பள்ளிக்கூடத்தின் அவசியத்தை நாம் அறிந்திருக்கிறோம். அதனால் தான் நமது குழந்தைகள் கல்வி கற்பது அவசியம் என்பதையும் உணர்ந்திருக்கிறோம்.
நமது நாட்டில் பள்ளிகளுக்குப் பஞ்சமில்லை. எல்லா இடங்களிலும் பள்ளிகள் உண்டு. இது இல்லேன்னா அது என்பது போல ஏதோ ஒரு மொழி பள்ளி அவசியம் இருக்கும். தமிழ், சீனம், தேசிய மொழி - இப்படி ஏதோ ஒன்று நமக்கு அருகிலேயே இருக்கும். நம்முடைய தேவை எல்லாம் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பது மட்டுமே. அப்படியே ஏதேனும் இடர்ப்பாடுகள் இருந்தாலும் அனைத்துமே களையக்கூடியவைகள் தான்,
பள்ளிக்கூடத்திற்குப் போகும் ஒரு பையன் சிறைச்சாலையைத் தவிர்க்கிறான். பள்ளிக்கூடத்திற்குப் போகாத ஒரு பையன் சிறைச்சாலையை நிரப்புகிறான். இது தான் வித்தியாசம். கல்வி அறிவு உள்ளவன் வாழ்க்கையில் முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டிருப்பான். கல்வி கற்காதவன் திசை தெரியாமல் அலைந்து திரிந்து டைசியில் சிறை தான் அவனுக்கு அடைக்கலம் தரும்.
கல்வி எந்த வயதிலும் பயிலலாம் . ஆனால் அந்தந்த வயதில் பயிலுவது என்றென்றும் மனத்தில் நிற்கும். அதனால் தான் 'இளமையில் கல்' என்கிறார் ஔவையார். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவர் சொன்னார். அன்றே நம் முன்னோர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள். நாம் இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புங்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். எவ்வளவு முரண்பாடு, கவனித்தீர்களா?
இடைப்பட்ட காலத்தில் நாம் கல்வி பெற பல தடைகள் இருந்தன. மேற்குடி மக்களுக்கு மட்டும் தான் கல்வி என்கிற நிலை ஒரு காலகட்டத்தில் இருந்ததெல்லாம் உண்மை. இப்போது அது போன்ற தடைகள் எல்லாம் தகர்க்கப்பட்டு விட்டன. யாருக்கும் எந்தத் தடையுமில்லை. இப்போதும் காரணங்களைப் புதிது புதிதாகக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறோம்! அதனால் தான் நமது பிள்ளைகளுக்கு இன்னும் கல்வி சரியாக அமையவில்லை. கல்வியில் பின் தங்கியே இருக்கிறோம். சிறைகளை அடைத்துக் கொண்டிருக்கிறோம்! யாரால் என்ன செய்ய முடியும்?
குழந்தைகளின் கல்வியில் யாருக்கும் அலட்சியம் வேண்டாம். குறிப்பாக நான் தமிழர்களைத்தான் சொல்கிறேன். உங்கள் குழந்தைகள் கல்வி கற்றால் தான் வாழ்க்கையில் நீங்கள் உயர முடியும். உங்கள் குடும்பம் உயர முடியும். உங்களால் தலைநிமிர்ந்து வாழ முடியும்.
No comments:
Post a Comment