Thursday 15 February 2018

சீனப்புத்தாண்டு வாழ்த்துகள்!


இன்று சீனப்புத்தாண்டு.  சீனர்கள் யாரும் இதனைப் படிக்கப் போவதில்லை. ஆனால் சிந்தியர்கள் (Cindians) ஒரு வேளைப் படிக்கலாம். ஆனால் இந்தியர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக இங்கு நான் எழுதுகிறேன்.

மற்ற நாட்டினரை விட மலேசியர்களான நமக்கு சீனர்களைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே தெரியும். முதலில் வருவது அவர்களின் ஒற்றுமை.   பெரும்பாலான சீனர்கள் வியாபாரிகள். சீனர்கள் சீனர்களிடம் தான் தங்களின் பொருட்களை வாங்குவார்கள். மற்ற இனத்தவரிடம் அவர்கள் பெரும்பாலும் வாங்குவதில்லை. அவர்களிடம் பணம் பிற இனத்தவரிடம் போகக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்கள். தங்கள் இனத்தவர்களின் பணம் தங்களுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தால் தான் தங்கள் இனம் நல்ல நிலைக்கு வரும் என்று நினைப்பவர்கள்.

மொழி என்று வரும் போது அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் அவர்களின் சீன மொழியை முன் நிறுத்துவார்கள். அவர்கள் மொழி நிலைத்து நிற்க வேண்டும் என்பதில் அவர்களிடையே கருத்து வேறு பாடில்லை. கோழி விற்பவனாக இருந்தாலும் சரி கோடிசுவரனாக இருந்தாலும் சரி அவன் மொழி தான் முன் நிற்கும். எந்தச் சட்டமும் அவனை ஒன்றும் செய்து விட முடியாது.

ஏதோ ஒரு காரியத்தில் அரசாங்கத்துடன் ஒத்துப் போக முடியவில்லை என்றால் ஒன்றும் சொல்லமாட்டார்கள். ஆனால் தங்கள் இனத்தவரிடையே அதனை எதிர்க்க என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்வார்கள். எந்த விளம்பரமும் இல்லாமல் காது வழியாக தங்களிடையே  பரப்பி விடுவார்கள். சான்றுக்கு ஒன்று சொல்லலாம். டுரியான் பழத்தின் மீது ஏதோ ஒரு பிரச்சனை வந்தது. அதன் வாடிக்கையாளர்களில் பெரும்பாலும் சீனர்கள். அந்தப் பழக்கத்தை அவர்கள் வாங்காமல் புறக்கணித்தார்கள். எல்லாமே காது வழியாக! அதன் பின்னர் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்கள். புறக்கணிக்கிறோம் என்று யாரும் சொல்லவில்லை! செயலில் காட்டினார்கள்.

இன்றைய நிலையில் சீனப்பள்ளிகளுக்கு அதிகமாக மலாயரும் இந்தியர்களும் தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள். ஒரே காரணம் தான். தரமான கல்வி. கட்டொழுங்கு. சீன ஆசிரியர்கள் சீனக் கல்வியை சீனர் அல்லாதவருக்குச் சிறப்பான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் அதிகக் கவனம் செலுத்துகிறார்கள். அதன் மூலம் இன்னும் நிறைய மலாய், இந்திய மாணவர்களை வரவேற்கிறார்கள். மாணவர்கள் கூடுகிறார்கள். ஆனால் பள்ளிகளை விரிவு படுத்த அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை. காரணம் விரும்பவில்லை!

இன்னும் நிறைய உண்டு. மேல் கூறியவற்றை நமது சமுதாயம் கடைபிடித்தாலே போதும். நம்மை அடிச்சிக்க ஆளில்லை!

மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment