நாம் மாற வேண்டும்!
நண்பர்களே! நாம் மாறாதவரை எதுவும் மாறப்போவதில்லை.
நம் நாட்டின் மூன்றாவது பெரிய இனம் நமது இனம். ஆனாலும் சீனர்கள் தான் நம் நாட்டின் பொருளாதாரத்தை தங்களது கைக்குள் வைத்திருக்கிறார்கள். மலாய்க்காரர்கள் அவர்களது கல்வியில் ஏற்பட்ட முன்னேற்றத்தினால் இன்று பெரிய அளவில் வளர்ந்து விட்டார்கள்.
மூன்றாவது பெரிய இனமான நாம்...? இந்நாட்டின் கல்வித்துறையை வளர்த்தவர்கள் நாம். இந்நாட்டின் பொருளாதாரத்தின் வேராக இருந்தவர்கள் நாம். சீனர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு நாம் தான் வங்கிகளாக இருந்து செயல்பட்டோம். ஆனால் இன்று? ஆசிரியர்களாக இருக்கக் கூட தகுதியில்லாதவர்களாக புறக்கணிக்கப்படுகிறோம். சீனர்களின் வங்கிகள் நமக்குக் கடன் கொடுப்பதில்லை. ஏன்? அரசாங்கம் நமக்காக ஆரம்பித்த "செடிக்" ஆகட்டும் அல்லது இன்றைய "மித்ரா" ஆகட்டும் - அவர்கள் கூட நம்மை திரும்பிப் பார்ப்பதில்லை!
ஆக நாம் அனைவராலும் புறக்கணிக்கப்படுகின்றோம். ஆட்சியில் உள்ள தமிழனே நம்மை எட்டி உதைக்கிறான்!என்ன காரணமாக இருக்கும்?
ஆம் நாம் மாற வேண்டும். நமக்கு ஆட்டு மந்தை புத்தி அதிகம். எவன் சொன்னாலும் கேட்டுக் கொள்ளுகிறோம். அதனையே வேத வாக்காக எடுத்துக் கொள்ளுகிறோம். ஒவ்வொரு அரசியல்வாதியும் ஒர் அயோக்கியன் என்பதை மறந்துவிட்டு அவன் சொல்லுவதைத் தான் கேட்கிறோம்.
நாம் சிந்திக்கும் பழக்கத்தை இழந்துவிட்டதற்குக் காரணமே நம் அரசியல்வாதிகள் தான். ஒவ்வொரு விஷயத்திற்கும் அவன் பின்னாலேயே நிற்பதால் இப்போது யார் சொல்லாமலே நாமே பின்னாலே போய் நிற்கிறோம்!
நாம் மாற வேண்டும். நமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். பெரிது பெரிதாக ஒன்றும் இல்லையென்றாலும் ஒரு சில விஷயங்களைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.. அதில் முதன்மையானது நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். பட்டதாரிகளாக ஆக்க வேண்டும். கல்வி மட்டும்தான் நமக்கு முன்னேற்றத்தைக் கொண்டு வரும்.
நாம் எந்த சமுதாயத்தை எடுத்துக் கொண்டாலும் கல்வி தான் அவர்களைக் கைத்தூக்கி விட்டது என்பதை மறுப்பதற்கில்லை.
யாழ்ப்பாணத் தமிழர்கள் இங்கு வரும் போது அவர்கள் ஏழைகள் தான். ஓரளவு கல்வி கற்றவர்களாக அவர்கள் இருந்தார்கள். அந்த கல்வி தான் அவர்களை இன்று உயர்த்தியிருக்கிறது. கேரள மலையாளிகள் ஓரளவு கல்வி அறிவுடன் வந்து தோட்டப்புறங்களில் வேலை செய்தனர். அங்கிருந்து தான் அவர்களுக்கு அபரிதமான வளர்ச்சி ஏற்பட்டது. தோட்டப் பாட்டாளிகளாக வேலை செய்த மலையாளிகள் கூட தங்கள் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டியதால் தான் இன்றும் கூட தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களாக இன்னும் மலையாளிகளே இருந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் முதல் தலைமுறை மட்டும் தான் தோட்டப் பாட்டாளிகளாக வேலை செய்தார்கள். அடுத்த தலைமுறை ஆசிரியர்களாக மாறிவிட்டனர்.
தமிழர்களின் நிலை என்ன? மூன்று, நான்கு தலைமுறை என்று தோட்டங்களில் கொட்டை போட்டவர்கள் தமிழர்கள் மட்டும் தான்! மற்றவர்கள் தங்களது முன்னேற்றத்தில் அக்கறை காட்டிய போது நாம் மட்டும் தான் "தண்ணி" அடிப்பதில் அக்கறை காட்டினோம். இப்போதும் கூட நமது பிள்ளைகளின் கல்வியை விட நமக்கு "தண்ணி" அடிப்பது தான் முன்னுக்கு நிற்கிறது! தோட்டத்தை விட்டு வெளியேறினாலும் "தண்ணி" யிலிருந்து மட்டும் நாம் வெளியேறவில்லை!
நாம் "தண்ணி" அடிப்பதிலிருந்து விடுபடாதவரை மற்றவர்களுக்கு நாம் அடிமையாகத்தான் வாழ வேண்டும். நாம் முன்னேறவில்லை என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் நாம் மலையாளிகளை விட, தெலுங்கர்களை விட, சீக்கியர்களை விட, யாழ்ப்பாணத் தமிழர்களை விட இன்னும் அவர்கள் பின்னால் தான் நின்று கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் தாம் முன்னணியில் நிற்க வேண்டும்.
நாம் தான் முன்னணியில் நிற்க வேண்டும் என்கிற - அதனை நோக்கித்தான் நமது பயணம் இருக்க வேண்டும். அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
நாம் மாறுகிறோம்! இன்னும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்!
No comments:
Post a Comment