Monday 26 February 2018

சிறு தொழில்கள் அன்னியரிடமா?!


சிறு தொழிகள் அன்னியத் தொழிலாளர்களிடம்  பறி போகிறது என்பது நமக்குப் புதிதல்ல. அதனை நாம் நீண்ட நாட்களாகவே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.  பார்த்துக் கொண்டு தான் இருக்க முடியும்.   நமக்குள்ள அதிகாரம் அவ்வளவு தான். அதிகாரம் உள்ளவர்களும் நம்மோடு  சேர்ந்து கொண்டு  பார்ப்பது தான்  நமக்கு வியப்பை அளிக்கிறது.  என்ன செய்வது? அன்னியத் தொழிலாளர்களும் யாருக்கு எவ்வளவு கொடுத்தால் கண்ணை மூடிக் கொள்வார்கள் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்!  நமக்குத் தான் தெரியவில்லை!

ஆனாலும் ஒன்றை நான் கண்டு வியக்கிறேன்.  கையில் காசில்லாமல் அவர்கள் நமது நாட்டுக்கு வருகிறார்கள். வருபவர்கள் பெரும்பாலும் சுற்றுப் பயணிகளாகத்தான் வருகிறார்கள். சுற்றுப் பயணம் அவர்கள் நோக்கமல்ல. இங்கேயே தங்கவிட வேண்டும் என்பது தான்      பெரும்பாலானோரின் நோக்கமாக இருக்கிறது. அது தவறு என்று சொல்லுவதற்கு இங்கு யாருக்கும் தகுதி இல்லாமல் போய்விட்டது! பணம் கொடுத்தால் பத்தும் கிடைக்கும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்!

அப்படி என்ன தான் நடக்கிறது? சிறு சிறு தொழிகளில் எல்லாம் அவர்கள் வசமாகிக் கொண்டிருக்கிறது.  தீபாவளி சந்தைகளில் கூட அவர்கள் ஆதிக்கம் ஓங்கி இருக்கிறது. அதுவும் குறிப்பாகச் சொல்லப் போனால் சிறு தொழிகள் செய்யும் இந்தியர்கள் பெரும் பாதிப்பை அடைகின்றனர். இந்தியர்கள் சிறு தொழிகள் செய்வதை நகராண்மைகழகமோ, ஊராட்சிதுறையோ விரும்புவதில்லை.  காரணம் அங்குப்  பணிபுரியும் ஊழியர்களைப் பொறுத்தவரை ஊதியத்திற்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அது அதிகமாக அன்னியத் தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கிறது.

ஐயோ! பறி போகிறதே! என்று ஒப்பாரி வைக்கிறோமே, அதற்கு யார் காரணம்? அவர்களின் வாடிக்கையாளர்கள் யார்?  இந்தியர்களின் பொருட்களை அவர்கள் விற்பனை செய்கிறார்கள் என்றால் நாம் தானே அவர்களின் வாடிக்கையாளர்கள்!  நாம் அவர்களிடம் பொருட்களை வாங்காமல் இருந்தால்  அவர்களுக்கு அந்தத் துணிச்சல் வருமா? ஏன், சீனர்களிடம் அவர்களின் பொருட்களை விற்க முடியுமா? சீனர்கள் அவர்களைத் திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள்!  நாம் தானே அவர்களின் வாடிக்கையாளர்கள்!

ஒன்றை மனதில் வையுங்கள்.  நமது பொருளாதாரத்தை நசுக்க நமது பொருளாதாரத்தையே அவர்கள் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! அவர்களின் வாடிக்கையாளர்களும் நாம் தான்! ஆனால் அவர்களின் மன உறுதியைப் பாராட்டத்தான் வேண்டும். 

வெளி நாடுகளிலிருந்து  இங்கு வந்து துணிச்சலோடு தங்களின் முன்னேற்றத்திற்காக  கையூட்டுக் கொடுத்தாவது காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே, அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

அவர்களிடம் இருக்கும் அந்தத் துணிச்சல் நமக்கு இருந்தால் எதுவும் நம்மிடமிருந்து பறி போகாது! சிறு தொழில் செய்யும் நமது மக்கள் அனைவருக்கும் வேண்டியது துணிச்சல் மட்டும் தான்!  வாழ்க! வளருக!

                

No comments:

Post a Comment