Sunday, 24 December 2017
30% விழுக்காடு அரசாங்கம் ஒதுக்குமா?
இராணுவத்தில் மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் அரசாங்கத்தை வலியுறுத்திருக்கிறார். வரவேற்கிறேன்! ம.இ.கா. கேட்கத் துணியாததை அவர் கேட்டிருக்கிறார்.
ஆனால் இன்றைய நிலையில் இது சாத்தியமான ஒன்றா? ஒரு காலக்கட்டத்தில் அது தேவையான ஒன்றாக இருந்தது என்பது உண்மை தான். பல இன இராணுவமாக நாம் இருந்தோம். அது ஒரு இக்கட்டானக் காலக் கட்டம். கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளின் அட்டுழியங்கள் இருந்த ஒரு காலக்கட்டம். நாட்டின் பல பிரபலங்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். பொது மக்கள் பயங்கரவாதிகளால் துன்புறுத்தப்பட்டனர். ஆங்காங்கே கொலைகள் நடந்தன. பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த பயங்கரவாதிகளை ஆயுதம் ஏந்தி அடக்க வேண்டிய அவசியம் இராணுவத்திற்கு இருந்தது.
அந்தக் காலக் கட்டத்தில் - 1960 களில் - இராணுவத்தில் 30 விழுக்காடு மலாய்க்காரர் அல்லாதார் இருந்ததாக முன்னாள் இராணுவ தேசப்பற்றாளர் சங்கம் தனது ஆய்வில் கூறுகிறது.
ஆனால் இப்போதைய நிலை என்பது வேறு. நாட்டில் எந்த ஒரு இராணுவ நடவடிக்கையும் தேவைப்படவில்லை. பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காட்டில் இருந்து வரவில்லை, இப்போது வேறு விதமான அச்சுறுத்தல்கள் நாட்டிற்கு உள்ளிருந்தே வருகின்றன. இதற்கு இராணுவ நடவடிக்கைகள் தேவை இல்லை.
அது மட்டும் அல்ல இப்போதைய இராணுவம் ஓரளவு இஸ்லாமிய மயமாக ஆக்கப்பட்டிருக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன் பொருள் ஓர் இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய இராணுவம் என்பதும் காலத்தின் கட்டாயம். இதுவும் மலாய்க்காரர் அல்லாதாரர்களுக்கு ஓர் தடைக்கல்லாக இருக்கும் என்பதும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் இராணுவத்தில் பதவி உயர்வு என்பதும் இப்போது அரசியாலாகி விட்டது. பதவி உயர்வுகளை இராணுவம் தீர்மானிப்பதில்லை. தற்காப்பு அமைச்சிலுள்ள அதிகாரிகளே தீர்மானிக்கின்றனர். அதாவது களத்தில் உள்ளவர்கள் தீர்மானிப்பதில்லை. குளுகுளு அறைகளில் இருக்கும் அதிகாரிகள் தீர்மானிக்கின்றனர்! அவர்களே விழுக்காட்டு விகிதங்களைத் தீர்மானிக்கின்றனர்.
ஆனால் இங்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றை சொல்லித் தான் ஆக வேண்டும். இந்தியர்களும் சீனர்களும் நாட்டுப்பற்று அற்றவர்கள் என்று இராணுவத்தில் உள்ளவர்களும், அமைச்சர்களும் சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றம் நம்மிடம் இல்லை. செயல்படுத்தும் அதிகாரிகளிடம் தான் உண்டு! அடுத்த முறை நம் மீது "நாட்டுப்பற்று" இல்லை என்று சொல்லப்பட்டால் அவர்கள் மீதே அந்தக் குற்றச்சாட்டை திருப்பி அடிக்க வேண்டும்!
வாழ்க மலேசியா!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment