செய்யும் தொழிலே தெய்வம்
செய்யும் = தொழிலே தெய்வம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். கேள்விப்பட்டதோடு சரி. அதனை நாம் ஏதோ ஒரு தேவையற்ற சொல் என்பது போல அதனை ஒரு பொருட்டாகக் கூட கருதுவதில்லை!
நாம் செய்கின்ற வேலையாகட்டும் அல்லது தொழிலாகட்டும் எதனையும் நாம் "நமது பிழைப்பு" என்கிற அளவுக்குக் கூட முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
இதனை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? நாம் அக்கறையற்ற ஒரு சமூகம் என்று எடுத்துக் கொள்ளலாமா? அப்படியும் சொல்ல முடியாது. . நாம் நமது குடும்பத்தின் மேல் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறோம்.
ஆனால் நம்மிடையே உள்ள அந்த குடிகாரச் சமுதாயம் என்று ஒன்று உள்ளதல்லவா அந்தச் சாமுதாயம் தான் நம் கண் முன்னே நிற்கிறது.
அவர்களுக்குப் பொறுப்பு என்று ஒன்றில்லை. தொழில் பக்தி என்று ஒன்றில்லை. தினசரி பணம் வேண்டும். உழைக்க வேண்டும். குடிக்க வேண்டும். தினக்கூலி வாழ்க்கையை அவர்கள் விரும்புகின்றனர். அன்றே வேலை செய்து அன்றே பணத்தைப் பெற்று அன்றே குடித்து முடித்து விட வேண்டும்.
வீட்டில் பெண்டாட்டி, பிள்ளைகள் இருப்பார்கள். மனைவி தான் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும். நான் தமிழர்களையே குறி வைக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். சுற்றி கொஞ்சம் நோட்டம் விடுங்கள். வேறு சமுதாயத்தில் இதெல்லாம் நடக்கிறதா என்று பாருங்கள்.
நாம் நீண்ட நாள்கள் அடிமைகளாக இருந்து பழகி விட்டோம். அதனை கடந்த அறுபது ஆண்டு கால ஆட்சியில் ம. இ.கா. தலைவர்கள் இன்னும் அதனை அதிகமாக்கி விட்டனர்!
நாம் என்ன செய்கிறோம் என்பது பிரச்சனை அல்ல. ஏதோ ஒரு இடத்தில் வேலை செய்யலாம் அல்லது ஏதோ ஒரு சிறு வியாபாரம் செய்யலாம். சிறிதோ, பெரிதோ என்பது பிரச்சனை அல்ல. அது நமது குடும்ப வறுமையைப் போக்குகிறது. பிள்ளைகளைப் படிக்க வைக்க முடிகிறது. வேறு தொழில் தெரியாத நிலையில் செய்கின்ற தொழிலை தேய்வமாகக் கருத வேண்டும்.
நமது சமுதாயம் இதில் பலவீனப்பட்டிருக்கிறது என்பது உண்மை. அதனை சரி படுத்த வேண்டும். அரசியல் கட்சிகளால் இது முடியாது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல செய்யும் தொழிலை நேசிக்காதவன் தொழில் செய்ய இலாயக்கற்றவன்.
ஆனால் அது பற்றியெல்லாம் அவன் கவலைப்படுவதில்லை. அவனது குடும்பத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாதவன் மற்ற எதனைப் பற்றியும் கவலைப்பட போவதில்லை.
வேலை என்பது மனிதனுக்கு முக்கியம். அவனது குடும்பம் பிள்ளைகள் அனைவரும் முக்கியம். அவர்களைக் காப்பாற்ற நாம் வேலைக்குப் போவதும் அவசியம்.
நமது வேலை என்பது தெய்வத்திற்குச் சமம் என்பது பெரியோரின் வாக்கு.
அதனை அலட்சியப் படுத்த வேண்டாம்.
No comments:
Post a Comment