அரசாங்க கல்லூரிகளைத் தேர்ந்தெடுங்கள்
இப்போது நமது மாணவர்களில் பலர் தொழிற்பயிற்சி கல்லூரிகளில் சேருவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர் என்பது நல்ல செய்தி. அரசாங்க கல்லூரிகளில் சேரப் போகும் மாணவர்களை தனியார் கல்லூரிகள் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்வது கெட்ட செய்தி.
தனியார் கல்லூரிகளைப் பற்றி நமக்குத் தெரியும். அவர்கள் மாணவர்களுக்கு அரசாங்கக் கல்வி கடன் கிடைக்கும்வரை தேனொழுகப் பேசுவார்கள். கடன் கிடைத்த அடுத்த நாளே "உனக்கு விருப்பம் இல்லையென்றால் நீ போகலாம்!" என்பார்கள்! காரணம் மாணவர்கள் வாங்கிய கடன் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் தலைமேலே தொங்கிக் கொண்டிருக்கும். அந்தக் கடனை மாணவர்கள் தான் கட்ட வேண்டும். படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி அது அவர்களுடைய கடன். அவர்கள் தான் கட்ட வேண்டும்.
இன்றைய நிலையில் நமது இந்திய மாணவர்கள் உயர்கல்விக்காக பல இலட்சம் வெள்ளிகளை அரசாங்கத்திறகு, படிக்காத கல்விக்காக, கடன் கட்ட வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். காரணம் இந்த தனியார் கல்வி நிறுவனங்கள் அவர்களைக் கடனகாரர்களாக ஆக்கி வைத்திருக்கின்றன.
அரசாங்கக் கல்லூரிகளில் நிறையவே இடங்கள் காலியாக இருக்கின்றன. அந்த இடங்களை நாம் பயன்படுத்திக் கொண்டாலே போதும். நமக்குத் தனியார் கல்லூரிகளின் தயவு தேவை இல்லை. மாணவர்கள் கடகாரர்களாக ஆக வேண்டியதும் இல்லை!
நம் மாணவர்களிடையே அல்லது பெற்றோர்களிடையே ஒரு பெரிய குறைபாடு உண்டு. நம் பிள்ளைகள் நமது பக்கத்து அறையை விட்டு எங்கும் வெளியே போகக் கூடாது. போனால் கெட்டுப் போவார்கள் என்கிற மனோபாவம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் மாணவர்கள் வெளியூர்களில் போய் படிக்கிறார்கள். ந்மது பெண்கள் கூட சபா, சரவாக் போன்ற தூரத்து மாநிலங்களில் போய் படிக்கின்ற காலம் இது. ஆனால் இவர்கள் "கெட்டுப்போவார்கள்" என்கிற எண்ணம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை! அதுவும் ஆண் பிள்ளைகள்!
இப்போது பத்திரிக்கைகளிலே வருகின்ற 'அடிதடி' செய்திகளெல்லாம் வெளியூர்களிலிருந்தா வருகின்றன? எல்லாம் வீட்டில் இருக்கும் இளைஞர்கள் தானே ஈடுபடுகிறார்கள்!
இன்னோன்றையும் நாம் குறிப்பிட வேண்டும். இடைநிலைப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள், தங்களோடு படித்த நண்பர்கள், தொடர்ந்து தங்களோடு கல்லூரிகளுக்கும் படிக்க வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். அது சாத்தியமில்லை. மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கு தான் அவர்கள் போக வேண்டும்.
இங்கு தான் அவர்களுக்கு தனியார் பள்ளிகள் அடைக்கலம் கொடுக்கின்றன! முன்பு இடைநிலைப்பள்ளியில் படித்த அதே மாணவர்களோடு படிக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை கடன்காரார்களாக மாற்றுகின்றனர்.
எது எப்படியோ நமது பெற்றோர்கள் கண்டிப்பாக இல்லாவிட்டால் அவர்கள் கண் முன்னாலேயே பிள்ளைகள் கடன்காரர்களாவதைப் பார்ப்பார்கள்!
மாணவர்களே! உங்கள் எதிர்காலம் முக்கியம். நல்ல முடிவாக எடுங்கள். உங்கள் கல்வியை முடித்ததும் நீங்கள் மீண்டும் உங்கள் நண்பர்களோடு சேரலாம். உங்கள் பெற்றோர்களுக்குப் பணச் சுமையை ஏற்படுத்தாதீர்கள்.
No comments:
Post a Comment