Saturday 7 April 2018

'"ராக்கெட்" இல்லாத தேர்தல்...!


பதினான்காவது பொதுத் தேர்தல் வெகு சீக்கிரத்தில் எதிர்பார்க்கலாம். அடுத்த அறுபது நாள்களுக்குள் தேர்தல் நடைபெற வேண்டும். மாநில ச்ட்டமன்றங்களைக்  கலைத்த பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்பதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.

ஒரு முக்கிய செய்தி.  இந்தத் தேர்தல் ஜனநாயக செயல் கட்சியின் "ராக்கெட்" இல்லாத தேர்தல். ராக்கெட் சின்னம் நமக்குப் பிரபலம். 1969 - ம் ஆண்டிலிருந்து ராக்கெட் சின்னத்தை ஒவ்வொரு தேர்தலிலும் நாம் பார்க்கிறோம்.

ராக்கெட் என்றதும் கர்பால் சிங் நினைவுக்கு வருகிறார். தேவன் நாயர், டாக்டர் சென் மான் ஹின், பட்டு, டேவிட் போன்றோர் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.  ஜ.செ.க. எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அன்றிலிருந்தே அதன் வேகம் குறையவில்லை. அதன் வீரியம் குறைந்தபாடில்லை. அதே சமயத்தில் சிங்கப்பூரின் ஆளுங்கட்சியான மக்கள் செயல் கட்சியும் ஞாபத்திற்கு வருகிறது.  சிங்கப்பூரை செதுக்கிய சிற்பியான  லீ குவான் யு வும் ஞாபகத்திற்கு வருகிறார். ராஜரத்தினமும் ஞாபகத்திற்கு  வருகிறார்.  இவர்களெல்லாம் இந்த "ராக்கெட்" டோடு தொடர்புள்ளவர்கள்.

இவ்வளவு சரித்திரப் பின்னணியைக் கொண்ட ஜனநாயக செயல்  கட்சி இந்த முறை ராக்கெட் சின்னம் இல்லாமல் போட்டியிடுகிறது.  ஒரே  காரணம் தான். எதிர்கட்சிகள் அனைத்தும் டாக்டர் மகாதிர் தலைமையில் ஒன்று சேர்ந்து ஆளுங்கட்சியை எதிர்க்கின்றன.

கோட்டையைப் பிடிக்க வேண்டு மென்றால் ஒரு கொடி (சின்னம்) தான் வேண்டும் என்பது எதிர்கட்சிகளின் கணிப்பு. டாக்டர் மகாதிர் தலைமையில் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். டாக்டர் மகாதிரின் தலைமை என்னும் போது அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. 22 ஆண்டுகள் அரசாங்கதை வழி நடத்தியவர். இப்போது அவர் நடப்பு அரசாங்கத்தின் எதிரியாக விளங்குகிறார்.

எதிர்கட்சிகள் ஒரே சின்னத்தைக்  கொண்டிருந்தால் மட்டுமே ஆளுங்கட்சியை வீழ்த்த முடியும் என்னும் ஒரே கரணத்தால் ராக்கெட் சின்னத்தை இந்தத் தேர்தலில் 'ஓய்வு' எடுக்க வைத்திருக்கிறார்கள்! அது தற்காலிக ஓய்வு தான்!  ராக்கெட்டை நாம் பிரித்தாலும் சீனர்களோடு அது கலந்துவிட்ட ஒன்று! அவ்வளவு எளிதில் அவர்களிடமிருந்து அதனைப் பிரித்து விட முடியாது!

இது ராக்கெட் இல்லாத தேர்தலாக இருக்கலாம். ஆனால் அது காலி பாக்கெட் அல்ல!

No comments:

Post a Comment