Saturday 14 April 2018

குழந்தைக்கு பால் ஊட்டிக்கொண்டே தேர்வு எழுதிய தாய்..!


கல்விக்காக எவ்வளவு தியாகங்களைப் பெண்கள் செய்கிறார்கள் என்று நினைக்கும் போது மனம் நெகிழ்ந்து போகிறது. அதிலும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தீவிரவாத அமைப்புகள் பெண்கள் கல்வி பெறுவதை விரும்புவதில்லை. கல்வி பெறும் பெண்களைச் சுட்டுத் தள்ளுவதிலேயே குறியாய் இருப்பவர்கள்.


            
           

இது போன்ற சூழலில் வெகு தொலைவில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து, இரண்டு மணி நேரம் காடுமேடுகளில்  நடந்து, பின்னர்  ஒன்பது  மணி நேரம்  பொது போக்குவரத்துகளில் பயணம் செய்து தனது  பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுத தனது இரண்டு மாதக்  கைக் குழைந்தைக்குப்  பாலுட்டிக் கொண்டே   தரையில் உட்கார்ந்து கொண்டு பரிட்சை எழுதுவது என்பது என்ன சாதாரண விஷயமா?  அப்படித்தான் எழுதினார் அந்தப் பெண். அவர் பெயர் ஜாகனாப் அமாடி என்கிற ஒரு விவாசாயப் பெண்.. அவருக்கு இன்னும் இரண்டு குழைந்தைகள் உண்டு. கண்வரோடு வாழ்ந்துவருகிறார்.

தனது  ஒரு கையைத் தொட்டிலாக வைத்து இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டே  ஒரு கையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அந்தக் காட்சியை ஒரு விரிவுரையாளர் படமாகப் பிடித்து  இணையத் தளத்தில் சும்மா தமாஷாகப் போட்டு வைத்தார். ஆனால் அது  வைரலாக மாறி  அந்தப் பெண்ணுக்கு பெரிய பெரிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது!   இளைஞர் அமைப்புக்கள் அவரின் கல்விக்காக தேவையான பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கின்றன.  சமூக சேவகி ஒருவர் அவரை தலைநகரான காபுல் நகரத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறார். காபூலில் தரமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. தரமான கல்வி உண்டு. அவர் தொடர்ந்து  அங்குப் படிக்கலாம். அவருடைய இரண்டு பிள்ளைகளும் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்கிறார். அவரது கணவருக்கும் வேலை வாங்கித் தருவதாக வாக்களித்திருக்கிறார்.

அந்தத் தாய்க்குக் கல்வி மீது அப்படி என்ன ஆசை? "நான் பின் தங்கி இருக்க விரும்பவில்லை. நான் படிக்க வேண்டும். பட்டம் பெற வேண்டும். டாக்டராகவோ அல்லது ஏதோ ஒரு கல்வி அது என் கிராமத்தில் வாழும் மக்களுக்குப் பயனாக இருக்க வேண்டும். கிராமத்தில் அனைவரும் கல்வி அறிவில்லாதவர்கள். அவர்கள் கல்வி பெற வேண்டும். என் கிராமத்தில் உள்ளவர்களும் விழிப்புணர்ச்சி பெற வேண்டும் என்பதே என் ஆசை" என்கிறார் அமாடி.

இதிலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் எப்படிப்பட்ட  நிலையிலும் இருக்கலாம்.  நம்மிடம் பெரிய லட்சியங்கள் இருக்கலாம்.  அந்த லட்சியங்களை நோக்கி  நமது பயணம் அமைய வேண்டும்.  தீவிரப்படுத்த வேண்டும். நமது லட்சியத்தில் தீவிரம் காட்டினால் நமக்கு நாலா  பக்கத்திலிருந்தும் உதவிகள்  தானாக வரும். அது தான்  வாழ்க்கை.  அது தான் நடக்கும். அது தான் இயற்கை. அது தான் கடவுள்.

கல்வி கற்பதில் தீவிரம்  காட்டுங்கள்! உங்கள் இல்ட்சியத்தை அடையுங்கள்! வாழ்த்துகள்!

No comments:

Post a Comment