"முஸ்லிம்களுக்கு மட்டும்" என்று ஆரவாரத்தோடு இயங்கி வந்த சலவை நிலையம் ஒன்று ஜொகூர் சுல்தானின் கண்டனத்துக்கு உள்ளானது! முவார், ஜொகூரில் உள்ள இந்த நிலையம் சமீப காலமாக மக்களை முகம் சுளிக்க வைக்கும் நிலைக்கு ஆளாகியது.
இதனை அறிந்த ஜொகூர் சுல்தான் அவர்கள் உடனடியாக தனது கடுமையான எச்சரிக்கையை அந்த நிலையத்தின் உரிமையாளருக்கு விடுத்தார். "இது ஜொகூர் மாநிலம். ஜொகூரில் வாழும் அனைத்து ஜொகூர் மக்களுக்காக உள்ள மாநிலம். இது போன்ற தீவிரவாதத்தை என்னால் ஏற்க முடியாது. இங்கு நடப்பது தலிபான் ஆட்சி அல்ல. இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்களுக்கு ஏற்ற நாடு ஆப்கானிஸ்தான். நீங்கள் அங்குப் போய் தாராளமாக உங்கள் தொழிலைச் செய்யலாம்."
இப்போது அந்த சலவை நிலையம் குறிப்பிட்ட அந்த விளம்பரப் பலகையை அப்புறப்படுத்தி விட்டதாகப் சொல்லப்படுகின்றது. அந்தச் சலவை நிலையத்தின் உரிமையாளர் சுல்தானின் மன்னிப்புக்காக தேதியும் கேட்டிருக்கிறார்.
இதற்கு முன்னர் அந்த உரிமையாளர் பேசும் போது "நான் ஒரு முஸ்லிம். ஒரு முஸ்லிமாக எனது கடமையை நான் செய்கிறேன்" என்பதாக அறிவித்திருந்தார்.
ஆனாலும் மற்ற மாநிலங்களின் சுல்தான்கள் இப்படி ஒரு முடிவை எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. மற்ற மாநிலங்களின் சுல்தான்களை விட அந்தந்த மாநிலங்களின் முப்திகளே அதிக அதிகாரம் பெற்றவர்களாக இருக்கின்றனர். இருப்பினும் வருங்காலங்களில் மற்ற மாநில சுல்தான்களும் ஜொகூர் சுல்தானின் பாதையைப் பின்பற்றுவார்கள் என நம்பலாம். அது சாத்தியமே. காரணம் தீவிரவாதம் என்பதெல்லாம் நமது நாட்டிற்கு ஒத்து வராது என்பது அனைவரும் அறிந்ததே. பல இனங்களும், சமயத்தினரும் கலந்து வாழும் ஒரு நாட்டில் இப்படியெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது. மேலும் இப்படி "முஸ்லிம்கள் மட்டும்" என்பதனால் மட்டுமே ஒருவர் நல்ல முஸ்லிம் ஆகிவிட முடியாது! அதற்கு நிறைய வேலைகள் உண்டு!
இந்த நேரத்தில் இன்னொன்றையும் நான் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். ஜொகூர் மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் அல்லாதவரும் சென்று வரலாம். நல்ல உடை என்பதே முக்கிய நிபந்தனை. மற்ற மாநிலங்களில் சாத்தியமல்ல!
No comments:
Post a Comment