ம.இ.கா. தலைவர் டத்தோஸ்ரீ சுப்ரமணியம் தப்பிக்க வழி தேடுகிறாரா என்று கேட்கத் தோன்றுகிறது!
இன்று இந்தியர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் காரணம் டாக்டர் மகாதிர் தான் என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்! அதற்கு ம.இ.கா. வோ அல்லது சாமிவேலுவோ காரணம் அல்ல என்று நம் அனைவருக்கும் ஞாபகப்படுத்தியிருக்கிறார்
சுப்ரா தப்பிக்க வழி தேடுகிறாரா என்று நினைக்கத் தோன்றுகிறது! நஜிப் பிரதமரான பின்னர் இந்தியர்கள் ஏன் முன்னேறவில்லை என்று கேள்வி கேட்டால் இதோ சுப்ரா உடனடி பதிலை வைத்திருக்கிறார்! அதற்கு ம.இ.கா.வோ, தலைவரோ காரணமல்ல; பிரதமர் தான் காரணம் என்று சொல்லாமல் சொல்லுகிறார் சுப்ரா!
சாமிவேலு காலத்தில் என்ன குற்றச்சாட்டுக்களை அடுக்கினோமோ அதே குற்றச்சாட்டுக்கள் இப்போதும் இருக்கின்றன, இன்னும் தொடருகின்றன! இதற்கெல்லாம் காரணம் நஜிப் தான் என்பது இப்போது நமக்குப் புரிகிறது. இது நமது பதிலல்ல; ம.இ.கா. தலைவரின் பதில்! முன்னாள் பிரதமரை அவர் குற்றஞ்சாட்டுகிறார் என்றால் அதே குற்றச்சாட்டு இந்நாள் பிரதமரையும் சாரும் என்பதை அவர் மறந்து விட்டார்!
பிரதமர் தான் - முன்னாளோ இந்நாளோ - இந்தியர்களின் முன்னேற்றத்திற்குத் தடை என்றால் ம.இ.கா. வின் நிலை என்ன? ம.இ.கா. வே தேவை இல்லை என்கிறாரா, சுப்ரா! இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் பொறுப்பு பிரதமரிடம் தான் உள்ளது என்றால் இவர்களுடைய பொறுப்பு என்ன?
அல்லது இந்த 14-வது பொதுத் தேர்தல் முடிவுகள் ம.இ.கா.வுக்கு இடியாக இருக்கும் என்பதை இப்படிச் சூசகமாக நமக்குச் சொல்லுகிறாரா, சுப்ரா! தோற்ற பின் அனைத்துக்கும் காரணம் "நான் அல்ல, பிரதமர் நஜிப் தான்!" என்று சொல்லப் போகிறாரா? அதற்கான முதல் கட்ட வெளிப்பாடாக இதனை நாம் எடுத்துக் கொள்ளலாமா?
தப்பிக்கப் பார்க்கிறாரா! சுப்ரா! பதவியில் இருக்கின்ற காலத்தில் பதவி கொடுத்தவர்களை எட்டி உதைப்பதும் பதவி போனதும் பிரதமர்களைக் குறை சொல்லுவதும் ம.இ.கா. வினருக்கு ஒன்றும் புதிதல்ல!
வருகின்ற தேர்தல் களம் ம.இ.கா.வினருக்கு என்ன கற்பிக்கப் போகிறது என்று பார்ப்போம்!
No comments:
Post a Comment