எஸ்.பி.எம்., எஸ்.பி.டி.எம். போன்ற கல்வித் தகுதிகளெல்லாம் பெரிய அளவில் உங்களுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்காது. அப்படியே ஏற்படுத்திக் கொடுத்தாலும் நீங்கள் உங்கள் வாழ்நாள் பூராவும் குறைந்த சம்பளத்திலேயே வேலை செய்ய வேண்டிய நிலை வரும்.
எனவே இந்தக் கல்வி தகுதிகளை வைத்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்குப் போக, மேற்கொண்டு உங்கள் கல்வித் தகுதிகளை உயர்த்திக்கொள்ள, நீங்கள் கட்டாயம் பட்டதாரி ஆவதற்கான வழிவகைகளைக் காண வேண்டும்.
பட்டம் பெற வேண்டும் என்றால் முதலில் பொருளாதாரச் சிக்கல்கள் தான் நம் கண்முன்னே பூதாகாரமாகத் தோற்றமளிக்கும். ஆனால் அப்படியெல்லாம் பயப்பட ஒன்றுமில்லை. பெரும்பாலும் தனியார் கல்லூரிகள் தான் அதிகமானக் கட்டணங்களை விதிக்கின்றன. அதை விடுத்து அரசாங்கக் கல்லூரிகளில் பி40 குடும்பங்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்குத் தான் கட்டணங்கள் இருக்கின்றன. அப்படியே முடியாவிட்டாலும் அரசாங்கமும் கடனுதவிகளைக் கொடுக்கின்றது.
அத்தோடு கூட தனியார் நிறுவனங்களும் ஏகப்பட்ட அளவில் கடனுதவிகளை வழங்குகின்றன. கடனுதவி பெறுவதில் பிரச்சனைகள் இல்லை. உங்களுக்கான தகுதிகள் இருந்தால் எந்த ஒரு சிக்கலும் இல்லை. தேவை எல்லாம் உங்களுடைய தகுதிகளை வளர்த்துக் கொள்வது தான்.
நமது வருங்காலம் என்பது கல்வியை மட்டுமே சார்ந்ததாக இருக்கின்றது. கல்வி மட்டும் இருந்துவிட்டால் நீங்கள் எட்டாத இடத்தில் இருப்பீர்கள் என்பது நிச்சயம். இன்றைய தலைமுறை இன்னும் பெரிய வளர்ச்சி அடையவில்லை என்பது நமக்குத் தெரியும். அதனை முறியடித்து ஒரு வளர்ந்த சமுதாயம் என்று பெயரெடுக்க வேண்டும். அதற்கு கல்வி ஒன்றே நமக்குச் சரியான ஆயுதம். மற்ற ஆயுதங்களெல்லாம் துருப்பிடித்துப் போகலாம் ஆனால் கல்வி என்பது என்றென்றும் நிலைத்து நிற்கும். நம்மை உயர்த்திப் பிடிக்கும்.
அதனால் இளைய சமுதாயமே, கல்வி வேண்டும் அதுவும் பட்டக்கல்வி அவசியம் வேண்டும். உங்களின் நோக்கம் பட்டம் பெறுவது என்கிற நோக்கத்தோடு இருக்கட்டும்.
No comments:
Post a Comment