Wednesday 28 February 2018

கோசாவின் பெயரில் ஒரு தமிழ்ப்பள்ளி


தமிழவேள் கோ.சாரங்கபாணியின் பெயரில் ஒரு தமிழ்ப்பள்ளி. அதுவும் புதிய 524-வது பள்ளியாக உருவெடுத்திருக்கும் இந்தப் புதிய பள்ளிக்கு "தமிழவேள் கோ.சாரங்கபாணி" பெயர் சூட்டப்பட்டிருப்பது  நமக்குப் பெருமையே.

அது ஏற்கனவே ஜாலான் பாயா பெசார் என்ற தற்காலிகப் பெயரை  மாற்றி இப்போது இன்று (1.3.2018) அன்று காலை 10,00 மணிக்கு புதிய பெயருடன் திறப்பு விழா காண்பதாகப் பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன. அதன் பெயர் மாற்றத்திற்கானக் கல்வி அமைச்சின் உறுதிக் கடிதம் அந்தத் திறப்பு விழாவின் போது துணைக்கல்வி அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் வழுங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழவேள் கோ.சாரங்கபாணி என்னும் பெயர் நமக்குப் புதிதல்ல. தமிழர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தவர், தமிழ் மொழிக்காகப் போராடியவர். தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் முன்னோடி. மாணவர் மணிமன்றத்தின் மூலம் பல தமிழ் எழுத்தாளர்களை உருவாக்கியவர்.  தமிழர் திருநாளை தமிழரின் ஒற்றுமைத் திருநாளாக உருவாகப் பாடுபட்டவர். இன்னும் பல.

அடியேனுக்கும் தமிழ் முரசு மாணவர் மணி மன்றத்துக்கும் ஒரு சிறிய, மிகச் சிறிய தொடர்பு உண்டு.  நான் எழுதிய முதல் கட்டுரை மாணவர் மணி மன்ற இதழில் வெளி வந்திருக்கிறது! அதுவே எனக்கு ஆச்சரியம் தரும் விஷயம் தான். எனது பள்ளி ஆங்கிலப் பாடப் புத்தகலிருந்து  மொழியாக்கம் செய்யப்பட்டக்  கட்டுரை அது. அது என்ன கட்டுரை என்று எனக்குத் தெளிவில்லை. அநேகமாக ஏதோ ஒரு விஞ்ஞானியைப் பற்றிய ஒரு கட்டுரை என நினைக்கிறேன். எனக்கு ஆச்சரியம் தந்தது அது ஒரு பள்ளிப் பாடப்புத்தகலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட கட்டுரை என்று தெரிந்தும் அதனைப் பிரசுரித்து உற்சாகப் படுத்தினார்களே அதுவே எனக்குப் பெரிய மகிழ்ச்சி! ஆனால் அதன் பிறகு எந்தக் கட்டுரையும் நான்  மாணவர் மணி மன்றத்தில் எழுதவில்லை.  காரணம் என்ன எழுதுவது என்று தெரியவில்லை! அத்தோடு விட்டுவிட்டேனே தவிர மாணவர் மணி மன்ற இதழையோ, தமிழ் முரசு நாள் இதழையோ படிக்கத் தவறவில்லை!

இப்போது தமிழவேள் கோ.சா. அவர்களின் பெயர் ஒரு தமிழ்ப்பள்ளிக்குச் சூட்டுகிறார்கள் என்று செய்திகள் வந்த போது எனது கடந்த கால நினைவுகள் அவருடைய பத்திரிக்கை, அவருடைய சேவைகள் எல்லாம் ஞபாகத்திற்கு வருவதில் வியப்பில்லை. இந்த மலேசிய மண்ணில் அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்! தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை!

No comments:

Post a Comment