நமது மலேசிய இந்திய தலைவர்கள் நம்பத்தகுதியற்றவர்கள் என்பதை சமீபகாலமாக அவர்களின் நடவடிக்கை அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
இனி இவர்களையெல்லாம் நம்புவது முட்டாள்தனம் என்பதை அவர்களே மெய்ப்பித்துவிட்டனர். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சரி பேசாமல் வாய் மூடி இருப்பதே நல்லது என்கிற நிலைமைக்கு எப்போதோ வந்துவிட்டனர்!
உதாரணத்திற்கு மெட் ரிகுலேஷன் நுழைவு பிரச்சனையில் அப்படியே ஆடாமல் அசையாமல் இருந்தார்கள் என்பதை அவர்கள் பெருமையாக நினைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ஏன் அனைவரும் ஒன்று சேர்ந்து பிரதமருடன் ஒரு சந்திப்பை நடத்தினால் ஒரு நல்ல பலன் கிடைக்கலாம் அல்லவா? அதற்கு யாரும் தயாராக இல்லை!
இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்க வேண்டும் என்று சொன்னால் நீங்கள் ஒன்று சேர என்ன பிரச்சனை? பிரதமரே எல்லா இந்திய மாணவர்களுக்கும் தமிழ் மொழி கற்பிக்கப்படும் என்று அறிவித்துவிட்ட நிலையில் நீங்கள் மட்டும் ஏன் வாய் திறப்பதில்லை? அது பற்றியான தொடர் சந்திப்பை ஏற்படுத்தி அந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவை காணலாமே?
உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். ஆனால் எந்த ஒரு பிரச்சனையையும் கையில் எடுக்கத் தயங்குகிறீர்கள். எங்களுக்காகப் பேசுபவர்கள் இந்திய NGO க்கள் தான். பேச முடியாதவர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள்?
எத்தனையோ தமிழ்ப்பள்ளிகளுக்குப் பிரச்சனை. எத்தனையோ கோயில்களுக்குப் பிரச்சனை. எதிலும் தலையிடுவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.
ம.இ.கா.வை நம்பினோம். அறுபது ஆண்டுகள் பாழாய் போயிற்று! இப்போது உங்களை நம்புகிறோம். நீங்களும் அவர்களைப் போலவே அறுபது ஆண்டுகள் ஓட்டலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் அவர்கள் காலம் வேறு. உங்களின் காலம் வேறு. அப்போது நாங்கள் முட்டாள்கள். இப்போது நீங்கள் முட்டாள்கள்! இப்போது உங்களை எப்படிக் கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும்.
பார்ப்போம்! எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்று பார்ப்போம்!
No comments:
Post a Comment