Thursday, 28 June 2018
கல்வி துணையமைச்சர் இந்தியரா...?
துணைக்கல்வி அமைச்சர் இந்தியராக இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் சொல்லி வருவது சரிதானா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
கடந்த அரசாங்கத்தில் துணைக்கல்வி அமைச்சராக இருந்த கமலநாதன் செய்த அட்டூழியங்களையும் அசிங்கங்களையும் பார்த்த பிறகு இந்தப் பதவிக்கு ஓர் இந்தியர் வரலாமா என்று நினைக்கத் தோன்றுகிறது! கமலநாதன் தமிழரா என்பது எனக்குத் தெரியாது. தமிழாவது அவருக்குத் தெரியுமா என்பதும் எனக்குத் தெரியாது.ஆனால் அவர் செய்த காரியங்கள் அனைத்தும் தமிழுக்கும், தமிழ்ப்பள்ளிகளுக்கும் எதிரானவை. அதனால் அவர் ஓர் இந்தியராகத்தான் இருக்க வேண்டும்! தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன் அவரைப் போல தமிழுக்கு எதிரியாகச் செயல்பட்டிருக்க முடியாது என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
துணைக்கல்வி அமைச்சராக ஓர் இந்தியர் வரவேண்டும் என்று வாதிடுபவர்கள் கமலநாதனைப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் தமிழ்ப்பள்ளிகளுக்கு எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையே தமிழ் மொழிக்கு எதிராகத் தூண்டிவிட்டவர் கமலநாதன். அவர் காலத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தமிழ் மொழிக்கோ அல்லது தமிழ்ப்பள்ளிகளுக்கோ அவர் செய்யவில்லை! பேசத் தெரியாதவன், பேச அச்சம் உள்ளவன் அரசியலுக்கு வரக்கூடாது! சொந்தப் பிழைப்பைப் பார்த்துக் கொள்ளலாம்!
இந்த நேரத்தில் இப்போது துணைக்கல்வி அமைச்சராக ஓர் இந்தியர் வரவேண்டும் என்னும் குரல் ஒலிக்கத் துவங்கி இருக்கிறது. "சும்மா ஏதோ ஒரு தமிழன் பிழைத்துவிட்டுப் போகட்டுமே" போன்ற அனுதாபங்கள் எல்லாம் இனி வேண்டாம்! அவன் பிழைத்து விட்டுப் போகட்டுமே என்று நாம் நினைத்தாலும் அவன் சமுதாயத்திற்குத் துரோகம் அல்லவா செய்து விட்டுப் போகிறான்? துரோகிகளை வளர்த்து விடுவது நமது வேலையல்ல. அது அவன் அப்பனே சொல்லிக் கொடுப்பான்!
ஒரு துணைக்கல்வி அமைச்சராக ஓரு தமிழன் வர வேண்டும். அவன் தமிழ் தெரிந்தவனாக இருக்க வேண்டும். இனப்பற்று, மொழிப்பற்று உள்ளவனாக இருக்க வேண்டும். பாருங்கள்! அகப்படாமலா போய் விடுவான்.
நல்லதே நடக்கும் என நம்புவோம்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment