Monday, 22 July 2024

இப்படியுமா ஆசிரியர்கள்?

 

நல்ல வேளை நமது பள்ளிகளில் இது போன்ற செய்திகளைக் கேட்பதில்லை!   நம் குழந்தைகள் தப்பித்துக் கொண்டனர்.  இங்கே இப்படியெல்லாம் நடந்தால் மாணவர்களே பெற்றோரிடம் போட்டுக் கொடுத்து விடுவர்.

ஆனாலும் அனைத்து ஆசிரியரையும் நாம் குற்றம் சொல்லிவிட முடியாது. எல்லா இடங்களிலும் கறுப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றனர். மேலே உள்ளவர் தூங்குகிறார் பிள்ளைகள்  விசிறிகளை விசுறுகின்றனர்.  நமது நாடுகளில்  நேரத்தைக் 'கடத்த'  வெவ்வேறு வழிகளைக் கடைப்பிடிக்கின்றனர்.

ஒருவர் அரசியலில் இருந்தால் போதும் அல்லது ஒரு பிரபல அரசியல்வாதியைத் தெரிந்தவராக இருந்தால் போதும்  பொதுவாகவே அவர் வேலை செய்யவே மாட்டார்.  தலைமை ஆசிரியரும் அவரைக் கண்டு கொள்ள மாட்டார்.  இது நமது நாட்டில் சில ஆசிரியர்களின் பிழைப்பு இப்படித்தான் நடக்கிறது!  அவர்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது.  அதற்கெல்லாம் துணிவு வேண்டும்!  என்ன செய்ய? சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

மேலே உள்ள ஆசிரியை  பாய் போட்டுப் படுத்துத் தூங்குகிறார்.  ஆனால் நாற்காலியில் தூங்குபவர்கள்  எத்தனை பேர்?   இவர்கள் எல்லாம் இந்தக் கணக்கில் வரமாட்டார்கள்.  ஆனால் நம் நாட்டில்  வகுப்புக்கே வராமல் மட்டம் போடும் ஆசிரியர்கள் தான் அதிகம்.  பிள்ளைகள் தான் மட்டம் போடுவார்கள்  என்றால் இங்கே ஆசிரியர்கள்  மட்டம் போடுபவர்களாக இருக்கிறார்கள்!

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர் மேல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. சரவாக் மாநிலம். ஆங்கில ஆசிரியர்  ஒருவர் வகுப்புக்கே வருவதில்லையாம். மாணவர்கள் அந்த ஆசிரியர் மேல் வழக்குத் தொடுத்தனர்.  மாணவர்கள் வெற்றிபெற்றனர்.  ஆசிரியர் மாணவர்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என நீதிமன்றம் கட்டளையிட்டது.  அந்த ஆசிரியர் ஓர் அரசியல்வாதிக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை.  நீதிமன்றம் சொன்னது தான் நடந்தது.

என்ன செய்வது? ஆசிரியர்கள் பலவிதம். இது போன்ற ஆசிரியர்கள் 'மாதா, பிதா, குரு, தெய்வம்  வரிசையில் வரமாட்டார்கள்!  ஆனால் நல்லாசிரியர்கள் நம்மிடையே நிறையவே இருப்பதால்  இன்னும் நல்லதே நடந்து கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment