சமீபத்தில் நெகிரி செம்பிலான் ம.இ.கா. பேராளர் மாநாட்டில் ம.இ.கா. தேசியத் தலைவர், டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மாநிலத்தில் இன்னும் ஒரு கூடுதல் தொகுதி கோரவுள்ளதாகக் கூறியிருந்தார். அநேகமாக அவர் சட்டமன்றத் தொகுதியைத்தான் குறிவைக்கிறார் என்று சொல்லலாம். கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்று ஒதுக்கிவிட முடியாது.
இங்கு அதுபற்றி நான் பேசப்போவதில்லை. போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதி எனக்கு மிகவும் பரிச்சையமான தொகுதி. பழைய நினைவுகளைக் கொஞ்சம் ஞாபகப்படுத்துகிறேன்.
எனக்குத் தெரிந்து போர்ட்டிக்சன் தொகுதி தொன்றுதொட்டு ம.இ.கா. வின் தொகுதி தான். அதன் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டத்தோ மகிமா சிங். தொடர்ந்து அவர் வெற்றி பெற்று வந்திருக்கிறார். டத்தோ பத்மநாபன் அந்த தொகுதிக்கு வந்த பிறகு மகிமா சிங் விடைபெற்றுக் கொண்டார்.
நான் 1970-ஆண்டு அங்கு வேலை மாற்றலாகிப் போனேன். அந்த காலகட்டத்தில் மகிமா சிங் அவர்களைப்பற்றி பரவலாகப் பேசப்பட்டது. அன்று அவர் இந்தியர்களைப்பற்றி என்ன சொன்னாரோ அதனை அப்படியோ ம.இ.கா. தலைவர்கள் இன்றுவரை பின்பற்றுகின்றனர்! அவர் சொன்ன பொன்மொழி: 'இந்தியர்களுக்குக் கள் வாங்கிக் கொடுத்தால் போதும் ஓட்டுப் போடுவார்கள்!' என்பது தான்.
இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவர் சொன்னது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது! இப்போது கள் கடைகள் இல்லை! அதற்கென்ன மாற்றுவழிகளா இல்லை? சென்ற தேர்தலில் பூக்கூடைகள் கொடுத்தார்களாம்! அதாவது பால்டின், சாடின், ஆட்டிறைச்சி, அரிசி, பருப்பு - இப்படி சில மிக மிக அத்தியாவசிய தேவைகளைக் கொடுத்ததாக செய்திகள் வெளியாயின! இது போன்ற பம்மலாட்டம் எல்லாம் சீன, மலாய் வாக்காளர்களிடம் செல்லுபடியாகாது என்பது ம.இ.கா.வினர்க்கே தேரியும்.
சென்ற தேர்தலில் ம.இ.கா. தோற்றுப்போனது! அதன் பின்னர் எந்த சத்தமும் அவர்கள் பக்கமிருந்து வரவில்லை! இப்போது தான் வெளியே வந்திருக்கிறார்கள்! இப்போதும் அதே பாணியை அவர்கள் தேர்ந்தெடுத்து, ஒரு வேளை அவர்கள் வெற்றிபெற்றால், அதன் பின்னர் அவர்களைத் தொகுதி பக்கம் எதிர்பார்க்க முடியாது! காரணம் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துத் தான் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாம் அவர்களைக் குறை சொல்ல முடியாது!
இங்கு நான் போர்ட்டிக்சன் தொகுதிபற்றி மட்டுமே பேசுகிறேன், டத்தோ மகிமா சிங் பெரும் செல்வந்தர். நிறைய பஞ்சாபிய இளைஞர்களுக்கு உதவியிருக்கிறார். ஆனால் ஏனோ தமிழர்களைக் குடிகாரராகி விட்டுப் போய்விட்டார். நல்லது செய்ய யாருக்கும் அக்கறை இல்லை. கெடுதல் செய்ய எத்தனை ஆண்டுகளானாலும் காத்துக் கிடக்கிறார்கள்!
நான் சொல்லுவது எல்லாம் குறுக்கு வழி பயன் தராது என்பது மட்டும் தான்!
No comments:
Post a Comment