Thursday, 12 April 2018
மகாதிர் அப்படி என்னத்தை செய்துவிட்டார்..?
இப்போது மீண்டும் ம.இ,கா. வின் டத்தோ எம்.சரவணன் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
"அப்படி என்னத்தை இந்திய சமுதாயத்திற்கு துன் மகாதிர் செய்து விட்டார்" என்று ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
நல்ல கேள்வி. நாம் தான் ம.இ.கா. வினரைப் புரிந்து கொள்ளவில்லை! "நாங்கள் உங்கள் பிரதிநிதிகள் என்பது உண்மை தான். ஆனால் இந்தியர்களின் பிரச்சனைகளைப் பிரதமரிடம் கொண்டு சேர்க்கும் "ஆபீஸ் பாய்" வேலை என்பது எங்களுடையது அல்ல. இந்தியர்கள் இந்த நாட்டுக் குடிமக்கள். அவர்களின் பிரச்சனைகளை ஒரு பிரதமரானவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ம.இ.கா. ஒன்றும் செய்யவில்லை என்று எங்கள் மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும்."
ஏறக்குறைய இந்தத் தொனியில் பேசியிருக்கிறார் டத்தோ சரவணன்! ஒன்று நமக்குப் புரிகிறது. நமக்கு இப்போதும் அரசாங்கத்தின் மீது நிறைய குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதற்கு ம.இ.கா. காரணம் அல்ல என்பது இப்போது தான் விளங்குகிறது.
டாக்டர் மகாதிர் காலத்தில் பள்ளிகளுக்குக் கொடுத்ததை விட இன்றைய பிரதமர் தமிழ்ப்பள்ளீகளுக்கு வாரி இறைத்திருக்கிறார் என்கிறார் சரவணன். ஆனால் நாம் கேட்கின்ற கேள்வி அந்தப் பணம் எல்லாம் எங்கே போயின என்று பல ஆண்டுகளாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆக, இதற்கும் ம.இ.கா.வுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார் சரவணன். நாம் பிரதமரிடம் கேட்க வேண்டிய கேள்வியை ம.இ.கா.விடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கே போயின என்பதை பிரதமரிடம் கேளுங்கள் என்கிறார்.
அவர் சொல்ல வருவதெல்லாம் ம.இ.கா.உங்களுக்குத் தேவை இல்லை. இந்தியர் சம்பந்தப்பட்ட கேள்விகள் அனைத்தும் பிரதமரிடம் தான் கேட்க வேண்டும் என்பது தான் அவர் தரப்பு நியாயம்.
அது தமிழ்ப்பள்ளிகளின் இரு மொழிக்கொள்கை ஆகட்டும், "பள்ளியை எங்கே காணோம்" என்கிற பிரச்சனையாகட்டும், "எப்போது பள்ளியைக் கட்டப்போகிறீர்கள்" என்பதாகட்டும் , நாடற்றவர்கள் பிரச்சனை ஆகட்டும் - கேள்விகளைப் பிரதமரிடம் திருப்புங்கள். இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமே பிரதமர் தான் என்பது நமக்குப் புரிகிறது.
டாக்டர் மகாதிர் காலத்தில் இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு எப்படி துன் சாமிவேலு பொறுப்பில்லையோ அதே போல இப்போதுள்ள அதே இந்தியர் பிரச்சனைகளுக்கு சுப்ரா பொறுப்பில்லை என்னும் வாதத்தை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்!
மகாதிர் அப்படி என்ன செய்து விட்டார் என்னும் கேள்வி எழும்போது இப்போது நஜிப் அப்படி என்ன செய்துவிட்டார் என்னும் கேள்வி எழுத்தான் செய்யும்!
ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொண்டோம். ம.இ.கா. இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரதமர் தான் இந்தியர்களின் பிரச்சனைகளைக் கையாளுகிறார்! ம.இ.கா. அல்ல!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment