Friday 6 March 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (65)

வெற்றி பெறாத மாணவர்களுக்கு ........

எஸ்.பி.எம். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நமது வாழ்த்துகள்,  வெற்றி பெற்ற இந்திய மாணவர்களுக்கு வாழ்த்துகள் நாடெங்கிலும் குவிகின்றன.  மிகப் பலர் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றனர். மனம் குளிர்கிறது. மீண்டும் வாழ்த்துகள்!

வெற்றி பெறாத மாணவர்களும் நம்மிடையே பலர் இருக்கின்றனர். அவர்களுக்கும் நல்லதொரு எதிர்காலத்தை நமது அரசாங்கம் வழங்கியிருக்கிறது. 

தொழிற்கல்வி என்கிற போது நமது இந்திய மாணவர்கள் பலர் தயங்குகின்றனர். தயக்கம் என்னும் போது கல்வி பயிலுவதில் தயக்கம் இல்லை. தன்னோடு படித்த தனது இணைபிரியாக் கூட்டாளிகளை விட்டு எப்படிப் பிரிவது என்பதில் தால் பெரும்பாலான மாணவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்!

தொழிற்கல்வி படித்தாலும் நீங்கள் பல்கலைக்கழகம் போகும் அளவுக்கு உங்களுக்கு நல்லதொரு எதிர்காலம் காத்திருக்கிறது. ஒரு வேளை உங்கள் நண்பர்களை விட்டுப் பிரிந்தால் உங்களின் எதிர்காலம் சிறப்பாக அமையலாம்!

தொழிற்கல்வியைப் பற்றி குறைத்து மதிப்பிடாதீர்கள்.  பெற்றோர்களும் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனக்குத் தெரிந்து, சமீபத்தில் "பயிற்சி" க்கு வந்த இரண்டு மாணவிகள் பலகலைக்கழகம் போக வாய்ப்புக் கிடைத்தது.  இருவருமே தொழில் நுட்பக் கல்லூரியில் படித்தவர்கள்.  அதில் ஒருவர் இந்திய மாணவி. அவர் அந்தக் கல்லூரியிலேயே சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். குடும்பச் சூழல் காரணமாக அவரால் போக முடியவில்லை. பிறகு அவர் போகலாம்.அதனால் வாய்ப்புக்கள் இருக்கின்றன.  நாம் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறை சொல்லுவதில் நேரத்தைக் கழிக்க வேண்டாம். 

எலக்டிரிக் துறையில் தொழிற்கல்வி பயின்ற ஒரு நண்பரை எனக்குத் தெரியும். இப்போது அவர் பெரிய வர்த்தகர் ஆகி விட்டார். பல பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பலவற்றிற்கு அவ்ருடைய நிறுவனம் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

குளிர்சாதனப் பெட்டி பழுது பார்க்கும் ஒர் ஆறு மாத பயிற்சியில் கலந்து கொண்ட ஒரு நண்பரை எனக்குத் தெரியும்.  கல்வியில் தோற்றுப் போனவர் அவர்.  அந்த பயிற்சிக்குப் பின்னர் கொஞ்ச காலம் அனுபவம் பெறுவதற்காக பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்தார். ஒரு சில ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் உயர்ந்து விட்டார். சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பின்னர் நிர்வாகியாக பணியாற்றினார்.

ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் முறையான கல்வி கிடைத்தால் நல்லது  அது இல்லை என்றால் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும்.  மாற்று வழி என்றால் அது தொழிற்கல்வி தான்.  அதுவும் அரசாங்க கல்விக் கூடங்கள். அதிகச் செலவு இல்லாத அரசாங்கக் கல்லூரிகளில் வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

நீங்கள் பரிட்சையில்  தோல்வி  என்று தெரிந்தால் ஒரு சில வல்லூறுகள் உங்களைச் சுற்றி கொண்டே இருக்கும். உங்களுக்கு வேலை வாய்ப்புக்களை அள்ளிக் கொடுக்கும். இப்போது நீங்கள் அதற்கு மயங்கினீர்களானால்  நீங்கள் வாழ்க்கை முழுவதும் ஓர் அடிமையாகவே வாழ வேண்டி வரும். எந்த ஒரு பயிற்சியும் இல்லாத வாழ்க்கை உங்களை அடிமையாக்கிவிடும். இந்த உலகமே உங்களைப் பார்த்துச் சிரிக்கும். 

வாழ வேண்டும். வளர வேண்டும். உயர வேண்டும். உயரே உயரே பறக்க வேண்டும். அதற்கு.....?  கல்வி தேவை.  ஏதோ ஒரு கல்வியாக இருக்கலாம்.  ஆனால் கல்வி தேவை.  அதில் எந்த சமரசமும் இல்லை!

No comments:

Post a Comment