Thursday 5 March 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (64)

இன்றைய  அட்டவணை என்ன?

ஆமாம், இன்று நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற திட்டங்கள் இருக்கின்றனவா? அதாவது இன்றைய அட்டவணையைத் தயாரித்து விட்டீர்களா? 

இதற்க்கெல்லாம் ஆயிரம் இரண்டாயிரம் செலவாகப் போவதில்லை.  காலையில் அலுவலகத்தில் உட்கார்ந்ததும் முதல் வேலையாக "இன்றைய வேலை என்ன?"  என்று ஒரு அட்டவணையைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். வேலைகளின் முக்கியத்துவத்தைப் பொறுத்து எது முதலில், இரண்டாவது எது ஆகக் கடைசி என்பதாக ஒரு திட்டத்தை வைத்துக் கொண்டால் நமது வேலைகளைச் செய்வது எளிதாக இருக்கும். வேலைகள் சுமையாகத் தெரியாது. 

இதிலெல்லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், பரவாயில்லை,  முயற்சி செய்யுங்கள். 

ஒன்றுமே இல்லாமல், எந்தத் திட்டமும் இல்லாமல், நாம் ஒரு நாளை ஆரம்பிப்பது  என்பது நாம் என்ன செய்கிறோம், இன்றைய தினம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரிவதில்லை. ஏதோ குருட்டுத் தனமாக இன்றைய பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரிகிறது. 

எல்லாவற்றுக்குமே ஒரு திட்டம் வேண்டும். வெளிநாடு பயணம் செய்கிறோம் என்றால் சும்மா ஒரு திட்டமும் இல்லாமல் போய் விட முடியுமா? திட்டம் இல்லாமல் போனால் எவ்வளவு பணம் கொண்டு போனாலும் அது பற்றாமல் போகும்! அப்புறம் நடு ரோட்டில் நிற்க வேண்டி வரும்!

அப்படித்தான் இதுவும். எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.  அன்றாடப் பணியில் ஏதேனும் மாற்றங்கள் வரலாம்.  அப்படி வந்தால் நமது வேலைகள் தடைபடலாம்.  குறைந்தபட்சம் நாம் சில திட்டங்களை வைத்துக் கொண்டு வேலைகளைச் செய்யும் போது "எப்படியோ! ஏதோ சில முக்கியமான வேலைகளையாவது செய்து முடித்தோமே!" என்கிற மன நிம்மதியாவது ஏற்படும்!

அதற்குத் தான் அன்றாடப் பணிகளில் கூட நாம் சில திட்டங்களை வைத்துக் கொண்டு  தான் செயல்பட வேண்டும்.  அது அட்டவணையாக இருக்கலாம் அல்லது திட்டங்களாக இருக்கலாம்.  

எந்த திட்டமும் இல்லாமல்,  ஒரு வழிகாட்டல் இல்லாமல், ஒரு அட்டவணை இல்லாமல் நாம் செயல்பட்டால் "நமது இன்றைய சாதனை?" என்பது நமக்கே தெரியாது!  வேலைகளின் சுமையை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளுகிறோம்!

அதனால் நீங்கள் அலுவலகத்தில் பணி புரிபவராக இருந்தாலும் சரி, வியாபாரத்தில் ஈடுப்ட்டிருப்பவராக  இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி,  நாம் அன்றாட வேலைகளை ஆரம்பிக்கும் முன்னர் அன்றைய தினம் நாம் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியிலிட்டு நமது வேலைகளை ஆரம்பிப்பதே நமக்கு வெற்றிகளைக் கொண்டு வரும்!

வெற்றி பெற வாழ்த்துகள்!

No comments:

Post a Comment