Thursday 15 February 2018

திருவாரூர் கே.தங்கராசு


இளைய தலைமுறையினருக்கு "திருவாரூர் கே தங்கராசு" என்னும் பெயர் பரிச்சயம் இல்லாத ஒரு பெயர்.  

ஆனால் எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீர் படம் என்றால் இன்றைய தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு படம்.  அந்தப் படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர் தான் திருவாரூர் கே.தங்கராசு.

உண்மையில் அவர் சினிமாத் துறையைச் சார்ந்தவர் அல்ல.  பெரியாரியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கடைசிவரை தீண்டாமை, ஏற்றத்தாழ்வுகள் என்ற பெரியாரியக்  கொள்களை மக்களிடம் எடுத்துச் சென்றவர்.






ரத்தக்கண்ணீர் முதலில் நாடகமாகத்தான் மேடை ஏறியது. அந்த நாடகத்தில் நடிகவேளை நடிக்க வைத்தவர் இந்த திருவாரூர்காரர்.  ரத்தக்கண்ணீர் நாடகம் தமிழ் நாட்டில் நடக்காத இடமில்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து ஊர்களிலும் நடந்தேறியது. ரத்தக்கண்ணீர் நாடகத்திற்கு எந்தக் காலத்திலும் கூட்டம் குறைந்ததாகச் சரித்திரம் இல்லை. எப்போதுமே அரங்கம் நிறைந்து வழிந்தது! அதற்கும் ஒரு காரணம் உண்டு. நாடகத்தின் கதையில் மாற்றமில்லை. அது அப்படியே தான் இருக்கும். கதாபாத்திரங்களின் வசனத்திலும் மாற்றமில்லை. ஆனால் நடிகவேள் தான் வருகின்ற காட்சிகளிலெல்லாம் நடப்பு அரசியலை நுழைத்து விடுவார்! அவர்  அரசியல் பேசினால் கேலி, கிண்டல், சாடல், நகைச்சுவை, கோபம் -இப்படி எல்லாவற்றையும் கொண்டு வந்து விடுவார்! அதனால்  தான்  அவருடைய  ரசிகர்கள் நாடகத்தைப்  பார்க்கத்  தவறுவதில்லை!

திருவாருர்  கே. தங்கராசு  அவர்கள் பணம், பதவி  என்பதைப்பற்றியெல்லாம்  அதிகம் யோசிக்காதவர். அதனால்  தான் சினிமாவைத் தனது முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இரண்டு  படங்களுக்கு அவர் கதை, வசனம் எழுதியிருக்கிறார்.  ரத்தக்கண்ணீரைத் தவிர்த்து பெற்றமனம்,  தங்கதுரை ஆகிய இரு படங்களுக்கும் வசனம் எழுதியிருக்கிறார். இன்னொன்றையும்  குறிப்பிடத்தான்  வேண்டும். ரத்தக்கண்ணீர்   திரைப்படமாக  எடுக்கும் போது  தான்  - தமிழ்ச் சினிமாவில்  முதன்  முறையாக -  திரைக்கதை வசனம் முழுமையான  புத்தகங்களாக வெளியிடும் பழக்கம்  வழக்கத்திற்கு  வந்தது. இப்போது  அதனை யாரும் செய்வதில்லை.   முன்பெல்லாம் ஒவ்வொரு  படத்தின்  கதை  வசனத்தையும் படம்  வருவதுற்கு  முன்னேரே உரையாடல்களுடன்        புத்தகமாக வெளி வரும். ரத்தக்கண்ணீர் தான் இப்படிப்  புத்தகம்  போடும் பழக்கத்தைக்  கொண்டு வந்தது.

சினிமாவில்  கதை  வசனம்  எத்தனையோ  பேர்  எழுதியிருக்கிறார்கள்.  ஆனால்  ஒரே  ஒரு படத்தின்  மூலம் பிரபலம் அடைந்தவர் திருவாரூர் கே.தங்கராசு தான்.  ரத்தக்கண்ணீர்  நாடகம்  மட்டும்  சுமார்  3500  தடவைக்கு மேல்  மேடை ஏற்றியிருக்கிறார்  நடிகவேள் எம்.ஆர்.ராதா.  அவரைத் தொடர்ந்து  அவரது பிள்ளைகளும்அதனைத் தொடர்ந்திருக்கின்றனர்.

ஒரே ஒரு  நாடகத்தின்  மூலம்  அல்லது  ஓரே ஒரு  ரத்தக்கண்ணீர்  என்னும்  திரைப்படத்தின்  மூலம்  பேரும்  புகழும்  அடைந்தவர் திருவாருர்  கே. தங்கராசு.   தமிழ். சமஸ்கிருதம், ஆங்கிலம்  இம்மூன்று மொழிகளிலும் புலமை மிக்கவர். 

அவர் தனது 87-வது  வயதில் - 06-01-2014 - அன்று காலமானார்.  மறைந்தாலும் பகுத்தறிவாளர் நெஞ்சத்தில்  என்றென்றும்  வாழ்பவர்.







No comments:

Post a Comment