Friday 19 August 2022

யாழ்ப்பாணத்திலிருந்து ...... (2)

 

கல்வி கற்ற தமிழர்களாக இருந்தால் அவர்கள் எந்த அளவுக்கு அல்லது எத்தனை குறுகிய காலத்தில் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு மலேசிய யாழ்ப்பாணத் தமிழர்கள் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனார்.

அப்போது வாய்ப்புக்கள் நிறையவே இருந்தன. அதனை அவர்கள் திறமையாகப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் கற்ற கல்வி அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது.

இன்று தமிழர்கள் தங்கள் பிள்ளைகளைப் 'படி! படி!' என்று வற்புறுத்துகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் தான். கல்வியை வைத்தே மிக உயர்ந்த இடத்திற்குத் தங்களை உயர்த்திக் கொண்டவர்கள். சரியான சான்றாக மக்களிடையே அவர்கள் விளங்குகிறார்கள்.

தமிழினம் கல்வியை வைத்துத்தான் முன்னேற முடியும்  என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களிடம் உண்டு. அவர்களுடைய பிள்ளைகள் கல்வியில் பிந்தங்குகிறவர்களாக இருந்தால் அவர்களை அவர்கள் விடுவதில்லை. அவர்கள் முறையான கல்வி கற்கும்வரை பெற்றோர்களின் பங்குக்  குறைவதுமில்லை. தகப்பன் இல்லையென்றாலும் தாய் பிள்ளைகளின் கல்வியை எப்பாடுப் பட்டாவது அவர்களின் கல்வி முடியும்வரை துணை நிற்பார்.

ஆனால் நம் தமிழ் மக்களிடையே இது போன்ற தியாகங்கள் குறைவு. தந்தை இறந்து போனால் தாயாரால் அந்தக் குடும்பத்தை நடத்த முடிவதில்லை. பிள்ளைகளை வேலைக்கு அனுப்பியே ஆகவேண்டும்  என்கிற ஒரே கருத்தைத் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லை. ஒரு வேளை தாய் படித்தவராக இருந்தால் பிள்ளைகள் தப்பித்தார்கள்.

யாழ்ப்பாணத் தமிழர்கள் பெண்களின் கல்விக்கு  முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதற்கும் ஒரு காரணம் உண்டு. வரதட்சணை என்பது அவர்களிடையே உள்ள பெருங்கொடுமை.  பெண்களுக்குக் கல்வி இருந்தால் அவர்கள் விரும்பியவர்களைத் திருமணம் செய்து கொள்வது எளிதாக இருக்கும். வரதட்சணை என்பதை தவிர்த்து விடலாம்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கடைசி காலம்வரை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. அவர் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பெண் எடுக்க வேண்டுமென்றால் அவர் அளவுக்கு அந்த பெண் வீட்டார் பணக்காரராக இருக்க வேண்டும். ஆனால் அவர் அளவு பணக்காரர் யாரும் இல்லை. அதனால் அவர் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.

ஒன்றை இங்குக் குறிப்பிட வேண்டும். என்ன தான் அவர்கள் படித்தவர்களாக இருந்தாலும் திருமணம் என்று வரும் போது  வரதட்சணை என்பதை அவர்களால் கைவிட முடிவதில்லை. அவர்கள் அளவுக்கு ஈடாக இருக்க வேண்டும்.  அதனால் பெரிய குடும்பங்களிலிருந்து வரும் பெண்கள் காதல் திருமணங்களையே விரும்புகின்றனர்.

அது அந்த சமூகத்தின் பலவீனமா என்று நம்மால் சொல்ல முடியவில்லை. எல்லா சமூகத்தைப் போல அவர்களிடம் பலமும் உண்டு பலவீனமும் உண்டு.

இன்னும் வரும்...

No comments:

Post a Comment