Friday 23 February 2018

மிகக் கேவலமான அரசியல்!



இதோ ஓர் அரசியல்வாதி தெரிந்து  பேசுகிறாரா அல்லது தெரியாமல் பேசுகிறாரா என்பது நமக்குப் புரியவில்லை!

நெகிழிப்பைகளுக்கு (பிளாஸ்டிக் பைகள்) ஏன் கடைக்காரர்கள் 20 காசுகள் கட்டணம் விதிக்கிறார்கள் என்பது கூட தெரியாத (அல்லது தெரிந்து தானோ?) அரசியல்வாதிகள் நம்மிடையே இருப்பது கண்டு நமக்கே வெட்கமாயிருக்கிறது! 

இந்த  நெகிழிப்பைகளினால் சுற்றுச் சூழல் எத்தகைய பாதிப்புக்கள்  அடைகின்றன  என்று உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் "நாங்கள் பதவிக்கு வந்தால் அதனை நாங்கள் இலவசமாக்குவோம்!" என்று கூறுவது பைத்தியங்களின் பைத்தியக்காரத்தனம்!

நெகிழிப்பைகளினால் அடைகின்ற பாதிப்பு என்பது சாதாரணமான விஷயமா என்ன?சென்று ஆண்டு ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. ஒரு திமிங்கலம் கடற்கரை ஓரமாக  உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.  காரணம் தெரியவில்லை. அதனை வெட்டிப் பார்த்ததில் அதன் வயிற்றில் முற்றிலுமாக நெகிழிப்பைகள்! ஆக, திமிங்கலங்கள் இந்தப் பைகளை ஏதோ உணவு என்று நினைத்து  தின்கின்றன என்று புரிகிறது. திமிங்கலங்கள் மட்டும் அல்ல கடல் வாழ் உயிரினங்கள் அனைத்துக்கும்  இந்த பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். அவைகள் உணவாக நினைத்து இந்த நெகிழிப்பைகளைத் தின்கின்றன. எப்படிச் சுற்றிச் சுற்றி வந்தாலும் கடைசியாக அது மனிதனிடம் தான் வந்து சேரும்!

நெகிழிப்பைகள் மட்கிப் போவதில்லை. அவைகள் மட்கிப் போவதற்கு பல நூறு ஆண்டுகள், ஏன்? 1000 ஆண்டுகள் கூடப் பிடிக்கும் என்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நமது சுற்றுச்சூழல் மிகப்பெரியளவு பாதிப்படைகின்றன. இந்தப் பைகள் மட்கிப் போகாவிட்டால் நாம் வாழும் இந்த மண் தனது சக்தியை இழந்து விடும். உயிரை இழந்து வெறும் சக்கையாகி விடும். மண்,  நீரை உரிஞ்சும் சக்தியை இழந்து விடும்.

இன்றைய நிலையில் கடைக்காரர்கள் நெகிழிப்பைகளுக்கு 20 காசு கட்டணம் விதிக்கிறார்கள் என்றால் அது பணம் சம்பாதிக்க அல்ல. வாடிக்கையாளர்கள் இந்தப் பைகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் காரணம். அரசியல்வாதிகள் எல்லாவாற்றிலும் அரசியலைப் பார்க்காமல் மக்களின் நலனைப் பார்க்க வேண்டும்.

இது போன்ற கேவலமான அரசியல் நமக்கு வேண்டாம்!

No comments:

Post a Comment