ம.இ.கா.வின் இது போன்ற அரசியலைத்தான் நாம் வெறுக்கிறோம்!
ஏற்கனவே அவர்களின் அரசியலைப்பற்றி நமக்குத் தெரியாமலில்லை. கூடவே ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு அவர்களுக்குத் 'தண்ணி' வாங்கிக் கொடுப்பது, உணவுகளை வாங்கிக் கொடுப்பது -இப்படி எல்லாம் செய்வதால் யாருக்கு என்ன இலாபம்? சாப்பிடுகிறவன் அந்த நேரத்தில் கொஞ்சம் மகிழ்ச்சி அடைவான்! படித்தவனாக இருந்தால் அவனுக்கு ஏதாவது பட்டம் கிடைக்கும். அவனுக்கு அது போதும்!
ஆனால் இப்படிச் செய்வதால் இந்த சமுதாயத்திற்கு என்ன கிடைக்கப் போகிறது? சமுதாய பிரச்சனைகள் தீர்க்கப்படப் போகிறதா? நம்மிடையே நிறைய பிரச்சனைகள் உண்டு. பிரச்சனைகளை விட்டுவிட்டு இதுபோன்ற சில்லறைத்தனங்களால் என்னத்தை நீங்கள் சாதிக்கப் போகிறீர்கள்?
கோலகுபுபாரு வீடமைப்புத் திட்டம் என்பது ம.இ.கா. காலத்துப் பிரச்சனை. அப்போது இவர்கள் தான் பதவியில் இருந்தார்கள். ஒரு மைல் தூரத்திற்கு ஒரு கிளை வைத்திருந்தார்கள். அந்தத் தொகுதியில் ஐந்து தோட்டங்கள் எல்லா தோட்டங்களிலும் கிளைகள் இருந்திருக்க வேண்டும். ஏன் அவர்களால் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை? அவர்கள் செய்ய மாட்டார்கள்! காரணம் இது தின்னு கொழுத்த கூட்டம்! அரசாங்கத்திடமிருந்து இன்னும் எவ்வளவு கறக்கலாம் என்று நினைக்கிற கூட்டம்!
அவர்களைப்பற்றி அறிந்திருப்பதால் தான் இன்று மக்கள் அவர்களை ஒரேடியாக ஒதுக்கித் தள்ளுகிறார்கள்! அவர்களின் தானைத்தலைவர் போகும் போதே அனைத்தையும் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டார். அவர்களுக்கு இந்தியரிடையே எதிர்காலம் இல்லை. ஆனால் அவர்களுக்கு ம.இ.கா. தேவைப்படுகிறது. கல்வி நிலையங்கள் இருக்கின்றன. அதை வைத்தே காலத்தை ஓட்டலாம்! ஆனால் அதன் மூலமும் இந்திய மாணவர்களுக்குப் பயனில்லை!
நமது மக்கள் இன்னும் திருந்தவில்லை. ஆட்டுக்கறி விருந்து வைத்தால் அதனைப் புறக்கணித்திருக்க வேண்டும். மக்களுக்கு ஒரு வேண்டுகோள். இனி இது போன்ற சில்லறத்தனங்களை யார் செய்தாலும் அவர்களைப் புறக்கணியுங்கள். அது போதும். அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்.
கோலகுபுபாருவில் ஒன்று சேர்ந்திருக்கிறோம். அதனையே மீண்டும் மீண்டும் எதிரொலிப்போம்!
No comments:
Post a Comment