Sunday 17 June 2018

"காக்காய்கள்" வேண்டாமே..!


இன்றைய நாளிதழில் ஒரு செய்தி. இது பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். ஆனாலும் இது போன்ற செய்திகள் மீண்டும் மீண்டும் வரும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது.

ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ வேலை செய்ய முடியாதபடி ஒரு கூட்டம் அவர்களைச் சுற்றி நின்று கொண்டே உசுப்பிக் கொண்டிருப்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.  அது முன்னர் ம.இ.கா.வில்  தொடர்ந்து கொண்டே இருந்தது; அதற்கு முடிவே இல்லை! இப்போது பக்காத்தானிலும் தொடர்கிறது.

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கேசவனுக்கு முழு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்பதாக ஒரு குழுவினர் பிரதமரிடம் பரிந்துரை செய்திருக்கின்றனர். ஏற்கனவே யார் வந்தாலும் இப்படித்தான் பரிந்துரை என்று சொல்லி ஆர்ப்பாட்டம் வரை சென்றதையெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். இந்த ம.இ.கா. கலாச்சாரத்தை ஒழித்துக் கட்ட வேண்டும்.  ஒரு குழு பரிந்துரை செய்கிறது என்றால் அந்தக் குழு பிரதமருக்கு நெருக்கம் கொடுக்கிறது என்று பொருள். பிரதமருக்கு இந்த கேசவன் யார் என்று தெரியாதா?  அல்லது அவர் சார்ந்த கட்சித் தலைவருக்கு அவரைப்பற்றி ஒன்றுமே தெரியாதா? 

இப்படிப் பரிந்துரை செய்வது மிகவும் கீழ்த்தரமான செயல் என்பது தான் எனது கருத்து. அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் தான் அவரால் மக்களுக்குச் சேவையாற்ற முடியுமா? அவரது கட்சி அவரை சுங்கை சிப்புட் தொகுதிக்கு நிறுத்திய போது அவர்  தான் ஒரு அமைச்சராக வேண்டும் என்னும் கனவோடு தான் களம் இறங்கினரா?  முதலில் அவர் வெற்றி பெறுவரா என்பதே அவருக்குத் தெரியாது. இந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் சார்பில் யார் போட்டி போட்டிருந்தாலும் அந்த வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார் என்பது தான் உண்மை.  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் பக்காத்தான் சார்பில் நின்றிருந்தால் கேசவனை விட அவர்  இன்னும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் கூட ஜெயித்திருக்கலாம். 

அதனால் பிரதமருக்கு எந்த நெருக்குதலும் கொடுக்க வேண்டாம். அவர் சார்ந்த கட்சியே அவரை பரிந்துரை செய்யட்டும் அல்லது செய்யாமல் இருக்கட்டும். ஒரு பத்து பேரைச் சேர்த்து வைத்துக் கொண்டு பரிந்துரை என்னும் பேரில் கூடிக் கூட்டம் போடுவதை நாம் நிறுத்த வேண்டும். அதற்குத் கேசவனும் துணை போவது வெட்கப்பட வேண்டிய விஷயம். இது இந்திய சமூகத்துக்கு  எந்த விதத்திலும் பெருமை தரப் போவதில்லை. எல்லாக் காலங்களிலும் நாம் மற்றவர்களால் கேலி செய்யப்படுவதை நிறுத்த வேண்டும்.

போதும்! இந்தக் காக்கைக் கூட்டம் நமக்கு வேண்டாம்!

No comments:

Post a Comment