ஏன் டாக்டர் மகாதிர்? இது தான் இப்போதைய ஆயிரம் பொற்காசுகளுக்கான கேள்வி!
அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பல்வேறு தரப்புக்களிலிருந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவரிடம் வாங்கித் தின்றவர்களின் தரப்பிலிருந்து தான் அதிகம் வருகின்றன!
மக்கள் தரப்பிலிருந்து பார்த்தால் அவருக்கு அதிகம் பேர் ஆதரவு கரம் நீட்டுகிறார்கள். ஏன்? நாட்டிலுள்ள பிரச்சனைகள் தான்.
1) கிடு கிடு விலைவாசிகளின் ஏற்றம். விலைவாசிகளின் ஏற்றம் சமாளிக்க முடியாத அளவுக்கு போய்க் கொண்டிருக்கிறது. ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் தள்ளாடுகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாத நிலை. "பிரிம்" காசெல்லாம் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ கிடைக்கலாம். போதாது! மீன்கள் விலையோ சொல்ல முடியாத விலை! பிள்ளைகளின் கல்வி ஏறக்குறைய வணிகமாக மாறிவிட்டது! வேலை செய்பவர்கள் எல்லாம் அரசு ஊழியர்கள் அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது!
2) வேலையில்லாத் திண்டாட்டம் என்பது மிகப்பெரிய பிரச்சனை.சாதாரண ஊழியர்களிலிருந்து பெரிய பதவி வகித்தவர்கள் கூட இப்போது வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கான விண்ணப்பங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்! பட்டதாரிகள் பலருக்கு வேலை இல்லை. இன்னொரு புறம் வேலையிருந்தால் தகுதி இல்லை! தகுதியற்ற மாணவர்களைக் கல்லுரிகள் மானாவாரியாக வெளியாக்கிக் கொண்டிருக்கின்றன!
3) வெளிநாட்டினர் - சொல்ல முடியாத அளவுக்கு வெளிநாட்டினர் நாட்டுக்குள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களெல்லாம் நல்ல நிலையில் இருக்கிறார்கள். நாட்டுக்குள் வியாபாரம் செய்கிறார்கள்; கடை வைத்திருக்கிறார்கள்; பிள்ளைக்குட்டிகளோடு மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். உள்ளூர்காரனுக்கு வியாராம் செய்யவோ, உரிமம் பெறவோ படாதபாடு பாட வேண்டியுள்ளது! அந்நியரின் ஆதிக்கம். அதிகம். அரசாங்கம் மிகவும் தாராளமாக அவர்களிடம் நடந்து கொள்ளுகிறது.
இதெல்லாம் ஒரு சில பிரச்சைனைகள் மலேசியர்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சனைகள்.
எப்படியோ மனிதன் சாப்பிட வேண்டும். அவனுக்கு வேலை வேண்டும். அவன் பிள்ளைகள் படிக்க வேண்டும். இவைகள் அனைத்தும் மலேசியர்களின் தேவைகள்.
அவைகள் டாக்டர் மகாதிர் காலத்தில் கிடைத்தன. சாப்பிட முடிந்தது. வேலை கிடைத்தது. பிள்ளைகள் படிக்க முடிந்தது.
இது தான் ஆயிரம் பொற்காசுகளுக்கான பதில்!
No comments:
Post a Comment