Friday 22 June 2018

வாக்களிக்கும் வயது 18.......!

இத்தனை ஆண்டு காலம் 21 வயது ஆகும் போது தான் நாட்டின் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை நாம் பெற்று வந்தோம். ஒரு வேளை அதில் மாற்றும் வருமோ?

மாற்றம் வேண்டும் என்பது தான்  நமது பிரதமர் டாக்டர் மகாதிர் மலேசியர்களுக்குச் சொல்லும் ஆலோசனை. ஒருவர் 18 வயது ஆகும் போது வாக்களிக்கும் தகுதியைப் பெற்று விடுவதற்கான அனைத்துத் தகுதிகளும் அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது என்கிறார் பிரதமர்.

18 வயது என்னும் போது நமக்கு அது புதிதாக இருக்கலாம். ஏதோ 'சின்ன பசங்க' என்கிற ஒரு எண்ணம் நமக்கு உண்டு. ஆனால் அவர்கள் 'பெரிய பசங்க' என்பதாகத்தான் குறைந்தபட்சம் வளர்ந்த நாடுகள் நினைக்கின்றன.  அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன்  மட்டும் அல்ல தாய்லாந்து,  இந்தோனேசியா போன்ற நாடுகளும் தங்களது  18 வயது இளந்தலைமுறையை வாக்காளர்களாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகத் தான் தோன்றுகிறது. இந்த இளந்தலைமுறை தான் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய சக்திப் படைத்ததாக நான் நினைக்கிறேன். அவர்களுக்கு எல்லாத் தகுதிகளும் உண்டு. படித்தவர்களாக இக்கிறார்கள். அரசியல் ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள்.  அநீதிகளைக் கண்டு பொங்கி எழுபவர்களாக இருக்கிறார்கள். நடந்த முடிந்த 14-வது பொதுத் தேர்தலில் இளைஞர்கள் பங்கு அதிகம். அதனால் தான் பக்காத்தான் வெற்றி மகத்தானதாக இருந்தது. இதுவே 13-வது பொதுத் தேர்தலில், 18 வயதுடையோர் வாக்காளர்களாக இருந்திருந்தால், அப்போதே எதிர்கட்சியினர் வெற்றி பெற்றிருப்பர்.

18 வயது என்கிற போது அவர்களைச் சுற்றி நடக்கும் அநீதிகளை அவர்களால் பார்த்துக் கொண்டிருக்க இயலாது. இயற்கையாகவே அநீதிகளை எதிர்க்கும் போக்கு அவர்களிடம் உண்டு.  இளம் சந்ததியினர் என்பதால் அவர்களிடம் உள்ள போராடும் குணம் தவிர்க்க முடியாதது. ஆட்சி மாற்றம் என்றால் அது அவர்களால் உடனடியாகக் கொண்டு வர முடியும். சகித்துக் கொண்டு போகும் போக்கு வயதானத் தலைமுறையிடம் உண்டு. ஆனால் இளந்தலைமுறை தட்டிக் கேட்கும் தன்முடையது.

வாக்களிக்கும் வயதை 18-க்குக் கொண்டு வர வேண்டும் என்பதை நான் வர வேற்கிறேன். அனைத்து மலேசியரும் வர வேற்பர் என்பதாகவே நான் கருதுகிறேன். 

பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments:

Post a Comment