Tuesday 30 August 2022

இலஞ்சத்தை விரட்டியடிப்போம்!


 நமது நாட்டில் இப்போது இலஞ்சம் என்பது தான் மலேசியர்களிடையே  அதிகம் பேசப்படுகிற ஒரு  விஷயமாகத் தெரிகிறது!

கடந்த சில ஆண்டுகளாகவே முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவரது மனைவி ரோஸ்மா மன்சூர் இவர்களைச் சுற்றிச்சுற்றித் தான் இலஞ்சம் என்கிற விஷயமே  அதிகம் பேசப்பட்டது. அதற்கு முன்னர் இலஞ்சம் இல்லை என்று யாரும் சொல்ல வரவில்லை.

முன்பு இலஞ்சம் என்றால் உரிமம் இல்லாமல் கார் ஓட்டுவது, மோட்டார் சைக்கள் ஓட்டுவது, வேகத்தோடு ஓட்டுவது - இப்படி இவர்களைப் பற்றித் தான்  இலஞ்சம்  அதிகமாகப் பேசப்படும். போலீஸ்காரர்களுக்கு ஏதாவது பணத்தைக் கொடுத்து அதை சரிபண்ண வேண்டும் என்கிற நிலை. நமது நாட்டில் இலஞ்சம் என்பதின் தொடக்கம் இப்படித்தான் இருந்தது.

இலஞ்சம் அதிகம் உலவிய காலகட்டம் என்றால் அது டாக்டர் மகாதிர் பிரதமராக இருந்த காலகட்டம் தான். அவர் எப்போதும் வித்தியாசமாகவே சிந்திப்பவர்.  சீனர்களைப்போல் மலாய்க்காரர்களும் பணக்காரர்களாக ஆக வேண்டும் என்கிற எண்ணம் உடையவர். அது தான் இலஞ்சத்தின் ஆரம்பம் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்போது தான் எல்லாத் துறைகளிலும் இலஞ்சம் வாங்குகின்ற பழக்கத்தின் ஆரம்பம்!

ஆனால் நஜிப் பிரதமராக இருந்த காலத்தில் தான் அனைத்தும் கட்டுமீறிப் போனது என்பது தான் சோகம். அவர் பிரதமர் என்பதைவிட அவரது மனைவி ரோஸ்மா தான் நாட்டை ஆளுகின்ற பிரதமர் என்று பேசப்பட்டது! ரோஸ்மாவை மீறி, அரசாங்கத் துறையில்,  யாரும் செயல்பட முடியாது என்று பலவாறு பேசப்பட்டது! நஜிப் எப்படி அப்படி ஒரு கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டார் என்று இன்றும் புரியவில்லை.

ரோஸ்மா பல தனியார் நிறுவனங்களையும் விட்டுவைக்கவில்லை என்பதாகப் பேசப்பட்டது. ஏன், நமது "பாபாஸ்" நிறுவனத்தைக் கூட  வாங்குவதாக  ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறப்பட்டது.

இலஞ்சம்,  இந்த இருவரைச் சுற்றி மட்டுமே அல்ல. பெரும்பாலான அம்னோ தலைவர்கள், ம.இ.கா. தலைவர்கள் - இப்படிப் பலர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகினர். இன்னும் பல வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதில் பெரும்பாலும் அம்னோ தலைகள் தான்! இந்த. நஜிப் ரோஸ்மா, வழக்கே இத்தனை ஆண்டுகள் நீண்டுக்கொண்டே போனதால் மற்ற வழக்குகள் எல்லாம் முக்கியத்துவம் பெறவில்லை.  ஆனால் இனி  ஒன்று ஒன்றாக வெளிச்சத்துக்கு வரும் என நம்பலாம்.

இலஞ்சம் என்பது விஷம். அது முற்றிலுமாக துடைத்து ஒழிக்கப்பட வேண்டும். இலஞ்சம் வாங்குவது பல விஷயங்களுக்குத்  தடைகளாக இருக்கின்றன. 

இலஞ்சமற்ற நாடாக மலேசிய விளங்க வேண்டும்! அதற்காக அத்தனை பேரும் சேர்ந்து கைகோப்போம்! இலஞ்சத்தை நம் மத்தியிலிருந்து விரட்டியடிப்போம்!

No comments:

Post a Comment