Thursday 7 June 2018

இப்படித்தான் தமிழை வளர்க்கிறார்கள்..!

தமிழை வளர்க்க வேண்டும் என்கிறோம். எல்லாத் துறைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட  வேண்டும் என்கிறோம்.  தவறில்லை. ஆனால் நாம் எந்த அளவுக்கு தமிழைப் பயன்படுத்துகிறோம் என்பது கேள்விக்குறியே!

ஜனநாயக செயல் கட்சி தனது கூட்டங்களில், அவர்கள் கூடும் இடங்களில் சீன மொழியைப் பயன்படுத்த தவறுவதில்லை. அங்கும் ஒரு தமிழன் இருப்பான், பதவியில் உள்ளவனாகவும் இருப்பான். அவனோ ஏன் தமிழ் இல்லை என்பது பற்றி அவன் சிந்திப்பதும் இல்லை, வாய் திறப்பதும் இல்லை!  அவ்வளவு பயம். எல்லாம் எஜமான விசுவாசம்! 

சரி நமது நிலை என்ன? தமிழர்கள் கூடும் இடங்களிலெல்லாம் தமிழைப் பயன் படுத்துகிறோமா? தமிழர்கள் கூடும் இடங்களிலெல்லாம் தமிழர்களுக்குத் தலைமை தாங்குகிறவன் தமிழன் இல்லை! அவனுக்குத் தமிழ் தேவை இல்லை.  அவன் தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ளுகிறான். ஆனால் அவன் தமிழனில்லை! அவனுக்குத் தமிழை விட சமஸ்கிருதம் இன்னும் மேல். இதையெல்லாம் கண்டும் காணாமல்  நாம் இருக்கிறோம்.  இவர்களை எல்லாம் ஒழிக்கும் காலம் வந்து விட்டது.

ஏன் இவ்வளவு பீடிகை? பக்காத்தான் கட்சிக்கு ஆதரவு கொடுத்த ஒரு சிறு இந்தியர் கட்சி தனக்குப் பலம் சேர்க்க புதிய அங்கத்தினர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது. நாமும் அவர்களை வாழ்த்துகிறோம். அவர்களுடைய விண்ணப்ப பாரங்களைப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. தலைவரோ தமிழுக்காக தலையையே கொடுப்பேன் என்கிறார். ஆனால் அவருடைய  கட்சியின் விண்ணப்ப பாரத்தில் அனைத்தும் ஆங்கிலத்தில்! இது சரி என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  நாமே நமது மொழிக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை என்றால் வேறு யார் கொடுப்பார்?

நமது சீன நண்பர்கள் அவர்கள் வெளியிடும் பாரங்களைப் பாருங்கள் சீனம், ஆங்கிலம் கலந்து தான் இருக்கும்.  நாம் அவர்களைப் போலவே  தமிழும், ஆங்கிலமும் கலந்த பாரங்களை வெளியிடும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும், இதையெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை. தானாக அது வர வேண்டும். அது தான் மொழிப்பற்று என்பது.

ந்ண்பர்களே! தலைவர்களே! அரசாங்கம் தான் அனைத்தும் செய்ய வேண்டும் என்று மயங்கிக் கிடக்காமல் நாமும் நமது கடமைகளைச் சரிவர செய்ய வேண்டும் என்பதும் உண்மை தான்! நமது மொழிப்பற்றைக் காட்டுவோம்!

No comments:

Post a Comment