Sunday, 17 December 2017
மைக்கா ஹோல்டிங்ஸ்..அவ்வளவு தானா?
"மைக்கா ஹோல்டிங்ஸ்" என்பது ஒரு முடிந்து போன கதை; கருத்துக் கூற ஒன்றுமில்லை!" என்கிறார் ம.இ.கா.வின் முன்னாள் தலைவர் துன் சாமிவேலு!
அப்படியா? எதனை வைத்து துன் அவர்கள் இதனை முடிந்து போன கதை என்கிறார்?
மைக்காவில் முதலீடு செய்தவர்கள் இன்னும் பலர் தங்களது முதலீட்டை திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதை துன் அறியாதவரா?
இந்தப் பிரச்சனையை அப்படியெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் "முடித்துவிட்டு" போய் விட முடியாது என்பதை துன் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பிரச்சனைக்கு இன்னும் உயிர் இருக்கிறது. மைக்காவால் பயன் பெற்றவர்கள், கோடி கோடியாய் குவித்தவர்கள் வேண்டுமானால் "அது முடிந்து போன கதை" என்று கூறலாம். ஆனால் சராசரியனுக்குப் போட்ட முதல் கூட கிடைக்கவில்லை! அப்படிக் கிடைக்காதவனுக்கு அது முடிந்து போன கதையாக எப்படி இருக்க முடியும்?
இது தேர்தல் காலம். ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இந்தப் பிரச்சனை தலைதூக்கத் தான் செய்யும்! தேர்தல் பிராச்சரத்தின் போதும் ம.இ.கா.விக்கு எதிராகத்தான் குரல் வரும்! துன் சாமிவேலு பதவியில் இருக்கும் வரை அவர் இதனை எதிர்கொள்ளத் தான் வேண்டும்! மைக்காவை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தவர்கள் - இன்னும் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் - தங்களது சாதனைகளை நினைத்து பெருமைப்படலாம்! ஆனால் பாட்டாளி மக்களின் சாபம், வயிற்றெரிச்சல் என்பது சாதாரண விஷயம் அல்ல!
பி.கே.ஆர். கட்சியின் இளைஞர் பிரிவு சொல்வது சரியே. அரச விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்பதும் சரியே! எல்லாக் காலங்களிலும் இந்தத் தமிழ்ச் சமுதாயத்தை ஏமாற்றியே பிழைக்கும் அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் தவறுகள் செய்து கொண்டே போவதை நாம் பார்வையாளர்களாக இருந்து பார்த்துக் கொண்டே இருக்க முடியாது.
வருகின்ற பொது தேர்தலில் ம.இ.கா. நிச்சயம் மைக்கா பிரச்சனையை எதிர்நோக்கும் என்பது உண்மையே! இன்றைய தலைமைத்துவத்துக்கும் இதில் பங்கு உண்டு என்பதால் அவர்களும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களே!
கதை முடியவில்லை! தொடரும்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment