Friday 9 February 2018

வாழ்த்துகிறேன் கேசவன் சார்!


சில தினங்களுக்கு முன் "வணக்கம் மலேசியா" இணையத் தளத்தில் படித்த செய்தி மனதைக் கவர்ந்தது.

பெட்டாலிங் ஜெயா சரஸ்வதி ஆரம்பத் தமிழ்ப்பள்ளி நுழை வாயிலின் முன்புறம்,  கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் பிரேத வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அதுவும் இரண்டு நாட்களாக!  நிறுத்தப்பட்டதோடு சரி! அதனைக் கண்டு கொள்ள ஆளில்லை. ஒரு வேளை மருத்துவமனைக்குத் தேவை இல்லாத வாகனமோ,  தெரியவில்லை! பள்ளிக்கு ஒர் இடைக்கால  இடைஞ்சல் என்பதைத் தவிர வேறு எந்தப் பாதிப்பும் இல்லை!

வழக்கம் போல சமூக ஊடகங்கள், விமர்சனங்கள் என்று தெறித்துக் கொண்டிருந்த நேரம்! ம.இ.கா. இளைஞர் பிரிவின் சமூகத் தகவல் பிரிவின் தலைவர் கேசவன் கந்தசாமி எதிர்பாராத வகையில் களத்தில் இறங்கினார்!  பள்ளி நுழைவாயிலை அடைத்துக் கொண்டிருந்த அந்த வாகனத்தை அங்கிருந்து அகற்றும் பணியில் இறங்கினார். முதலில் அவரும் அவரது நண்பரும் சேர்ந்து வாகனத்தைத் தள்ளி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் கார் இழுவை வாகனம் வந்து சேர்ந்ததும் பிரேத வாகனம் முற்றிலுமாக அங்கிருந்து அகற்றப்பட்டது..

இதனை ஏன் ஒரு முக்கிய செய்தியாக நான் எடுத்துக் கொண்டேன்? இப்போதெல்லாம் ஏதாவது ஒர் எதிர்பாராத செய்தி  கிடைத்தால் அல்லது பார்த்தால் உடனே அதனை முகநூல், வாட்ஸப் என்று ஒவ்வொருவரும் "நான் தான் முதலில் பார்த்தேன்!" என்று காட்டிக் கொள்ள பதிவேற்றம் செய்வதில் முனைப்புக் காட்டுகிறார்கள்! இதில் என்ன பெருமை? ஏதோ ஒரு ஆபத்து, அவசரம். நம்மால் என்ன செய்ய முடியும் என்கிற எண்ணமே இப்போது யாருக்கும் தோன்றுவதில்லை. நம்மால் முடியாவிட்டாலும் காவல்துறைக்கோ, சம்பந்தப்பட்டவர்களுக்கோ தெரியப்படுத்தினாலும் அதுவே ஒரு பெரிய உதவி என்பதை நாம் உணர வேண்டும்.  செய்தி கிடைத்தால் தானே நடவடிக்கை எடுக்க முடியும்!

ஏன் அந்தப் பள்ளி ஆசிரியர்களுக்குக் கூட அவர்கள் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்கவில்லை! அல்லது நமக்கென்ன என்கிற அலட்சியம்! அது ஒரு செய்தியாகி அதனைப் பெரிதுப் படுத்தி ....அப்புறம் அதற்கு ஓர் ஆர்ப்பாட்டம்...! அப்புறம் எதிர்கட்சிகள் அதனையும் கையிலெடுத்து ஆட்சேபம் தெரிவிப்பது! எல்லாம் சலித்துப் போய் விட்டது!

இந்த நேரத்தில் தடாலடியாக பிரச்சனையைக் கையிலெடுத்து அதனைத் தீர்த்து வைக்க களம் இறங்கினாரே கேசவன் கந்தசாமியும் அவரது நண்பரும் நெகிரி மாநில ம.இ.கா. இளைஞர் பகுதித் தலைவர் சண்முகம் சுப்பிரமணியமும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்! 

இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். பொதுவாக பேசவது அதுவும் வெட்டிப்பேச்சு பேசவது  என்றால் நம்மை அடித்துக் கொள்ள ஆளில்லை!   களத்தில் இறங்கி வேலை செய்யத்தான் யாருமில்லை! இந்த நேரத்தில் இப்படியும் இளைஞர்களா என வியக்கிறேன்!

நண்பர்களே! உங்கள் இருவருக்கும் மீண்டும் எனது வாழ்த்துகள்! தொடர்ந்து  இந்த சமுதாயம் உயர நீங்கள் பணி செய்ய வேண்டும்! 


No comments:

Post a Comment