கடைசிப் பகுதி -
ஒரு காலகட்டத்தில் அதிசயம் ஒன்று நடந்தது. அது ஏன் என்று அப்போது எனக்குப் புரியவில்லை.
தாங்கள் இலங்கையர்கள் என்று கூறிவந்த அவர்கள் தீடீரென தங்களைத் தமிழர்கள் என்று மாற்றிக் கொண்டார்கள்! எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் அவ்வப்போது என்னிடம் உதவிக்கு வருவார். அவர் இலங்கைத் தமிழர். கொஞ்சம் வாய்க்கொழுப்பு அதிகம். பேச்சு வாக்கில் 'நாம் தமிழர்' என்கிற பாணியில் அவர் பேசியது எனக்குத் தூக்கி வாரிப்போட்டது! 'இதென்ன புதுசா இருக்கே, இவருக்கு என்ன ஆச்சு?' என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இன்னொரு ஆசிரியர் நண்பர். அவர் மனைவி நம் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரும் தீடீரென வேறு மாதிரி மாறிப் போனார். 'தமிழர், தமிழர்' என்று பேச ஆரம்பித்துவிட்டார்! நான் முன்பு சொன்னது போல எனக்கு அவர்களுடைய அரசியல் தெரியாது. நமக்குத் தமிழ் நாடு அரசியல் ஏதோ கொஞ்சம் தெரியும்.
பின்னர் பத்திரிக்கைகளைப் படிக்கும் போது தான் அவர்களுடைய அரசியல் எனக்குப் புரிய ஆரம்பித்தது. இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், வன்முறைகள் எல்லாம் சேர்ந்து இங்கும் அவர்களைக் கொஞ்சம் மாற்றிவிட்டது. 'இவர்களுக்குத் தேவை தான்' என்று மனதிற்குப் பட்டதே தவிர அங்குள்ளவர்கள் மீது அனுதாபம் ஏற்படவில்லை. ஆனால் பின்னர் பிரச்சனைகள் புரிய ஆரம்பித்தன. கருத்துகளும் மாறிவிட்டன.
ஆனால் இங்குள்ளவர்கள் மீதான வன்மம் மாறிவிட்டதாகச் சொல்ல முடியாது. அவர்களும் அப்படியே தான் இருக்கிறார்கள். இவர்களும் அப்படியே தான் இருக்கிறார்கள். மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனாலும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கணியன் பூங்குன்றானார் சொல்லிவிட்டுப் போனதை வழக்கம் போல நாம் ஏற்றுக்கொண்டு, நாம் மாறிவிட்டோம்.
இந்தக் கட்டுரை எழுதும் போது எந்தக் குறிப்பையும் நான் தயார் செய்யவில்லை. அவ்வப்போது மனதில் ஏற்பட்ட ஒரு சில விஷயங்களை வைத்து நான் எழுதினேன். இதனை ஒரு மலேசிய இந்தியத் தமிழனின் கருத்து என்பது மட்டும் தான். பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் செய்யவில்லை. அதற்கு அவசியமுமில்லை.
"யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்தவர்கள்" என்கிற புத்தகத்தை எழுதிய எழூத்தாளர் பல ஆராய்ச்சிகளோடும், ஆய்வுகளோடும் அந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். கடினமான உழைப்பைக் கொடுத்திருக்கிறார். அவர் சார்ந்த சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
அதனை நாம் பாராட்டுவோம். தமிழன் எங்கிருந்தாலும் அவன் தமிழன் தானே!
No comments:
Post a Comment