Saturday 23 June 2018

மாலைகள் தேவையா...?


"மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்" என்பது கவியரசர் கண்ணதாசனின்  வரிகள்.

அந்த "நீ" யார் என்பது தான் நம்முடைய பிரச்சனை!  நம்முடைய ஜால்ராக்கள் செய்த குழப்படிகளினால் நாம் யாருக்கு மரியாதைச் செய்ய வேண்டும், யாருக்குச் செய்யக் கூடாது  என்பதில் நமக்கும் குழப்பம் ஏற்பட்டு விட்டது!

நாம்  யாருக்குச் செய்யக் கூடாது  என்பது தான் இப்போது நான் சொல்லப் போவது.  குறிப்பாக அரசியல்வாதிகளைத்தான் நான் குறி வைக்கிறேன். நிச்சயமாக அரசியல்வாதிகளுக்கு மாலை அணிவிப்பது மிகப்பெரிய தவறு.

அரசியல்வாதிகள் யார்? மக்களுக்குத் தொண்டு செய்ய பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள். தொண்டு மட்டும் தான் அவர்களது குறிக்கோள்.  நம்மிடமிருந்து மாலை மரியாதைகளைப் பெற பொது வாழ்க்கைக்கு அவர்கள் வந்தவர்கள் அல்ல. அரசியல்வாதிகள் யோக்கியதை என்ன என்பதை மலாய்க்காரர்களும், சீனர்களும் புரிந்து வைத்திருக்கின்றனர். அவர்கள் எந்த அரசியல்வாதிகளுக்கும் மாலை மரியாதைகள் செய்வதில்லை. நமக்கு மட்டும் எப்படி,  அப்படி ஒரு பழக்கம் ஏற்பட்டது?  மாலை மரியாதை அணிவித்தல் என்பது நமது அடிமைப் புத்தியைக் காட்டுகிறது.  அந்த மாலை மரியாதைகளை ஏற்கும் அரசியவாதிகள் நம்மை அடிமைகளாக நினைக்கிறார்கள். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மந்திரி பெசார்கள் - இவர்களுக்கெல்லாம் மாலை அணிவிப்பவர்கள் யார்? நாம் தான் செய்கிறோம். வேறு எந்த சமூகமும் செய்வதில்லை! 

சரி, கடந்த கால அனுபவங்களைப் பார்ப்போம்.  சாமிவேலு காலத்திலிருந்து எத்தனை எத்தனை அரசியல்வாதிகள் எத்தனை எத்தனை மந்திரி பெசார்கள், எத்தனை எத்தனை பிரதமர்கள் -  இவர்களுக்கெல்லாம் ஆளுயர மாலைகளைப் போட்டு என்ன நடந்தது? ஒன்றுமே நடக்கவில்லை!   ஆமாம், அடிமைகளுக்கு எவன் உதவி செய்வான்?  மாலை போட்டவனுக்கு எதாவது பிச்சை கிடைக்கும்!  மக்க்ளுக்கு என்ன கிடைக்கும்?  ஒன்றுமே கிடைக்கவில்லை என்பது தான் கடந்த கால நிகழ்வுகள் காட்டுகின்றன.

இனி மேலும் இது தொடர வேண்டுமா என்பது தான் எனது கேள்வி. அரசியல்வாதிக்கு மாலை போடுவது நமது அடிமைப்புத்தியைக் காட்டுகிறது.  இத்தனை ஆண்டுகள்  அடிமைகளாக இருந்தது போதும். இனி மேலாவது நாம் அடிமைகள் இல்லை என்பதைக் காட்டுவோம்.

மாலைகள் தேவையா? ஆம்!  அரசியல்வாதிக்குத் தேவை இல்லை!

No comments:

Post a Comment