்ச்சி ஒன்றில் நல்லதொரு கருத்தை உதிர்த்திருக்கிறார்!
"டாக்டர் மகாதிர் 22 ஆண்டு காலம் பிரதமர் பதவியில் இருந்த போது இந்திய சமுதாயத்திற்கென்று எதனையும் செய்யவில்லை" என்பதாகக் கூறியிருக்கிறார் தேவமணி! இதனைத்தான் எதிர்கட்சியினர், ஏன்? எந்தக் கட்சியிலும் சேராதவர்கள் கூட, நடுநிலையாளர்கள் கூட, இந்தியர்களுக்கு ம.இ.கா. ஒன்று செய்யவில்லை என்கிறார்கள்!
தேவமணி இப்போது தான் இது பற்றி வாய்த் திறக்கிறார்! ஆனால் டாக்டர் மகாதிர் ஏற்கனவே இது பற்றி விளக்கமளித்திருக்கிறார். அன்றைய ம.இ.கா. தலைவர், சாமிவேலு இந்தியர் பிரச்சனைகள் எதனையும் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை என்பதாகக் கூறியிருக்கிறார்!
ஒரு சிலர், டாக்டர் மாகாதிருக்கு இந்தியர்கள் பிரச்சனைகளே தெரியாதா என்று கேள்வி எழுப்புகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ம.இ.கா.வின் ஆண்டுக் கூட்டத்தில் பிரதமரின் முன்னால் இந்தியர்களின் பிரச்சனைகள் எழுப்பப்படுகின்றனவே என்கின்றனர்.
இங்கு நாம் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்டுக் கூட்டங்களில் பேசுப்படுவதை நாம் பொருட்படுத்தக்கூடாது. காரணம் பேராளர்களின் முன்னால் ம.இ.கா. தலைவர் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்! பேராளர்களுக்கு எதனையாவது சொல்லி அவர்களைத் திருப்தி படுத்த வேண்டும். இந்தத் 'திருப்தி' படுத்துகின்ற வேலை தான் ஆண்டுக் கூட்டங்களில் நடக்கிறது; நடந்து கொண்டிருக்கிறது!
இந்தியர் பிரச்சனை பேச வேண்டிய இடம் அமைச்சரவைக் கூட்டத்தில் தான். அதனைத் தான் டாக்டர் மகாதிர், அன்றைய தலைவர் அமைச்சரவையில் எந்தப் பிரச்சனையும் கொண்டு வரவில்லை என்கிறார்! இன்றளவும் இதே பாணி தான் கடைப்பிடிக்கப்படுகிறது! ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! இல்லை என்று இவர்கள் மறுப்புத் தெரிவித்தால் நாமும் எதிர் கேள்வி கேட்கலாம். அப்புறம் ஏன் எந்தப் பிரச்சனையையும்,சிறிதோ பெரிதோ, உங்களால் தீர்த்து வைக்க முடியவில்லை? அப்படி என்றால் நீங்கள் அமைச்சரவையில் பேசவில்லை என்று தானே அர்த்தம். சீனர்களால் மட்டும் எப்படி பேச முடிகிறது?
நீங்கள் இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக எத்தனை பெரும் திட்டங்கள் போட்டாலும் ஒன்றை மறந்து விடாதீர்கள். ஏற்கனவே உங்கள் தலைவர் போட்ட திட்டங்களை அடித்துக் கொள்ள ஆளில்லை! அதுவே போதுமானது!
இன்றைய நிலையில் இந்தியர் முன்னேற்றம் என்றால் இந்தியர்களின் சொந்த முயற்சியால் அடைந்த முன்னேற்றம் தான். அந்தப் பெருமை உங்களுக்குப் போய் சேராது! உங்களைப் போன்ற அரசியல்வாதிகளின் கிடு கிடு முன்னேற்றம் என்பது இந்தியர்களின் முன்னேற்றம் அல்ல! அது அரசாங்கத்தின் உங்களுக்கான இலஞ்சம்!
