Tuesday 17 April 2018

வெற்றிகள் எந்த வயதிலும் வரலாம்...! (2)


வெற்றி என்பது எந்த வயதிலும் வரலாம். விஜய் டிவி சுப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசு பெற்ற பிரித்திகா என்னும் சிறுமியைப் பற்றி சொல்லத்தான் வேண்டும்.

திருவாருர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  தியானபுரம் என்னும்        கிராமத்தில் வாழ்ந்து வருவது அவரது குடும்பம். அப்பா, அம்மா, அண்ணன், பிரித்திகா கடைசிக் குழந்தை. அரசு பள்ளியில் ஒன்பதாம்  வகுப்பு படிக்கும் மாணவி. பிரித்திகா. அப்பா கார்களுக்குப் வர்ணம் பூசும் வேலை.  வருமானம் போதாததால்    வீட்டிலேயே அம்மா தையல் வேலை  பார்க்கிறார்..  வருமானம் போதாதக் குடும்பம்.

பிரித்திகா குடும்பத்தில்  சங்கீதப்  பின்னணி உடையவர்கள் யாரும் இல்லை. அவரது பெற்றோருக்கு அவள் பாடுவாள் என்பது கூட தெரிந்திருக்கவில்லை.. ஆனல் அவர் படிக்கின்ற பள்ளியில் அவருடைய ஆசிரியர்கள் அதனைக் கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.   பள்ளியின்  தமிழ்த்தாய் வாழ்த்து தான் பிரித்திகாவுக்கு  பிள்ளையார் சுழி போட்ட பாடல்.. அந்தப் பாடல் தான் ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்திய பாடல். அதன் பின்னர் பள்ளி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடியிருக்கிறார். அவரது ஆசிரியர்கள் அவருக்குச் சங்கீதப் பயிற்சி கொடுத்தால்  இன்னும் சிறப்பாகப் பாடுவார் என்பதாகப் பெற்றோரிடம்  கூறியிருக்கின்றனர்.  அவருக்குச் சங்கீதப் பயிற்சி கொடுக்க அவரது தந்தை அருகிலுள்ள பட்டணத்திற்கு அவரை சைக்கிளில் உட்காரவைத்து கூட்டிகொண்டு போவாராம். மகள் பாடுவதில் உள்ள ஆர்வத்தைக் கண்டு தாயும் தந்தையும் தங்களால் இயன்றதைச் செய்திருக்கிறார்கள்.

விஜயின் சுப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொள்வது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கலந்து கொண்டு அவர் தோல்வி யைத் தழுவியிருக்கிறார்.  ஆனாலும் மனந்ததளரவில்லை. அந்தத் தோல்வியின் மூலம் தனது அனுபவங்களைப் பெருக்கிக் கொண்டார். அந்த அனுபவங்கள் தான் அவருக்கு வெற்றியைக் கொண்டு வந்திருக்கிறது.

அவர் கிராமத்தில் தனது இசைப் பயணத்தை தொடங்கியவர். அந்த கிராமிய மணம் அவர் குரலில் ஒலிக்கத் தவறவில்லை! பட்டணத்தில் உள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதில் அந்த கிராமியத்தைக் கொண்டு வர முடியாது! அந்தக் கிராமிய மணம் அவருக்குக் கூடுதல் புள்ளிகளையே அள்ளிக் கொடுத்ததாகவே எடுத்துக் கொள்ளலாம்.  அவர் பாடிய ஒவ்வொரு பாடலிலும் அந்தக் கிராமியக் குரல்  வந்து போய்க் கொண்டு தான் இருந்தது!  அதுவே அவருக்கு வெற்றியையும் கொடுத்தது!

பிரித்திகாவின் வெற்றி என்பது இசை மேல் அவருக்குள்ள ஆர்வம் தான். தனது திறமையை வளர்த்துக் கொள்ள  தொடர் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். விஜய்டிவியின் இசைப் பயிற்சியாளர் வைத்தியநாதனும் அவருக்கு நல்ல வழிகாட்டியாக இருந்திருக்கிறார். அவரது ஊர் மக்கள், பள்ளி ஆசிரியர்கள் இப்படி அனைவரும் ஓரளவு பொருளாதார ரீதியிலும் இன்னும் பல வழிகளில் ஒத்துழைப்பை நல்கியிருக்கிறார்கள்.

இதைத்தான் மனோதத்துவோம் சொல்லுகிறது: உங்களுக்குத் தீராத  ஆர்வம் இருந்தால் உங்கள் ஊரே திரண்டு வந்து உங்கள் லட்சியத்தை அடைய உறுதுணையாக இருக்கும் என்று. எந்த ஏழ்மையும்  உங்களுக்குத்  தடையாக இருக்க முடியாது!

மிகச் சிறிய வயதில் பெரிய சாதனையைப் புரிந்திருப்பவர் பிரித்திகா! இன்னும் பல சாதனைகளைப் புரிய வாழ்த்துகிறோம்!

No comments:

Post a Comment