Thursday 21 June 2018

இது தான் எடுத்துக்காட்டு...!


சமீபத்தில்  நான் தெரிந்த கொண்ட இரண்டு செய்திகள் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன.

இரண்டுமே தமிழ்ப்பள்ளி சம்பந்தப்பட்டது. பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவனேசன் தனது பிள்ளைகள் அனைவரும் தமிழ்ப்பள்ளியில் படித்தவர்கள் என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார், அதே போல  மனிதவள அமைச்சர் குலசேகரன் அவர்களும் தனது பிள்ளைகள் தமிழ்ப்பள்ளிகளில் படிப்பதாகவும் ஒரு நிகழ்வில்  பேசியிருந்தார்.

கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. இது தான் உதாரணத் தலைமைத்துவம்.  தலைவன் எவ்வழியோ அவ்வழியே குடிகள்.

எனக்குத் தெரிந்து இந்தியர்களுக்குத் தாயும் தந்தையுமாக விளங்கிய ம.இ..கா. வினர் அப்படி யாரும் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பியதாகக் கேள்விப்படவில்லை! அப்பன் தமிழ்பள்ளிக்குப் போயிருப்பான். நிச்சயமாக அவன் பிள்ளைத் தமிழ்ப்பள்ளியின் பக்கம்  கால்வைத்துக் கூட படுத்திருக்கமாட்டான்!  தமிழ்ப்பள்ளிகளையே கேவலமாக நினைப்பவன்.தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவுவான்  என்று  தப்புக்கணக்குப்  போட்டது தான்  நமது குற்றம்.  அதனால் தான் ம.இ.கா. என்னும் பேரியக்கம், தமிழர்களால் வளர்க்கப்பட்ட பேரியக்கம், தமிழ்,  தமிழ்ப்பள்ளிகள் என்று வந்த போது எவனும் கண்டு கொள்ளவில்லை! நல்ல வேளை அவர்கள் இனித் தலை தூக்கமாட்டார்கள்! பாடை கட்டி விட்டோம்!

இந்த நேரத்தில் அமைச்சர் குலசேகரன் சொன்ன ஒரு செய்தியையும் இங்கு நான் குறிப்பிட வேண்டும். அவருடைய குழந்தைகள்  படிக்கும் பள்ளியில் மாலை நேரத்தில்  சீன மொழியும் கற்பிக்கப்படுவதாக அவர் சொல்லியிருந்தார். இது நாள் வரை நான் அப்படி ஒரு செய்தியைக் கேள்விப்பட வில்லை. அது ஒரு நல்ல செய்தியாகவே இருந்தது. ஏன், இதனை மற்றப்  பள்ளிகளும்  பின்பற்றலாமே என்று மனதிலே தோன்றியது.

என்னைப் பொறுத்தவரை இனி வருங்காலங்களில்  ஒவ்வொரு  மாணவனும்  மூன்று மொழிகள்  தெரிந்து கொள்ளுவது அவர்களின்  வாழ்க்கை  முன்னேற்றத்திற்கு  உதவியாக இருக்கும்.  நமது நாட்டின் தலையாய மொழிகள் என்றால் மலாய், சீனம், தமிழ். இந்த மூன்று மொழிகளையும் தெரிந்து வைத்திருப்பது என்பது கூடுதலானத் தகுதி எனலாம்.  சீன மொழி தெரிந்தவர்களுக்கு சீன நிறுவனங்கள் வேலை வாய்ப்புக்களைக் கொடுக்கின்றன. அது மட்டும் அல்லாமல் அவர்களின் மொழிக்கும் சீனர்களின் தொழில் முன்னேற்றத்திற்கும் பெரும் பங்குண்டு. அவர்களின் மொழியைத் தெரிந்து கொள்ளுவதன் மூலம்  தான் அவர்களின்  குணாதிசியங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

எது எப்படியோ மாண்புமிகு சிவனேசனும், மாண்புமிகு குலசேகரனும் நமக்கு நல்ல எடுத்துக்காட்டுக்களாகத்    திகழ்கிறார்கள்.

வாழ்க தமிழினம்! வாழ்க தமிழ்!

No comments:

Post a Comment