அதனை மாண்புமிகு ரமணன் ராமகிருஷ்ணன் தான் விளக்க வேண்டும். நமது இந்திய மாணவர்களுக்கு 2500 இடங்களை ஒதுக்குமாறு பலவழிகளில் நமது இயக்கங்கள் அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பிரதமர் சொன்ன அந்த 10ஏ விவகாரம் எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கின்றது. அமைச்சரவைக் கூட்டத்திலும் இது பேசப்பட்டதாம். இந்தியர்களின் நலனுக்காகப் பேச அமைச்சரவையில் யாரும் இல்லாத நிலையில் என்ன பேசப்பட்டிருக்கும் என்பதும் நமக்குத் தெரியவில்லை.
சரி, நமக்குத் தெரிந்த அரைகுறை செய்திகளின்படி அல்லது முற்றிலுமாக அறியாத நிலையில் இந்தக் கேள்வி எழுகிறது. 90 விழுக்காடு ஒதுக்கப்பட்ட மலாய் மாணவர்களின் சலுகைகளைப்பற்றி நம்மால் வாய் திறக்க முடியாது. 10 விழுக்காடு பற்றி பேசத்தான் நமக்கு அனுமதி உண்டு. இந்த பத்து விழுக்காட்டில் தான் நாம் நமது மாணவர்களுக்கு 2500 இடங்கள் கொடுங்கள் என்கிறோம். பிரதமர் 10ஏ பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் நிச்சயம் இடம் உண்டு என்கிறார். அதாவது அனைத்து இன மாணவர்களுக்கும் இடம் உண்டு என்கிறார். இது மலாய் மாணவர்கள் உட்பட என்பது தான் நமது புரிதல்.
மலாய் மாணவர்களுக்கு 90 விழுக்காடு என்பது தனியாக அத்தோடு இந்த பத்து விழுக்காட்டிலும் பலன் அடைகின்றனர். அதாவது நமது மாணவர்களின் இடங்கள் பிடுங்கப்பட்டு மலாய் மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றது! 10ஏ பெற்ற எத்தனை இந்திய மாணவர்கள் இருக்கின்றனர் என்பது நம்மிடம் எந்த விபரமும் இல்லை. 800 மாணவர்கள் கூட எட்டாது என்று சொல்லப்படுகின்றது. அது எந்த அளவுக்கு உண்மை என்பதும் தெரியவில்லை.
ஒன்று மட்டும் நமக்குத் தெரிகிறது. பிரதமர் கொடுக்கின்ற அறிவிப்புக்கும், இந்திய மாணவர்களின் கூடுதல் எண்ணிக்கைக்கும் சம்பந்தம் இல்லை என்றே தெரிகிறது. இந்திய மாணவர்கள் குறையும் வாய்ப்புகள் தான் அதிகம் என்பது தான் இதன் பொருள்.
ஆனாலும் நம்பிக்கையோடு இருப்போம். பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பலனளிக்கும் என்று நம்பலாம்!
No comments:
Post a Comment