Saturday, 7 April 2018
ஏன் மெட் ரிகுலேஷன்..?
மெட்ரிகுலேஷன் கல்வி எப்படி வந்தது என்பதன் பின்னணியைக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழகம் போகின்ற மாணவர்களில் பெரும்பாலும் இந்தியர்களும், சீனர்களும் தான் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வந்தனர். இது மாணவர்களின் தகுதி அடிப்படையில் நிர்ணயக்கப்பட்ட ஒன்று.
தகுதி அடைப்படையில் மலாய் மாணவர்களின் எண்ணிக்கையை பல்கலைக்கழகங்களில் அதிரிகரிக்க முடியவில்லை. அவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டுத் தான் இந்த மெட்ரிகுலேஷன் கல்விமுறை கொண்டு வரப்பட்டது. சீன மாணவர்களும், இந்திய மாணவர்களும் இரண்டு ஆண்டுகள் எஸ்.டி.பி.எம். கல்வியை முடித்த பின்னர் தான் பலகலைக்கழகம் போக முடியும். ஆனால் இந்த மெட் ரிகுலேஷன் கல்வி முறையில் ஒரு மலாய் மாணவர் ஓர் ஆண்டு படித்துவிட்டு குறுக்கு வழியில் நேரே பல்கலைக்கழகம் போய்விடலாம்! இப்படித்தான் மலாய் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அது தகுதியின் அடிப்படையில் அல்ல. அதனால் தான் இந்தக் கல்வி முறை பல ஆண்டுகள் மற்ற இன மாணவர்களுக்கு மறுக்கப்பட்டது! இங்குக் கேட்கப்பட்ட கேள்வி: எங்களுக்கு மட்டும் ஏன் இரண்டு ஆண்டுகள்? கல்வி முறை ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும் என்பது தான்.
அதிலும் இன்னொரு விசேஷம். மெட் ரிகுலேஷன் படிப்பவர்கள் நேரே பல்கலைக்கழகம் போய் விடலாம். ஆனால் இரண்டு ஆண்டுகள் கடினமாக உழைத்துப் படித்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அந்த வாய்ப்பில்லை! கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்! அப்படியென்றால் இரண்டு ஆண்டுகள் படித்தும் அனைத்தும் வீண் என்கிற நிலைமை! அதனால் தான் மெட்ரிகுலேஷன் கல்வி முறை எங்களுக்கும் வேண்டும் என்று மற்ற இன மாணவர்களும் கொடி பிடிக்க ஆரம்பித்தனர்! அதனால் தான் சிறுக சிறுக மற்ற இன மாணவர்களும்- அரசியல் காரணங்களுக்காக - சேர்க்கப்பட்டனர். இங்குக் கேட்கப்படுகின்ற முக்கியக் கேள்வி: ஓர் ஆண்டு படித்துவிட்டு நேரே பல்கலைக்கழகம் செல்லலாம்; இரண்டு ஆண்டுகள் படித்துவிட்டு எங்கே போவது என்று தெரியாமல் ஊர் சுற்றலாம்!
அதனால் தான் இந்த ஓர் ஆண்டு கல்வி முறை அனைத்து இன மாணவர்களும் விரும்பும் முறையாகி விட்டது. ஓர் ஆண்டு படித்தால் பல்கலைக்கழகம் உறுதி. இரண்டுகள் ஆண்டுகள் படித்தால் மறதி! ஆனாலும் இந்தக் கல்வி முறை இந்திய மாணவர்களுக்கு எட்டாக்கனி என்கிற நிலையில் தான் இன்றும் உள்ளது.
அரசியல்வாதிகள் நிறைய வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள். அதிலும் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வாரி இறைக்கிறார்கள்! ஆமாம், காசா, பணமா? வெற்றுறுதிகள் தானே! நமது இளந்தலைமுறை பல வழிகளில் அலைக்கழிக்கப்படுகிறார்கள். பல அநீதிகள் இழைக்கப்படுகின்றன. ஆனால் கேட்பார் யாருமில்லை! கேட்க வேண்டியவர்கள் கோட்டையில் குளிர்காய்கிறார்கள்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment