Thursday 25 August 2022

12 இலட்சம் சுற்றுப்பயணிகளா!

 

சீன நாட்டிலிருந்து வந்த சுற்றுப்பயணிகளில் சுமார் 12 இலட்சம் பேர் இன்னும் நாட்டிற்குள் இருக்கின்றனர் என்பதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் வியப்பு ஏதும்  ஏற்படவில்லை!

பொதுவாகவே அரசாங்கத்தில் பணி புரிபவர்களைப் பற்றி மக்களிடையே ஒரு கருத்து உண்டு. 'சோம்பேறிகள்! வேலை செய்ய லாயக்கற்றவர்கள்!!' என்று யாரைக்  கேட்டாலும் கூறுவதுண்டு. ஒரு சாரார் 'வேலை தெரிந்தால் தானே செய்வதற்கு!' என்று சொல்லுவதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது!

எல்லாவற்றையும் விட அக்கறையின்மை என்பது தான் அவர்களிடம் உள்ள ஒரு பிரச்சனை.

குடிநுழைவுத் துறை தான் இந்த எண்ணிக்கையைக் கூறுகிறது. அதாவது நாட்டுக்குள் வந்தவர்களில் சுமார் 12 இலட்சம் பேர் இன்னும் சீனா திரும்பவில்லை என்பது அவர்களின் கணக்கு. இந்த எண்ணிக்கை சரியானது அல்ல என்கிறார் உள்துறை அமைச்சர்.   "இப்போது நாங்கள் சரிபார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் பணி தொடங்கிவிட்டது" என்கிறார் உள்துறை அமைச்சர்!

இங்குள்ள பிரச்சனை என்னவென்றால் யாருக்கும் எந்த பொறுப்புணர்ச்சியும் இல்லை என்பது தான் உள்துறை அமைச்சர் தருகின்ற பதிலில் நமக்குத் தெரிய வருகின்றது.  இந்த பிரச்சனை வெளியே வராவிட்டால் இந்த சரிபார்த்தல், பணி தொடங்கிவிட்டது போன்ற பதிலே உள்துறை அமைச்சரிடமிருந்து வந்திருக்காது. அதுமட்டும் அல்ல இப்படி ஒரு பிரச்சனை உண்டு என்பதே உள்துறை அமைச்சுக்குத் தெரிந்திருக்காது.

வெளி நாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளை நாம் வரவேற்கிறோம். இது எல்லா நாடுகளிலும் உள்ள ஒரு நடைமுறை. காரணம் சுற்றுப்பயணிகள் மூலம் நாட்டுக்கு வருமானம் வருகிறது. எந்த ஒரு கஷ்டமும் இல்லாத வருமானம். அதை எல்லா நாடுகளும் போட்டிப் போட்டுக் கொண்டு வரவேற்கின்றன. ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் அவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிவிட வேண்டும். 

அவர்கள் திரும்பிவிட்டார்களா என்பதை உறுதிப்படுத்த நடைமுறைகள் உள்ளன. அது எல்லாக் காலங்களிலும்  உண்டு. புதிதாக ஒன்றுமில்லை. வேண்டியதெல்லாம் அந்த நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

இப்போது கேள்வி எல்லாம் அந்த நடைமுறைகள் பின்பற்றப் படுகின்றனவா என்பது தான்.  இப்போது  நிரந்தரமான அரசாங்கம் இல்லை என்பதால் எல்லாம் தாறுமாறாக நடக்கின்றனவா என்கிற ஐயமும் நமக்குண்டு.  அப்படியெல்லாம் நடப்பதற்கு வழியில்லை. அரசாங்கம் நிரந்தரமோ இல்லையோ அரசாங்கப் பணியாளர்களுக்கு அவர்களது கடமைகள் உள்ளன. அவைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும். இதைத் தான் நாம் சொல்ல முடியும்.

எப்படியிருந்தாலும் 12 இலட்சம்  பேர் என்றால் தலை கிறுகிறுக்கிறது!

No comments:

Post a Comment