Wednesday 11 March 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (68)

ஒரு தலைமுறை போதும்!

நமது முன்னோர்கள் ஒரு சில தவறுகளைச் செய்தார்கள்.  அது அவர்களோடு போயிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் 
 செய்த தவறுகளிலேயே பெரிய தவறு தங்களது தவறுகளை அவர்களின் வாரிசுகளுக்கும் தொடர வைத்தார்கள் என்பதுதான்!

ஆமாம் நாம் குடிகார  சமூகமாக எப்போது மாறினோம்?  நமது முதல் சந்ததி இங்கு வந்த போது வேலையின் சுமை காரணமாக குடிக்க ஆரம்பித்தார்கள். இதனை வெள்ளைக்காரன் கண்டான்.  "இவன் எங்கும் ஓடிவிடாமல் இருக்க வேண்டுமே!" என்கிற கவலையினால் ஒவ்வொரு தோட்டத்திலும் கள்ளுக்கடைகளை ஆராம்பித்தான். நாம் என்ன செய்தோம்? நமது பிள்ளைகளையும் குடிக்க வைத்து அழகு பார்த்தோம்!

அன்று ஆரம்பித்தது தான்! இந்த குடிகார ஓட்டம்! இன்று வரை இந்த ஓட்டம் ஓயவில்லை! வேகம் குறையவில்லை! 

இன்று நாம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. குடியிலிருந்து நாம்  மீள முடியுமா  என்பதும் தெரியவில்லை.

குடிகார சமூகம் தான் இன்றும் அதிகமான தொழிலாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.  அது மட்டும் அல்லாமல் தொடர்ந்து வாரிசுகளையும் குடிக்க வைப்பதையு,ம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

நான் சொல்ல வருவது ஒரே ஒரு விஷயம் தான். நீங்கள் குடிகாரர் தான்.  முடிந்தால் குடிப்பதை வீட்டோடு கொஞ்சம் கௌரவமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் பிள்ளைகளின் முன்னால் குடிக்காதீர்கள். இனி உங்கள் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள்.   இந்த குடிகாரன் என்னும் பட்டம் உங்கள் தலைமுறையோடு போகட்டும். அடுத்த தலைமுறையாவது சிறப்பாக வாழவேண்டும். 

இனி உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி ஒரு முடிவு எடுங்கள். அரசியல்வாதிகளின் பின்னால் அலையாதீர்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில். அரசியல்வாதிகளின் கையில் அல்ல.  உங்களுக்குத் தேவையான விபரங்களை ஆசிரியர்களிடம் விசாரியுங்கள். 

நீங்கள் தொழிலாளி என்கிற அந்த முத்திரையை இனி உங்கள் பிள்ளைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டாம்.  வங்காள தேசத்திலிருந்து வந்தவன் பிள்ளைகள் எல்லாம் நாட்டை ஆளுகின்ற முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  நாம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அடிமையாக இருக்கப் போகிறோம்?

அடிமைத்தனத்தை உடைத்தெறியுங்கள்.  அந்த "தொழிலாளி" என்னும் வட்டத்திலிருந்து வெளியாகுங்கள். 

நீங்கள் தொழிலாளி என்றால் உங்களோடு அந்த தலைமுறை கடைசியாக இருக்கட்டும்.  அடுத்த உங்களது வாரிசுகள் டாக்டர்களாக, வழக்கறிஞர்களாக, என்ஜினியர்களாக, பைலட்டாக, காவல்துறை அதிகாரிகளாக, அமைச்சர்களாக வர வேண்டும். 

அந்த முன்னேற்றத்தையே நீங்களும் இலட்சியமாகக் கொள்ளுங்கள். நீங்கள் தான் உங்கள் பிள்ளைகளுக்குத் தூண்டுகோளாக இருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் இருந்தால் பிள்ளைகளின் முன்னேற்றம் வெற்றிகரமாக அமையும். அதில் சந்தேகமில்லை.

தொழிலாளி என்கிற அந்த முத்திரை ஒரு தலைமுறைக்கு மட்டும் போதும். பிள்ளைகளுக்குச் சரியான கல்வியைக் கொடுத்தால்  அடுத்த தலைமுறை படித்த தலைமுறையாக உருவாகிவிடும்.

தொழிலாளப் பெற்றோர்களே அடுத்த தலைமுறையை உயர்ந்த நிலைக்குக்  கொண்டு செல்லுவது உங்கள் கையில் மட்டும் தான் இருக்கிறது. யார் யார் கையிலோ இல்லை!

வாழ்வது ஒரு முறை. அதை வெறும் தொழிலாளியாக, குடிகாரனாகவா வாழ வேண்டும்?  முதல் தலைமுறைக்கு எந்த வசதியும் இல்லை அதனால் அவர்கள் வாழ்க்கை அப்படி அமைந்தது.  ஆனால் அடுத்த தலைமுறை உயர்ந்தல்லவா இருக்க வேண்டும். அந்த கடமையை நாம் ஒழுங்காக செய்யவில்லை. அதனால் தான் நமது நிலைமை படு பாதாளத்திற்குச் சென்று விட்டது. பலர் மீண்டு விட்டனர். இன்னும் பலர் "முடியவே முடியாது!" என்று தமிழர்கள் பெயரைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.  அவர்கள் மாறுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்குண்டு. 

அடுத்த தலைமுறை உயரும்! உயரும்! உயரும்

No comments:

Post a Comment