Sunday 21 August 2022

யாழ்ப்பாணத்திலிருந்து.. (4)

 


பொதுவாக  மலேசிய இந்தியத் தமிழர்களுக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்குமான உறவு முறைகள் எப்படி?

ஆரம்ப முதலே சரியான முறையில் அமையவில்லை என்பது தான் யதார்த்தம். இந்தியத் தமிழர்கள் தோட்டப்புறங்களில் அடிமை வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.  யாழ்ப்பாணத் தமிழர்கள், அது தோட்டப்புறமாக இருந்தாலும், உத்தியோகம் பார்த்தவர்கள்.

இருவருக்குமே வாழ்க்கை முறையில் பெருத்த வித்தியாசம். அதாவது எஜமானன் - அடிமை போன்ற ஒரு பார்வை இருவருக்குமே இருந்தது. தோட்டப்புறங்களில் வாழ்ந்த தமிழர்கள் அவர்களுக்குக் கூலிகள். இவர்களுக்கு அவர்கள் எஜமானர்கள். 

இவர்கள் பேசிய தமிழ் அவர்களுக்குக் கூலிக்காரன் மொழி. அதனால் தமிழையும் வெறுத்தார்கள், தமிழனையும் வெறுத்தார்கள். ஆரம்ப காலங்களில் தமிழ்ப்பள்ளிகள் அமைத்து அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தமிழ் படித்தார்கள். அதே பள்ளிகளில் கூலிக்காரன் வீட்டுப் பிள்ளையும் படிக்கிறான் என்கிற நிலை வந்த போது அவர்கள் அமைத்த பள்ளிகளை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டார்கள். தங்கள் மொழியையும் புறக்கணித்து விட்டார்கள்! கூலிக்காரன் மொழியை நமது பிள்ளைகள் படிப்பதாவது என்கிற நிலைக்கு வந்து விட்டார்கள். அதனால் இப்போது அவர்கள் தமிழே வேண்டாம் என்று தமிழையே ஒதுக்கிவிட்டார்கள்.

ஆரம்பகாலந்தொட்டு இந்தியத் தமிழர்கள் இவர்களைக் குறிப்பதற்கு 'பனங்கொட்டை' என்கிற சொல்லைப் பயன்படுத்தினார்கள். இன்றும் அது தொடர்கிறது. ஆனால் அதன் பொருள் எனக்குப் புரியவில்லை. யாழ்ப்பாணத்தைப் பற்றியான சொற்ப அறிவு மட்டுமே எனக்குண்டு.

யாழ்ப்பாணத் தமிழர்கள் படித்தவர்கள் கல்வியே இவர்களுக்குப் போதையாகிப் போனதோ என்று நான் நினைப்பதுண்டு. கல்வி என்பது மனிதநேயத்தைப் போதிக்க வேண்டும். ஆனால் அவர்களிடம் மனிதநேயம் இல்லை. இந்தியத் தமிழர்கள் என்றாலே அவர்களை மனிதனாகக் கூட மதிப்பதில்லை. ஏதோ அடிமை என்கிற எண்ணம் இப்போதும் அவர்களிடம் உண்டு. ஆனால் இப்போது  இந்தியத் தமிழர்கள் அவர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை! அது தேவைப்படவும் இல்லை! இரு பக்கமும் காதல் திருமணங்களும் நடக்கின்றன. கல்வி அவர்களை ஒன்று சேர்க்கிறது.

இளம் வயதில் அடிக்கடி ஒரு கேள்வி என்னுள் எழுவதுண்டு. இவர்கள் இந்த அளவுக்கு வன்மம் நிறைந்தவர்களாக இருக்கிறார்களே அவர்களின் இலங்கை நாட்டில் அந்த சிங்களவர்களோடு எப்படி இவர்களால் சேர்ந்து வாழ முடிகிறது என்கிற எண்ணம் வருவதுண்டு.   அப்போது எனக்கு அந்நாட்டின் சரித்திரம், பூகோளம், அரசியல் என்று  எதுவும் அறியாத போது அப்படி நான் நினைத்தேன்.

எனது பள்ளி காலத்தில் மாணவர்கள் கணக்கெடுப்பு  எடுக்கும் போது அவர்கள் இந்தியர் பட்டியலில் வரமாட்டார்கள். தங்களை சிலோனீஸ் என்று தான் அழைத்துக் கொள்வார்கள். அது தான் சரி. அப்போது அது எனக்கு விளங்கவில்லை.

எஜமானனுக்கு ஓர் அடிமை இருந்தால் அவன் எப்படி அந்த அடிமையை நடத்துவானோ அப்படித்தான் அவர்கள் இந்தியத் தமிழர்களை நடத்தினார்கள். சீனர்களிடமோ, மலாய் மக்களிடமோ அவர்களால்  ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் அதிகாரத்தை அப்பாவித் தமிழர்களிடம் தான் காட்ட முடிந்தது.

இன்னும் வரும்

No comments:

Post a Comment