Sunday 25 February 2018

ஒரு சோகம், ஒரு மகிழ்ச்சி


இன்று காலையிலேயே வாட்சப் செய்தி ஒன்றினால் மிகவும் பரபரப்பு!  எனக்கும் வாட்சப்புக்கும் வெகு தூரம்!  அது எனக்குத் தேவை இல்லாத ஒன்று.  என்னுடனிருந்தவர்கள் அனைவரிடமும் அந்த வசதிகள் உண்டு.

என்னுடன் இருந்தவர்கள் நடிகை ஸ்ரீதேவி இறந்து போனார் என்று சொன்னார்கள். அனைவருக்குமே அதிர்ச்சி தான். நான் இதற்கெல்லாம் அதிர்ச்சி அடைவதில்லை. இறப்பு எல்லாருக்குமே வருவது தானே?  அதிசயம் ஒன்றுமில்லை. நடிகை என்றால் மட்டும் என்ன? எமதர்மன் தனது கடமையில் இருந்து தவறிவிடுவாரா? அவரது வேலையை அவர் சரியாகச் செய்கிறார்!

இருந்தாலும் நன்றாக நடிக்கக் கூடிய நடிகை. ஏதோ,  ஒரு சில,  அவர் நடித்த படங்களைப் பார்த்திருக்கிறேன். அப்படி என்ன தான் வயது அவருக்கு? வயது 54 என்கிறார்கள். அப்படி ஒன்றும் 'போக' வேண்டிய வயதில்லை! இளம் வயது தான். ஆனால் அவரிடம் ஒரு குறை உண்டு. தனது உடம்பை கட்டாகவும், இளமையாகவும் வைத்துக் கொள்ள ஏகப்பட்ட மாத்திரைகளை விழுங்குபவர் என்று அவரைப் பற்றி சொல்லுவதுண்டு. அதில் உண்மை இருக்கலாம். மாத்திரைகளே அவரை நிரந்திர நித்திரைக்குக் கொண்டு சென்று விட்டது. வருந்துகிறோம்.

அடுத்து ஒரு மணி நேரத்திற்குப் பின் இன்னொரு நண்பர் கண்ணில் அகப்பட்டார

"என்ன தேர்தல் வரப்போவது போல இருக்கு.....!" என்று ஆரம்பித்தார். எப்படி?  "இப்பத்தான் செய்தியில் சொன்னான். BRIM தொகையை 1500 லிருந்து 2000 க்கு ஏற்றி விட்டார்களாம்!" அப்படியா, நல்ல செய்தி தான்.  'பிரிம்'  உதவித் தொகை வாங்குபவர்களுக்கு அது நல்ல செய்தி தான்.  இப்போது        எவ்வளவு உதவித் தொகை கொடுக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஏதோ வாங்குபவர்களாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

ஆனாலும் இன்னொரு பக்கம் பார்த்தால் அரசாங்கத்திடம் பணம் இல்லை என்கிறார்கள். அப்புறம் எப்படி உதவித் தொகைக் கொடுக்க முடிகிறது? புரியவில்லை! உதவிகள் எல்லாம் தேர்தலை நோக்கிச் செலுத்தப்படுகிறது! என்ன செய்ய? இது தான் அரசியல்! நாம் வாங்குகின்ற புழுங்கல் அரிசி  ஒரு கிலோ    ரி.ம. 3.60 காசுக்கு  வாங்குகிறோம் அல்லது இன்னும் குறைவான  விலைக்கு விற்கக் கூடிய அரிசிகளை வாங்குகிறோம். அதே சமயத்தில் ஒரு கிலோ ரி.ம.70.00 வெள்ளிக்கு  வாங்கும் சக்தி படைத்தவர்களும்  நாட்டில்     இருக்கிறார்கள்.! இந்த ஏற்றத் தாழ்வுகளை எப்படிக் களைவது? அரசியல்வாதிகள் மனம் வைத்தாலொழிய  எதுவும் நடக்காது!

பிரிம் தொகைக் கிடைப்பவர்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியில் நாமும் பங்கு பெறுவோம்!

No comments:

Post a Comment