நீங்கள் சொன்னது சரி தான்! டாக்டர் மகாதிர் என்பதை எடுத்து விட்டு, ம.இ.கா. என்று சரி செய்து கொள்ளுங்கள்!
Friday, 2 February 2018
சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும்
நிபோங் திபால் மெதடிஸ்ட் இடைநிலைப் பள்ளி மாணவி வசந்தபிரியா கடைசியில் சுய நினவில்லாமல், கொமா நிலையிலேயே இறந்து போனார்.
அவரது பள்ளி ஆசிரியையின் கைப்பேசியைத் திருடினார் என்று ஆசிரியையால் குற்றம் சாட்டப்பட்டு, அந்த மாணவி தான் திருடவில்லை என்று கூறியும், அதனைப் பொருட்படுத்தாமல் "நீ தான் திருடினாய்" என்று அந்த ஆசிரியையும் அவரது கணவரும் மேலும் அந்தப் பள்ளியின் இரண்டு ஆசிரியர்களும் அந்த மாணவியைக் குற்றம் சாட்ட அந்தக் குற்றச்சாட்டை அந்த மாணவியால் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து அங்கிருந்து பெற்றோரால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் கடைசி கடைசியாக உயிர் துறந்தார்.
ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு மரணம். 14 வயது மாணவி. 14 ஆண்டுகள் பெற்றோர்களால் ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரு மகள் இப்படி அநியாயமாய் தற்கொலை செய்து கொண்டாளே என்று நினைக்கும் போது நமக்கே மனம் பதை பதைக்கிறது. பெற்றோர்களின் இழப்பு என்பது சாதாரண வாரத்தைகளால் வர்ணிக்க இயலாது. பல கனவுகளோடு அந்தப் பெற்றோர்கள் அவளை வளர்த்திருப்பர். டாக்டர் ஆக வேண்டும், இஞ்சினியிருங் படிக்க வேண்டும் என்று ஏதாவது அந்தக் குழந்தையின் மனதிலே புதைந்திருக்க வேண்டும். அனைத்தும் ஒன்றுமில்லாமல் வெறுமையாய் போய்விட்டது.
அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்பது உண்மை தான். ஆனால் அவரைத் தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அந்தத் தூண்டுதல் எங்கிருந்து வந்தது? ஏன் அந்தக் கடைநிலைக்கு அவர் தள்ளப்பட்டார்? என்பது முக்கியமான கேள்வி.
அவரது பள்ளியில் ஐந்து மணி நேரம் நான்கு ஆசிரியர்களால் அவர் விசாரிக்கப்பட்டிருக்கிறார். விசாரணை எப்படி நடந்தது? அவர் அடித்து துன்புறுத்தப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. தனி அறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்கிறார்.
ஒரு முக்கியமான கேள்வி இங்கு நாம் எழுப்பித் தான் ஆக வேண்டும். இவ்வளவு நடந்தும் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்ன ஆனார்? ஏன்? அவரது பள்ளியின் நடந்த இந்த 'விசாரணை' அவருக்குத் தெரியாமலா நடந்திருக்கும்? அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அவரால் எப்படி ஒதுங்கிக் கொள்ள முடியும்? ஏன், அந்தப் பள்ளியின் கட்டொழுங்கு ஆசிரியர் இதனைக் கண்டு கொள்ளவில்லை? அவர் தானே இதனை முன்னின்று நடத்திருக்க வேண்டும்? இப்படிப் பல கேள்விகள்.
எதற்கும் நம்மிடம் பதில் இல்லை. உண்மையைச் சொல்ல அந்த மாணவியும் இல்லை. சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று சொல்லியிருக்கிறார்கள். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தொலைந்து போன கைப்பேசியை வாங்கிவிடலாம் ஆனால் தொலைந்து போன உயிரை வாங்க முடியுமா? ஆசிரியர்கள் ஆசிரியர்களாக இருக்க வேண்டும். அடியாளாக இருக்க வேண்டாம்! இதுவே நமது வேண்டுகோள்!
சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும். செய்யும் என நாமும் நம்புகிறோம்.
