ம.இ.கா.விலிருந்து விலகியவர்கள் மீண்டும் ம.இ.கா.வில் சேரலாம் என அழைப்பு விடுத்திருக்கிறார் ம.இ.கா.வின் தேசியத்தலைவர் டான்ஸ்ரீ சா. விக்னேஸ்வரன்.
இது ஒரு நல்ல முடிவாகவே நமக்குத் தோன்றுகிறது. நாளுக்கு நாள் பலவீனப்பட்டு வரும் ம.இ.கா. இந்தியர்களின் கொஞ்ச நஞ்ச ஆதரவு வேண்டுமென்றால் கட்சியிலிருந்து முக்கியமானவர்களை எல்லாம் விரட்டிக் கொண்டிருக்க முடியாது.
'அவர்களே விலகினார்கள், அவர்களே வரட்டும்' என்கிற பேச்செல்லாம் எதுவும் எடுபடாது. என்னதான் பிரச்சனையைத் திசைதிருப்பினாலும் பழி என்னவோ தலைவர் மேல் தான் விழும். இது அரசியல். காலங்காலமாக பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்!
எப்படியோ மத்திய செயற்குழு கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள இணக்கம் தெரிவித்திருப்பதானது கட்சிக்கு மீண்டும் உயிர் கொடுக்க மிக அவசியம் என்பதை உணர்ந்திருக்கிறது எம்று தெரிகிறது.
ம.இ.கா. ஒரு காலத்தில் இந்திய சமூகத்தோடு மிகவும் ஒன்றிப் போன ஒர் அரசியல் கட்சி. தவறான தலைவர்களால் அதன் நிலை மிகவும் கீழ் நோக்கிப் போய்விட்டது என்பது தான் அதன் குறை. காலஞ்சென்று துன் சம்பந்தன் அவர்களுக்குப் பிறகு அக்கட்சிக்கு நல்ல தலைமைத்துவம் அமையவில்லை. அமைக்க யாரும் விடவுமில்லை.
இனி ம.இ.கா.வுக்கு வருங்காலம் என்பதாக ஒன்றுமில்லை. பத்துமலை முருகன் திருத்தலம் போன்ற ஒரு நிலை தான் இவர்களுக்கும் ஏற்படும்.
இந்திய சமூகத்திற்கும் இனி எந்த ஒரு புதிய கட்சியும் - ம.,இ.கா. வைப் போன்று, அமையப்போவதில்லை. தேவையுமில்லை. இந்தியர்கள் இனி எந்த ஒரு கட்சியையும் நம்பப் போவதுமில்லை. இப்போது இந்தியர்களுக்கு அரசியல் தெளிவு உண்டு. யாருக்கு வாக்கு அளிக்க்லாம் என்பது அந்தந்த இடத்தில் முடிவு செய்கிற இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அது போதும்!
ம.இ.கா.வின் நலன் கருதி இந்தப் புதிய இணைப்பை நாம் வரவேற்கிறோம். வெற்றி பெற வாழ்த்துகள்!