Wednesday 25 April 2018

குறிக்கோளைக் குறிவைத்து நகர்த்துங்கள்


நம் அனைவருக்குமே குறிகோள்கள் உண்டு. சிறிதோ, பெரிதோ நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு தான் நாம் செயல்படுகிறோம். ஆனால் நாம் அறிந்து, தெரிந்து, தெளிந்து ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டால் நமது பயணம் சரியாக அமையும்.

விஜய்டிவி புகழ் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதியைப் பாருங்கள். இருவருமே வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழுகின்ற  ஒரு குடும்பம். இருவருக்குமே பாடுகின்ற திறன் இருந்தது. பாடுகின்ற திறன் இருந்ததால் தங்களது வறுமையைப் போக்க பாடுவதையே தங்களது தொழிலாக ஏற்படுத்திக் கொண்டார்கள். வேறு எந்தத் தொழிலையும் தேர்ந்தெடுக்கவில்லை. கிராமப்புறங்களில் நாட்டுப்புற இசை தான் அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பு. பாடுவதற்கு நாட்டுப்புற பாடல்கள் தான் அவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்தன.. நாட்டுப்புற பாடல்கள் என்பதால் அவர்கள் அலட்சியமாகப் பாடவில்லை. எப்படி வேண்டுமானாலும் பாடலாம் என்று அலட்சியம் காட்டவில்லை. அதனையும் சிறப்பாக, உணர்ந்து பாடி மக்களின் ஆதரவைப் பெற்றனர். நாட்டுப்புற மேடைகளே அவர்களுக்குப் பாடுவதற்கு தல்லதொரு தலமாக  அமைந்தது.

அவர்களின் பாடல்களுக்கு, கிராம மேடைகளில், நல்ல வரவேற்பு  கிடைத்ததால் நன்றாகப் பாட வேண்டும் என்னும் ஆர்வமும் அதிகரித்தது.  சிறு சிறு கூட்டத்தினரிடையே பாடிக் கொண்டிருக்கிறோமே தொடர்ந்து "நாம் என்ன செய்யப் போகிறோம் அல்லது இப்படியே தானா, பெரிய, பெரிய கூட்டங்களை எப்போது பார்க்கப் போகிறோம்"  என்னும் எண்ணம் துளிர் விட ஆரம்பித்தது. 

அது தான் அவர்களிடம் ஏற்பட்ட முதல் பொறி. அடுத்த கட்ட நகர்வு என்ன எதுவும் தெளிவாக இல்லை. ஆனாலும் பாடுவது தான் நமது தொழில் என்பதில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. பாடுவதில் இன்னும் மெருகேற்ற வேண்டும் என்பதிலும் எந்தத் தயக்கமும் இல்லை. 

"வெளியே சென்று பாட வேண்டும், பெரிய பெரிய இடங்களில் பாட வேண்டும்" என்னும் ஆசை தொடர்ந்தது, தீவிரம் அடைந்தது. ஆனாலும் எந்த வழியும் தெரியவில்லை. இந்த நேரத்தில் தான் விஜய்டிவி யின் பாடல் போட்டியில் பாடுகின்ற வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இதில் முக்கியமான ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனோதத்துவம் என்ன சொல்லுகிறது? நமது குறிக்கோளில் நாம் தீவிரமாக இருந்தால் நம்மைச் சுற்றி இருக்கும் நாலு பேர் அல்லது நாம் நினைத்துப் பார்க்காத இடத்திலிருக்கும் நாலு பேர் நமக்கு உதவி செய்ய வருவார்கள் என்கிறது  மனோதத்துவம்.

பெரிய அளவில் நமது கிராமிய இசையைக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்த செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி அப்படித்தான் நினைத்தார்கள். அது நடந்தது.

எல்லாத் தீவிரமான ஆசைகளும் நிறைவேறும். அதனால் உங்கள் ஆசையைக் குறிகோளாக மாற்றி அதற்கான உழப்பைப் போட்டீர்களானால் உங்களுக்கான வெற்றி நிச்சயம். 

No comments:

Post a Comment