Thursday, 1 February 2018
தைப்பூசம் நினைவலைகள்
எனது நண்பர் - என்னை விட வயதில் மூத்தவர் - "டேய், வாடா பத்துமலைக்குப் போய்ட்டு வருவோம்!" என்று என்னைக் கூப்பிட்டார். அதற்கு முன்னர் நான் பத்துமலை போனதில்லை. அதனால் என்ன, போய்ப் பார்த்து விட்டுத்தான் வருவோமே என்று எனக்கும் தோன்றியது. "சரி! போவோம்!" என்று நானும் ஒப்புக் கொண்டேன்.
பஸ் பிரயாணம் தான். ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் கூட்டம் அதிகம்.பஸ்ஸில் போகும் போதும் நெருக்கடி. வரும் போதும் நெருக்கடி. பத்துமலை சென்றால் அங்கும் நெருக்கடி. கூட்டம்! கூட்டம்! கூட்டம்! இருந்தாலும் அந்தக் கூட்டத்திலும் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்தது! சரி, நாங்கள் வந்த காரியத்தைப் பார்க்க வேண்டும் அல்லவா? நானும் நண்பரும் மலை ஏறினோம். முதல் படியிலிருந்து மேலே கடைசிப் படி வரை ஏறி முடித்தோம்! குகையினுள் உள்ளே சென்று சுற்றிச் சுற்றிப் பார்த்தோம். ஒரு சில இடங்களைப் பார்க்கும் போது எப்போது கழற்றிக் கொண்டு விழுமோ என்கிற அச்சமும் வந்தது!
எல்லாம் முடிந்து கீழே இறங்கும் போது இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்ததே தவிர குறைவதாகக் காணோம்! அன்று என்ன நிலையோ அதே நிலை தான் இன்றும் என்று இப்போதும் கேள்விப்படுகிறோம்! அதிசயம் ஒன்றும் இல்லை. புனிதத் தலங்களில் எந்தக் காலத்திலும் கூட்டங்கள் குறைவதில்லை! அது தான் புனிதத் தலங்களின் விசேஷம்!
நானும் எனது நண்பரும் பத்துமலைக்குக் போகும் முன்னரே நாங்கள் ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்துக் கொண்டோம். எத்தனை மணிக்குப் புறப்பட வேண்டும். எத்தனை மணிக்குப் பத்துமலையில் இருக்க வேண்டும். பத்துமலையில் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து எத்தனை மணிக்குப் புறப்பட வேண்டும். திரும்பி வரும் போது எங்களூரில் தைப்பூச விசேஷத்திற்காக ஒரு தமிழ்ப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் படத்தையும் பார்த்து விட வேண்டும் என்பதாக எங்களது நிகழ்ச்சி நிரலை ஏற்படுத்தியிருந்தோம்.
எங்களது நிகழ்ச்சி நிரலின் படி கடைசி நிரலுக்கு வந்து விட்டோம். அந்தத் தமிழ் திரைப் படத்தையும் பார்த்து விட்டோம். என்ன தான் படம் அது? சிவாஜி-சரோஜாதேவி நடித்த "பாகப்பிரிவினை". ப்லருக்கு ஞாபகம் இருக்க நியாயமில்லை. ஆனாலும் அதில் ஒலித்த பாடல்கள் அனைத்தும் மிகவும் பிரபலம். அதில் ஒன்று "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ!" என்கிற பாடல்.
அதன் பிறகு நான் எந்தத் தைப்பூசத்திலும் கலந்து கொண்டதில்லை. அந்தக் கூட்ட நெரிசல் எனக்கு வேண்டாம்! ஆனால் பத்துமலைக்குச் சென்று வந்திருக்கிறேன். நிறைய மாற்றங்கள்.
ஒரே ஒரு மாற்றம். எனது அந்த நண்பர், கோவிந்தசாமி பத்தர், இப்போது இல்லை. இறைவனடி சேர்ந்து விட்டார். ஆனால் அந்த நினைவுகள் மறையவில்லை. இன்னும் அப்படியே மனதில்!
Subscribe to:
Posts (Atom)