Sunday 8 March 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (66)

நான் நானாக இருக்க விரும்புகிறேன்!

மேலே சொன்னது நானல்ல. எஸ்.பி.எம். தேர்வில் 11A   பெற்ற ஒரு மாணவன் சொன்ன வார்த்தை அது. 

அந்த மாணவனுக்கு நன்றி. இப்போதெல்லாம் நமது இளைஞர்களிடம் உங்கள் இலட்சியம் என்ன கேட்டால் "தல க்கி பாலாபிஷேகம் செய்வதும்,  தளபதி க்கு பாலாபிஷேகம் செய்வதும், சுப்பர் ஸ்டாருக்கு பாலாபிஷேகம் செய்வது தான் எங்களது இலட்சியம்"  என்கிறார்கள்! 

இப்படிப்பட்ட ஒரு நிலையில் அந்த மாணவன் மட்டும் அல்ல இந்த தலைமுறையைச் செர்ந்த ஒவ்வொரு மாணவனும்,ஒவ்வொரு இளைஞனும்  "நான் நானாக இருக்க விரும்புகிறேன்" என்று சொன்னால்  அதனை வரவேற்காமல் எப்படி வாய் மூடி இருக்க முடியும்?

மீண்டும் பாராட்டுகிறேன். நான் நானாக இருக்க விரும்புகிறேன் என்கிற சொல் இப்போதெல்லாம் அடிக்கடி சொல்லப்படுகின்ற  ஒரு சொல்லாக நம்மால் கேட்க முடிகிறது.  ஓரளவு நமது திரைப்படங்களும் நமது இளைஞர்களின் மனதை மாற்றியிருக்கின்றன என்றும் சொல்லலாம்.

 வாழ்க்கையில் முன்னேற மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் ஏதோ இரண்டே இரண்டு துறைகள் தான் இருக்கின்றன என்கிற எண்ணத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும்.   ஒரு மருத்துவரோ அல்லது ஒரு வழக்கறிஞரோ - இதைத் தவிர வேறோன்றுமில்லை என்கிற எண்ணம் வேண்டாம்.  இவை இரண்டும் தான் அடிக்கடி காதில் விழுகின்ற அல்லது நமக்குத் தெரிந்த ஒரு கல்வி என எண்ணுகிறோம். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். இப்போதே இவர்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள்!

எல்லாவற்றையும் விட மாணவர்களே அவர்களுக்கு வேண்டிய துறையை அவர்களே தேர்ந்தெடுக்கெட்டும்.  கணக்கியல் துறையைத் நாம் தேர்ந்தெடுக்காததே நமது பலவீனத்தைக் காட்டுகிறது. வர்த்தகத் துறைக்கு கணக்கியல் துறையினர் முக்கிய பங்காற்றுகின்றனர். கணக்கியல், மருந்தியல் துறை, கட்டிடக்கலை, காவல்துறை, விமான ஓட்டுனர், கப்பற்படை, இராணுவம் இப்படி இன்னும் பல பல!

இப்படி எத்தனையோ வாய்ப்புக்கள் இருக்கையில் மாணவர்களைச்  சிந்திக்க விடாமல் செய்கின்றனர் பெற்றோர்கள். 

பெற்றோர்களே! பிள்ளைகளை சிந்திக்க விடுங்கள். அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். எதனையும் அவர்கள் மீது திணிக்காதீர்கள்.

இதோ மேலே சொன்னானே அந்த மாணவன் அவனைப் போல உங்கள் பிள்ளைகளையும் சிந்திக்க விடுங்கள்.  இந்த வயதில் அவனைச் சிந்திக்க விடாமல் செய்தீரகளானால் அவன் வாழ்நாளெல்லாம் உங்களை சந்தி சிரிக்க வைப்பான்! சிந்திக்க தெரியாதவன் அப்படித் தான் செய்ய முடியும்! 

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்!

No comments:

Post a Comment