Sunday, 22 April 2018
உங்கள் வாக்கு யாருக்கு..?
முதலில் தொலைப்பேசி உரையாடலைக் கேளுங்கள்:
"நான் பி.என். அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன்"
"சரி! என்ன செய்தி?"
"உங்கள் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
"போன தேர்தலப்போ வந்து கைகொடுத்து விட்டுப் போனார்! அதன் பின் அவரைப் பார்க்கல! ஒரு வேளை அம்னோ கூட்டங்களில் அவர் கலந்து கொண்டிருப்பார்! எனக்குத் தெரியாது!"
"ஆமாம், இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள்?"
"தெரியவில்லை! அது ரகசியமாச்சே!"
"ஆமாம், அது ரகசியம்! சரி! நன்றி!"
இப்போது தான் கடந்து போன ஐந்து வருடங்களைப் பற்றி கொஞ்சம் திரும்பிப் பார்க்க அவர்களுக்கு ஞாபகம் வந்திருக்கிறது. அதுவும் இந்திய வாக்காளர்களாகப் பார்த்து "நீங்கள் யாருக்கு வாக்களிப்பிர்கள்" என்று கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
மலாய் வாக்காளர்களின் வாக்கு எண்ணிக்கை நூறு விழுக்காடு கிடைக்கும் என்னும் நம்பிக்கை குறைந்துவிட்டது. அது பாதி பாதியாகக் கூட ஆகலாம்! இந்த நேரத்தில் இந்திய வாக்காளர்களின் வாக்குகள் பெரிய அளவில் ஒத்தாசயாய் இரு,க்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் தான் இந்த வாக்கு வேட்டையை ஆரம்பித்திருக்கிறார்கள்!
யார் யார் இந்தியர்களோ அவர்களைக் கூப்பிட்டு "எங்களுக்கு வாக்குப் போடுங்கள்" என்னும் மறைமுக பயமுறுத்தல்களாகக் கூட இருக்கலாம்! அதாவது "உங்கள் தொலைப்பேசி எண் தெரியும் உங்களைப் பற்றி அனைத்தும் தெரியும், ஜாக்கிரதை!" என்று நமக்கு ஒர் எச்சரிக்கை கொடுக்கலாம்!
எது எப்படி இருப்பினும் இது தேர்தல் காலம். தேவையற்றவர்களிடையே தேவையற்ற பேச்சுக்கள் தவிர்க்கபட வேண்டியவை. வீண் விவாதங்கள் வேண்டாம். தேர்தல் முடிந்த பிறகு எங்கும் வெளியே போகாதீர்கள் என்பதாக இப்போதே பேச்சுக்கள் வர ஆரம்பித்துவிட்டன! எல்லாம் ஊகங்கள் அடிப்படையில் தான் நஜிப் மே 9-ல் தேர்தல் வைத்திருக்கிறார். மே 9-க்கும் மே 13-க்கும் இடைவெளி அதிகம் இல்லை! அதனால் தான் இது போன்ற ஊகங்கள்!
இருப்பினும் அனைத்தையும் நேர்மறையாகவே பார்ப்போம். நல்லதே நடக்கட்டும். நாட்டுக்கு ந்ல்லது நடக்கட்டும். மக்களுக்கு நல்லது நடக்கட்டும்.
உங்கள் வாக்கு யாருக்கு என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்! வாழ்க மலேசியா!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment