மலேசிய இந்தியர் மக்கள் தொகையில் சரிவு ஏற்பட்டிருப்பதாக புள்ளியல் துறை அறிவித்திருக்கிறது. ஏற்கனவே இது பற்றி சர்ச்சைகளும் எழுந்திருக்கின்றன. இந்தியர்களின் கணக்கெடுப்பு சரியாக அமையவில்லை என்பதாகப்பேசப்பட்டது. அவ்வளவு தான். மேலும் அது பற்றிப் பேசினாலும் காது கொடுப்பார் யாருமில்லை!
இந்தியர்கள் என்றால் எது வேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம் என்பது தான் நாட்டு நிலைமை.
ஆனாலும் இதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ள ஒன்றுமில்லை. உருப்படி இல்லாத ஒன்பது பிள்ளைகளைப் பெற்றுப்போடுவதை விட உருப்படியாக ஒன்று இரண்டைப் பெற்று மேன்மையான வாழ்க்கை வாழவதுதான் இன்றைய நிலையில் சரியான முடிவாக இருக்கும்.
இந்தியாவில் பிராமணர்கள் இந்திய மக்கள் தொகையில் மூன்று விழுக்காட்டினர் தான் . ஆனால் அவர்கள் தான் இந்தியாவை ஆளுகின்றனர்! அனைத்துத் துறைகளிலும் அவர்கள் தான் முன்னணி வகிக்கின்றனர். தொண்ணூற்றேழு விழுக்காடு இந்தியர்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளனர்! ஆக மிகச் சிறுபான்மை எனப்படும் பிராமணர்கள் என்ன தாழ்ந்து போனார்கள்? கல்வி ஒன்று மட்டுமே அவர்களின் உயரத்தை நிலைநிறுத்தியது. நமக்கும் அதே நிலை தான். கல்வி மட்டும் போதும். எந்தக் காலத்திலும் கல்வியில் நாம் தான் முன்னணியில் இருக்க வேண்டும். அது போதும் நமக்கு மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிடும். பட்டம் பதவிகள் கிடைத்துவிடும்.
இந்தோனேசிய மக்கள் தொகையில் சீனர்கள் மூன்று விழுக்காட்டினர் தான். ஆனால் நாட்டின் பொருளாதாரம் அவர்கள் கையில்! பெரும் தொழில்களானாலும் சரி, சிறிய தொழில்களானாலும் சரி அவர்கள் தான் செய்கின்றனர். என்ன தான் அரசாங்கம் உள்ளூர் மக்களுக்கு வாய்ப்புக்கள் கொடுத்தாலும் சீனர்களின் வியாபார ஆதிக்கத்தை யாரராலும் அசைக்க முடியவில்லை என்பது தான் உண்மை. ஆமாம், மூன்று விழுக்காடு தான் ஆனால் அதன் ஆழம் அகலத்தை அகற்றிவிட முடியுமா? அரசாங்கத்தின் கஜானாவை யார் நிரப்புகிறார்கள்? சீனர்கள் தான். ஒரு சிறிய விழுக்காடு தான். ஆனால் அதன் சக்தியைப் பார்த்தீர்களா? அந்த பலம் தான் நமக்குத் தேவை.
என்ன இருக்கிறதோ இல்லையோ இந்த உலகம் நம்முடைய பொருளாதாரத்தை உற்றுக் கவனிக்கிறது. கல்வியை உற்று நோக்குகிறது. ஒருவன் கல்வி கற்றால் அவனின் வெற்றி உறுதி. பொருளாதாரத்தில் வெற்றி பெற உழைக்கத் தயங்கக் கூடாது. சீனர்கள் உழைக்கத் தயங்குவதில்லை.
இந்தியர்களில் குஜாராத்தியர் வியாபாரம் தவிர்த்து வேறு எது பற்றியும் சிந்திப்பதில்லை. அவர்களிடம் தான் தங்கம் கொட்டிக்கிடக்கிறது. தமிழர்களில் முஸ்லிம்கள், செட்டியார்கள் - இவர்களுக்கு வியாபாரம் மட்டும் தான் அவர்களின் பிழைப்பு. மற்ற சிந்தனைகள் எதுவும் எழுவதில்லை. நாமும் நமது சிந்தனை ஓட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதனால் மக்கள் தொகையில் சரிவு என்றால் கவலைப்பட் ஒன்றுமில்லை. நம்முடைய பொருளாதார வலிமை தான் கணக்கில் எடுக்கப்படும். சீனர்கள் கேட்காமலேயே பல விஷயங்கள் கிடைத்து விடுகின்றன. நமக்குக் கிடைப்பதில்லை. காரணம் நாம் இன்னும் அரசாங்கத்தை நம்பிதான் இருக்கிறோம். மற்றவர்களை நம்பியிருப்போரை யார் மதிப்பார்?
No comments:
Post a Comment