Sunday 4 February 2018

இந்தியர்கள் முன்னேற வில்லை!


டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி பொங்கல் நிகழ்ச்சி ஒன்றில் நல்லதொரு கருத்தை உதிர்த்திருக்கிறார்!

"டாக்டர் மகாதிர்  22 ஆண்டு காலம் பிரதமர் பதவியில் இருந்த போது இந்திய சமுதாயத்திற்கென்று எதனையும் செய்யவில்லை" என்பதாகக் கூறியிருக்கிறார் தேவமணி!     இதனைத்தான் எதிர்கட்சியினர், ஏன்? எந்தக் கட்சியிலும் சேராதவர்கள் கூட, நடுநிலையாளர்கள் கூட, இந்தியர்களுக்கு ம.இ.கா. ஒன்று செய்யவில்லை என்கிறார்கள்! 

தேவமணி இப்போது தான் இது பற்றி வாய்த் திறக்கிறார்! ஆனால் டாக்டர் மகாதிர் ஏற்கனவே இது பற்றி விளக்கமளித்திருக்கிறார்.  அன்றைய ம.இ.கா. தலைவர், சாமிவேலு இந்தியர் பிரச்சனைகள் எதனையும் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை என்பதாகக் கூறியிருக்கிறார்!

ஒரு சிலர்,  டாக்டர் மாகாதிருக்கு இந்தியர்கள் பிரச்சனைகளே தெரியாதா என்று கேள்வி எழுப்புகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ம.இ.கா.வின் ஆண்டுக் கூட்டத்தில் பிரதமரின் முன்னால் இந்தியர்களின்   பிரச்சனைகள் எழுப்பப்படுகின்றனவே என்கின்றனர். 

இங்கு நாம் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்டுக் கூட்டங்களில் பேசுப்படுவதை நாம் பொருட்படுத்தக்கூடாது. காரணம் பேராளர்களின் முன்னால் ம.இ.கா. தலைவர் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்! பேராளர்களுக்கு எதனையாவது சொல்லி அவர்களைத் திருப்தி படுத்த வேண்டும். இந்தத் 'திருப்தி'  படுத்துகின்ற வேலை தான் ஆண்டுக் கூட்டங்களில் நடக்கிறது; நடந்து கொண்டிருக்கிறது!

இந்தியர் பிரச்சனை பேச வேண்டிய இடம் அமைச்சரவைக் கூட்டத்தில் தான். அதனைத் தான் டாக்டர் மகாதிர்,  அன்றைய தலைவர் அமைச்சரவையில் எந்தப் பிரச்சனையும்  கொண்டு வரவில்லை  என்கிறார்! இன்றளவும் இதே பாணி தான் கடைப்பிடிக்கப்படுகிறது! ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! இல்லை என்று இவர்கள் மறுப்புத் தெரிவித்தால் நாமும் எதிர் கேள்வி கேட்கலாம். அப்புறம் ஏன் எந்தப் பிரச்சனையையும்,சிறிதோ பெரிதோ,  உங்களால் தீர்த்து வைக்க முடியவில்லை?   அப்படி என்றால் நீங்கள் அமைச்சரவையில் பேசவில்லை என்று தானே அர்த்தம். சீனர்களால் மட்டும் எப்படி பேச முடிகிறது?

நீங்கள் இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக எத்தனை பெரும் திட்டங்கள் போட்டாலும் ஒன்றை மறந்து விடாதீர்கள். ஏற்கனவே உங்கள் தலைவர் போட்ட திட்டங்களை அடித்துக் கொள்ள    ஆளில்லை! அதுவே போதுமானது! 

இன்றைய நிலையில் இந்தியர் முன்னேற்றம் என்றால் இந்தியர்களின் சொந்த முயற்சியால் அடைந்த முன்னேற்றம் தான். அந்தப் பெருமை உங்களுக்குப் போய் சேராது!  உங்களைப் போன்ற அரசியல்வாதிகளின் கிடு கிடு முன்னேற்றம் என்பது இந்தியர்களின் முன்னேற்றம் அல்ல! அது அரசாங்கத்தின் உங்களுக்கான இலஞ்சம்!

நீங்கள் சொன்னது சரி தான்! டாக்டர் மகாதிர் என்பதை எடுத்து விட்டு, ம.இ.கா. என்று சரி செய்து கொள்ளுங்கள்!


No comments:

Post a Comment