Saturday 14 March 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (71)

வாடிக்கையாளர்களின் திருப்தியே முக்கியம் 

என்ன தான் சொல்லுங்கள் எந்தத் தொழிலாக இருந்தாலும் முதன்மையானது வாடிக்கையளர்களின் திருப்தி தான்.

நம்மிடையே வீடுகளைப் புனரமைப்பு  செய்யும் குத்தகையாளர்கள் நிறையவே இருக்கின்றனர். பெரிய அளவில் செய்பவர்களும் உண்டு. சிறிய அலவில் செய்பவர்களும் உண்டு.  பெரிய அளவில் செய்பவர்களைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. நாளை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உடையவர்களைப் பற்றிக் கூட நமக்குக் கவலை இல்லை.

ஆனால் சிறிய அளவில் செய்கிறார்களே இவர்கள் தான் நமது இலக்கு. இவர்கள் கீழேயும் போகமுடியாமல் மேலேயும் உயர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள்!  ஒரே காரணம் தான். இவர்களிடம் நேர்மை இல்லை, நாணயம் இல்லை. வேலையில் சுத்தமில்லை!  உண்மையைச் சொன்னால் இவர்களில் பெரும்பாலானோர் ஏமாற்றுப் பெர்வழிகள்! நல்ல  குடிகாரர்கள்!

கைக்குப் பணம் வந்ததும் நண்பர்களோடு கூடி கும்மாளம் அடிப்பவர்கள்! அந்தப் பணம் கூட இவர்களுக்கு  ஏதோ வேலைக்காக முன் பணமாக கொடுக்கப்பட்டிருக்கும்.  பொருள்கள் வாங்க கொடுக்கப்பட்ட பணத்தை வைத்துக் கொண்டு தண்ணி அடிக்கும் கூட்டம் இது. எதைப் பற்றியும் கவலை இல்லை. பணம் கொடுக்கப்படுவது தண்ணி அடிக்கத்தான் என்கிற கொள்கை உடைய கூட்டம் இது!   வேலை செய்யப் பிடிக்காத சோம்பேறி கூட்டம் இது! பணத்தை செலவழித்து விட்டு தங்களது கடைமையைச் செய்யாமல் தலைமறைவாகி விடும் கூட்டம் இது!

இவர்களால் தான் தமிழர் சமுதாயத்தின் பெயரே கெட்டுப் போகிறது.  நானே இந்தக் கூட்டத்தினரால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஒரு சிறிய வேலை. அதற்கு எதற்கு முன் பணம் என்று நினைத்து பணத்தை முழுவதுமாக கொடுத்து விட்டேன். அந்த இளைஞனை அதற்கு பின்னர் பார்க்கவே முடியவில்லை! பின்னர் வேறொரு இந்தோனேசியரைக் கூப்பிட்டு அந்த வேலையைச் செய்ய வேண்டியதாயிற்று. 

அதே போல என் நண்பர் ஒருவர். அவர் வீட்டில் வேலை செய்ய ஆறாயிரம் வெள்ளி என்று பேசி முடிவு செய்தாயிற்று.   கடன் வேண்டாம் என்று நினைத்து மொத்த பணத்தையும் கொடுத்து விட்டார்.  அவ்வளவு தான்! வேலை நகரவே இல்லை! என்னடா என்று தேடிப் பார்த்தால் அந்த நடுத்தர வயதான மனிதர் குடித்துவிட்டு வீட்டை விட்டு நகர முடியவில்லை! இருபத்து நான்கு மணி நேரமும் தண்ணீ! யாராலும் அவரை எழுப்ப முடியவில்லை! அவரால் நிற்க முடியவில்லை! நிற்கக் கூட முடியாதவரால் என்ன வேலை செய்ய முடியும்? கடைசியில் அந்த வேலை நடக்கவே இல்லை!

என்ன தான் குடிகாரனாக இருந்தாலும் நாம் செய்கின்ற வேலையில் நமக்குக் கவனம் இருக்க வேண்டும். நமக்கு அந்த பொறுப்பு இருக்க வேண்டும். நாம் நீண்ட காலத்திறகு அந்தத் தொழிலில் இருக்கப் போகிறோம். அதனை பொறுப்பாக நாம் செய்ய வேண்டும்.   அந்தத் தொழில் நமது குடும்பத்தைக் காப்பாற்றுகிறது. நமக்கு சோறு போடுகிறது  என்பதை நாம் மறக்கக் கூடாது.

வாடிக்கையாளர்கள் உங்கள் மீது அதிருப்தி அடைந்தால் அப்புறம் உங்கள் ஆட்டம் பலிக்காது!

No comments:

Post a Comment